நற்பண்புகளை கற்றுத்தரும் இனிய மார்க்கம் இஸ்லாம்


நற்பண்புகளை கற்றுத்தரும் இனிய மார்க்கம் இஸ்லாம்
x

உலக மக்களுக்கு சாந்தியும், சமாதானத்தையும் கற்றுத்தரும் மார்க்கமாக இஸ்லாம் திகழ்கிறது.

மனித சமுதாயத்திற்கு நற்பண்புகளை கற்றுத்தரும் இஸ்லாமிய மார்க்கத்தின் சிறப்புகள் குறித்து தங்களது தோழர்களிடமும், தங்களை சந்திக்க வருபவர்களிடம் கண்மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அடிக்கடி எடுத்துரைப்பதுண்டு.

'பிறரிடம் சொல்லாலும், செயலாலும் அழகிய நற்பண்புகளை பொழிய வேண்டும். நாவின் மூலம் பிறருக்கு நோவினை செய்பவன் முஸ்லிமில்லை' என்பது நபிகளார் அடிக்கடி தங்களது தோழர்களிடம் கூறும் நற்செய்தியாகும்.

அதுபோல பொறுமை குறித்தும் நபிகளார் அடிக்கடி வலியுறுத்தி கூறி உள்ளார்கள். இதுபற்றி நபிகளார் கூறி இருப்பதாவது:

பொறுமை என்றால் மூன்று நிலைகளில் இருக்க வேண்டும். அதில் முதலாவது இறைவனை வணங்குவதில் என்ன சிரமங்கள் இருப்பினும் அதை செய்து முடிக்க வேண்டும். வேலைப்பளு, சோம்பேறித்தனம் போன்றவற்றால் பொறுமை இழந்து இறை வணக்கத்தை விட்டுவிடக் கூடாது.

"நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும் (இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்", என்பது திருக்குர்ஆன் (2:153) வசனமாகும்.

அடுத்தது, பாவச் செயல்களில் பொறுமை காட்ட வேண்டும். அதாவது, எவ்வளவு தான் மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடியதாக இருந்தாலும், அது பாவமான காரியம் என்றால், அதை செய்யாமல் பொறுமை காக்க வேண்டும். பொறுமையிழந்து அதை செய்து விட்டால், கெட்ட பெயர் ஏற்பட்டுவிடும். பின்னர் அந்த அவப்பெயரை நீக்குவது கஷ்டமாகி விடும். நல்லவராக வேண்டும் என்றால் கடினமான உழைப்பு தேவை. ஆனால், தீயவனாக வேண்டும் என்றால் சிறு தவறு செய்தால் போதும். எனவே பாவங்களைச் செய்யாமல் பொறுமை காக்க வேண்டும்.

"பாவம் செய்யும் ஒவ்வோர் ஆத்மாவும் தனக்கே, கேட்டைத் தேடிக்கொள்கிறது; ஓர் ஆத்மாவின் பாவச்சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது" என்று திருக்குர்ஆன் (6:164) எச்சரிக்கின்றது.

மூன்றாவதாக, மனிதர்கள் தங்களுக்கு சோதனை ஏற்படும் காலங்களில் பொறுமை காக்க வேண்டும். நம் வாழ்வில் எத்தனை கஷ்டம் வந்தாலும், 'என்னைப் படைத்தவன் என்னை எப்படி நடத்த வேண்டும் என்று எண்ணி இருக்கிறானோ அப்படியே நடக்கும்' என்ற உறுதியான எண்ணம் வர வேண்டும். அப்போதுதான் சோதனையிலும் சாதனை படைக்க முடியும்.

இதுகுறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகின்றது:

"பகலின் (காலை, மாலை ஆகிய) இருமுனைகளிலும், இரவின் பகுதியிலும் நீங்கள் தொழுகையை நிலைப்படுத்துவீராக - நிச்சயமாக நற்செயல்கள், தீச்செயல்களைப் போக்கிவிடும் - (இறைவனை) நினைவு கூருவோருக்கு இது நல்லுபதேசமாக இருக்கும்" (திருக்குர்ஆன் 11:114).

"நபியே! எந்நிலையிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பீராக. நிச்சயமாக அல்லாஹ் அழகிய செயல்கள் செய்வோரின் கூலியை வீணாக்கி விடமாட்டான்". (திருக்குர்ஆன் 11:115).

"இறையச்சத்துடன் யார் நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் சுவனபதிகளிலே புகுத்துவான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டே இருக்கும்; அங்கே பொன்னாலான கடகங்களிலிருந்தும், முத்திலிருந்தும் ஆபரணங்கள் அணிவிக்கப்படுவார்கள்; அங்கு அவர்களுடைய ஆடைகளும் பட்டாக இருக்கும்" (திருக்குர்ஆன் 22:23).

இம்மையிலும் மறுமையிலும் ஒருமனிதன் உயர்ந்த நிலையை பெற வேண்டும் என்றால் அதற்கு உதவும் நற்பண்புகள் எவை? என்ன? என்பதை தெரிந்து கொண்டு அதன்படி நடக்க வேண்டும். அந்த நல்வழியில் நாம் நடந்தால் இறைவனின் திருப்பொருத்தத்தை பெறமுடியும்.


Next Story