பவானி சங்கமேஸ்வரர் கோவிலில்63 நாயன்மார்கள் திருவீதி உலா


பவானி சங்கமேஸ்வரர் கோவிலில்63 நாயன்மார்கள் திருவீதி உலா
x

பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் 63 நாயன்மார்கள் திருவீதி உலா நடந்தது.

ஈரோடு

பவானி

பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் 63 நாயன்மார்கள் திருவீதி உலா நடந்தது.

63 நாயன்மார்கள்

பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 26-ந்தேதி ஈரோடு ஆதீனம் பாலாஜி சிவன் குருக்கள் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் சங்கமேஸ்வரர் உடனமர் வேதநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது. 27-ந் தேதி ஆதிகேசவப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவிக்கு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து தினமும் இரவு உற்சவமூர்த்திகள் சேஷ வாகனத்தில் திருவீதி உலா வந்தனர்

28-ந் தேதியும், நேற்று முன்தினமும் சாமிகளுக்கு அபிஷேக, ஆராதனையும், திருவீதி உலாவும் நடந்தது. நேற்று காலை ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், பெருமாள் கருட வாகனத்தில் புறப்பாடும் நடைபெற்றது. இதில் 63 நாயன்மார்கள், அப்பர், சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகர், திருமுறை ஆசிரியர்கள், சந்தான குறவர்கள், சேக்கிழார் உள்பட 96 பேரின் ஐம்பொன் சிலைகளுக்கு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது.

வீதி உலா

அதைத்தொடர்ந்து இரவு 8 மணி அளவில் 63 நாயன்மார்களின் சிலைகளை ஒவ்வொன்றையும் ஒவ்வொரு சப்பரத்தில் வைத்தனர். அதன்பின்னர் அந்த 63 சப்பரங்களையும் தோளில் வைத்துக்கொண்டு சிவனடியார்கள் திருவீதி உலா வந்தனர். சங்கமேஸ்வரர் கோவிலில் இருந்து பூக்கடை வீதி, வி.என்.சி. கார்னர் வழியாக சென்ற வீதி உலா மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) சாமிகளுக்கு அபிஷேக, ஆராதனையும் மாலை சாமி புறப்பாடும், நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை ஆதிகேசவ பெருமாள் மற்றும் சீதேவி, பூதேவி திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு உற்சவமூர்த்திகள் தேரில் ஏற்றப்பட்டு திருவீதி உலா நடைபெற உள்ளது.

திருக்கல்யாணம்

4-ந் தேதி காலை வேதநாயகி அம்மன் உடனமர் சங்கமேஸ்வருக்கு திருக்கல்யாண உற்சவமும், தேர் ஊர்வலமும் அன்று மாலை மகா அபிஷேகமும் நடைபெற உள்ளது. 5-ந் தேதி காலை அபிஷேக, ஆராதனையும், பரிவேட்டை நிகழ்ச்சியும் சாமி புறப்பாடு மற்றும் தீர்த்த வாரியும் நடைபெற உள்ளது. தொடர்ந்து 7-ந் தேதி சாமிகளுக்கு அபிஷேக ஆராதனையும் நடக்கிறது. அதன்பின்னர் நடக்கும் மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவடைகிறது.


Related Tags :
Next Story