சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து


சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து
x
தினத்தந்தி 5 May 2024 2:42 AM IST (Updated: 5 May 2024 2:44 AM IST)
t-max-icont-min-icon

பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருவனந்தபுரம்,

சபரிமலையில் கடந்த மண்டல, மகர விளக்கு சீசனில் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மட்டுமின்றி உடனடி தரிசன முன்பதிவின் அடிப்படையிலும் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இதனால் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல் ஏற்பட்டு சிறியவர் முதல் பெரியவர் வரை மிகுந்த சிரமத்துக்கு உள்ளானார்கள். மேலும் பக்தர்கள் 15 மணி நேரம் வரை நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்ய நேர்ந்தது.

கூட்ட நெரிசலில் பக்தர்கள் மயங்கி விழுந்த சம்பவமும் நிகழ்ந்தது. பல பக்தர்கள் சாமி தரிசனம் செய்யாமலேயே திரும்பி சென்றனர். இந்த சம்பவங்கள் கேரள அரசுக்கும், திருவிதாங்கூர் தேவஸ்தானத்துக்கும் மிகப்பெரிய அவப்பெயரை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கேரள ஐகோர்ட்டும் கண்டனம் தெரிவித்தது. இந்தநிலையில் நேற்று திருவனந்தபுரத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் உயர் மட்ட ஆலோசனை கூட்டம் தலைவர் பிரசாந்த் தலைமையில் நடந்தது.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து தேவஸ்தான தலைவர் பிரசாந்த் கூறியதாவது:-

சபரிமலையில் கடந்த மண்டல, மகர விளக்கு சீசனில் பக்தர்களின் கூட்ட நெரிசல் காரணமாக நிகழ்ந்த சம்பவங்களை கருத்தில் கொண்டு, இனி வரும் சீசன் காலங்களில் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story