இங்கிலாந்தில் அமைந்துள்ள இந்து ஆலயங்கள்
இந்து சமய வழிபாட்டைக் கொண்டவர்கள், உலகம் முழுவதும் பரந்து வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் வழிபாட்டிற்கு, அந்தந்த நாடுகள் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்திருக்கின்றன. அந்த வகையில் உலகின் முக்கியமான நாடுகளில் ஒன்றாக விளங்கும் இங்கிலாந்தில் இருக்கும் சில இந்து ஆலயங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
முருகன் கோவில்
52 அடி கொண்ட கோபுரம் இந்த ஆலயத்தின் நுழைவு வாசலாக அமைந்திருக்கிறது. பளபளப்பான இந்திய கிரானைட் ஓடுகளால் தரை பதிக்கப்பட்டுள்ளது. பழங்கள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தெய்வங்கள், அந்த தெய்வங்களைச் சுற்றி மென்மையாக விழும் ஒளிவிளக்கு கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கோவிலில் முருகப்பெருமான் பிரதான தெய்வமாக, கிரானைட் சன்னிதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இவரது வலது பக்கத்தில் சிவபெருமானும், இடது பக்கத்தில் கணபதியும் வீற்றிருக்கிறார்கள்.
மேனர் பார்க் என்ற இடத்தில் உள்ள இந்த ஆலயத்தில் சிக்கலான பல தெய்வ வடிவமைப்புகள், இந்திய பராம்பரிய கல்வெட்டு கலைஞர்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட கருப்பு கிரானைட் கற்களால் இந்த ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது. இங்கு மும்மூர்த்திகளான பிரம்மா, சிவன், மகாவிஷ்ணு ஆகியோரின் மூன்று முகங்களும், முருகப்பெருமானின் திருமுகத்தோடு ஒருமைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்து சமய கோட்பாடுகளின்படி, இந்திய கட்டிடக்கலை நிபுணர் முத்தையா ஸ்தபதி மற்றும் தலைமை பூசாரி நாகநாதசிவம் குருக்கள் ஆகியோரால் உருவாக்கப்பட்டிருக்கிறது, இந்த ஆலயம்.
சித்தி விநாயகர் கோவில்
விநாயகருக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஆலயம் இது. இது 2011-ம் ஆண்டு திறக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தில் விநாயகா் தவிர, முருகப்பெருமான், துர்க்கை, பைரவர், நவக்கிரகங்களுக்கும் சன்னிதிகள் உள்ளன. ஜார்ஜ் எலியட் சாலையில் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் தினமும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. விநாயகப் பெருமானின் மீது மிகுந்த அன்பு கொண்ட உள்ளூர் பக்தர்களால் இந்தக் கோவில் நிறுவப்பட்டது. கோவிலின் வருடாந்திர திருவிழா (தேவஸ்தானம்) ஒவ்வொரு ஆண்டும் கொடியேற்றத்துடன் தொடங்கி, 10 நாட்கள் தொடர்ந்து நடத்தப்படுகிறது. இந்த வருடாந்திர நிகழ்வின் சிறப்பம்சம் தேர் திருவிழா ஆகும். விநாயகப்பெருமான் அழகாக அலங்கரிக்கப்பட்ட தேரில், இப்பகுதியில் உள்ள தெருக்களில் பக்தர்களால் இழுக்கப்பட்டு வலம் வருகிறார். கோவில் தேவஸ்தானத்தின் ஒரு பிரிவான இந்து கலைக் கல்லூரி, வழக்கமான கலை மற்றும் மொழி வகுப்புகளை நடத்துகிறது. அவர்கள் பல்வேறு சமூக கலாசார நிகழ்வுகளை நடத்துகிறார்கள் மற்றும் அனைத்து சமூகங்களையும் ஈர்க்கிறார்கள்.
வெங்கடேஸ்வரா ஆலயம்
பர்மிங்காம் நகரின் வடமேற்கில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள திருப்பதி வெங்கடேஸ்வரா கோவில் வடிவமைப்பின் ஆதாரமாக இந்தக் கோவில் எழுப்பப்பட்டுள்ளது. 2006-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்த கோவில் பொதுமக்களின் வழிபாட்டிற்காக திறக்கப்பட்டது. இந்த ஆலயத்தின் முக்கிய தெய்வமாக மகாவிஷ்ணு, 'வெங்கடேஸ்வரா' என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். வெங்கடேஸ்வராவின் மனைவி பத்மாவதி தாயாருக்கும் இங்கு சன்னிதி இருக்கிறது. அனுமன், சிவன், கார்த்திகேயா, கணேஷ், ஐயப்பன் மற்றும் நவக்கிரகங்களுக்கும் இங்கு சன்னிதி உள்ளது.
இக்கோவில் பாலாஜி கலாசாரம் மற்றும் கல்விக்கான பள்ளியை இயக்குகிறது. இது இசை, வேதங்கள் (பண்டைய இந்து வேதங்கள்) மற்றும் பிற பாடங்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆன்மிக மற்றும் கலாசார அடிப்படையிலான கல்வியை வழங்குகிறது. கோவிலில் சமுதாயக் கூடமும் உள்ளது. இணக்கமான வாழ்க்கைத் துணைவர்களைக் கண்டுபிடிப்பதில் மக்களுக்கு உதவுவதன் மூலம் இலவச திருமண உதவியையும் கோவில் வழங்குகிறது.
சுவாமி நாராயண் மந்திர்
இங்கிலாந்தின் பழமையான ஆலயங்களில் 'சுவாமி நாராயண் மந்திர்' மிகவும் முக்கியமானது. இது இங்கிலாந்தின் நீஸ்டன் நகரில் அமைந்துள்ளது. இது பாரம்பரிய நுட்பங்கள் மற்றும் பொருட்களை முழுமையாகப் பயன்படுத்தி கட்டப்பட்டது. மதச்சார்பற்ற கட்டமைப்புகளுக்கு மாறாக, ஐரோப்பாவின் முதல் இந்து கல் கோவில் இதுவாகும். இது 1995-ல் பிரமுக் சுவாமி மகாராஜாவால் நிறுவப்பட்டது. அக் ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா (BAPS) அமைப்பின் ஒரு அங்கமாகவும் இந்த ஆலயம் திகழ்கிறது. கோவில் வளாகத்தில் அலுவலகங்கள், புத்தகக் கடை, உடற்பயிற்சி கூடம் மற்றும் 'இந்து மதத்தைப் புரிந்துகொள்வது' என்ற பெயரிடப்பட்ட ஒரு கலாசார மையம் ஆகியவையும் உள்ளன.
இவ்வாலய கட்டுமானப் பணிகள் 1992-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தொடங்கப்பட்டது. இந்த கோவிலின் அடித்தளத்திற்காக 4 ஆயிரத்து 500 டன் காங்கிரீட் கலவை ஊற்றப்பட்டு, அடித்தளம் அமைக்கப்பட்டது. இக்கோவில் 92 வயதான இந்திய சாது, பிரமுக் சுவாமியால் கட்டப்பட்டது. 2,000 டன் இத்தாலிய பளிங்கு மற்றும் 2,828 டன் பல்கேரிய சுண்ணாம்புக் கற்கள் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தக் கோவில் சிற்பங்கள், 1,526 சிற்பிகளைக் கொண்ட குழுவினரால் செதுக்கப்பட்டிருக்கிறது.
லட்சுமி நாராயண் கோவில்
1950, 60-களில் பெரும்பாலான இந்துக்கள் பஞ்சாப், குஜராத் போன்ற பகுதிகளில் இருந்து இங்கிலாந்துக்குச் சென்றனர். ஆரம்ப காலத்தில் வறுமையின் பிடியில் பல மணி நேரம் உழைத்த அவர்கள், ஒரு கட்டத்தில் தங்களின் சமூக, கலாசார மற்றும் மத நோக்கங்களுக்காக ஒன்றுகூடுவதற்கு ஒரு இடம் தேவைப்பட்டது. இதையடுத்து 1968-ம் ஆண்டு பிராட்போர்டின் இந்து கலாசார சங்கத்தை நிறுவினர். பின்னர் அங்கேேய ஒரு மாடி வீட்டில் தற்காலிக கோவிலை அமைத்தனர். பின்னர் அவர்கள் இந்து சமய உறுப்பினர்களின் வீடுகளில் ஞாயிற்றுக்கிழமை கீர்த்தனையை நடத்தி, பெரிய இடத்திற்கான நிதியை திரட்டினார்கள். 1974-ம் ஆண்டு ஆகஸ்டு 7-ந் தேதி, பிராட்போர்டின் முதல் இந்து வழிபாட்டுத் தலமாக, லட்சுமி நாராயணர் கோவில் எழுப்பப்பட்டது.
சனாதன் இந்து மந்திர்
ஸ்ரீ சனாதன் இந்து மந்திர் என்பது லண்டனில் உள்ள இரண்டு இந்து கோவில்களைக் கொண்டு செயல்படுகிறது. லெய்டன்ஸ்டோனில் உள்ள கோவில், 'நாத்ஜி மந்திர்' என்று அழைக்கப்படுகிறது. 1980-ம் ஆண்டு ஜூன் மாதம் அமைக்கப்பட்ட இந்த ஆலயத்தில், ராமர், அனுமன், ஷிவ் பரிவார், அம்பா மாதாஜி, ஜலராம் பாபா ஆகியோர் அருள்கின்றனர்.
இதற்குள்ளேயே வெம்பிலி ஆலயம் உள்ளது. 2010-ம் ஆண்டு பக்தர்களின் தரிசனத்திற்கு திறக்கப்பட்ட இந்த கோவிலை, கட்டி முடிக்க 14 ஆண்டுகள் ஆகியுள்ளது. இந்த ஆலயம் முற்றிலும் இறக்குமதி செய்யப்பட்ட இந்திய சுண்ணாம்புக் கல்லால் ஆனது. 2.4 ஏக்கரில் அமைந்த பெரிய ஆலயம் இதுவாகும். பல சிற்பங்கள் இந்தியாவிலேயே செய்துகொண்டுவரப்பட்டுள்ளது. மொத்தம் 41 தெய்வ சிற்பங்கள் இந்த ஆலயத்தில் உள்ளது. கோவில் 66 அடி உயரத்தில் உள்ளது. இந்த ஆலயத்தில் அன்னை தெரசா மற்றும் சீக்கிய குருநானக் உட்பட பல்வேறு மதங்களைச் சேர்ந்த, நன்கு அறியப்பட்ட மத பிரமுகர்கள் மற்றும் ஆன்மிக பிரமுகர்களின் சிற்பங்கள் சித்திரிக்கப்பட்டுள்ளன.
பக்திவேந்தாந்த மேனர்
'பக்திவேதாந்த மேனர்' என்றழைக்கப்படும் கவுடியா வைஷ்ணவக் கோவில், ஆல்டன்ஹாம் என்ற பகுதியில் அமைந்துள்ளது. 'ஹரே கிருஷ்ணா இயக்கம்' என்று அழைக்கப்படும் சர்வதேச கிருஷ்ண பக்தி சங்கம் (ISKCON), இந்த ஆலயத்தை நிர்வகித்து வருகிறது. முன்பு 'பிக்கோட்ஸ் மேனர்' என்று அழைக்கப்பட்ட இந்த மாளிகை, பிப்ரவரி 1973-ல் முன்னாள் பீட்டில் ஜார்ஜ் ஹாரிசனால், ஹரே கிருஷ்ணா சமூகத்திற்கு வழங்கப்பட்டது. மத்திய லண்டனில் உள்ள ராதா கிருஷ்ணா கோவிலில் பெருகி வரும் பக்தர்களுக்கு இடமளிக்க முடியாத காரணத்தால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. நன்கொடைக்குப் பிறகு அருகில் இருந்த வீடுகளை வாங்கி, இந்த ஆலயம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த ஆலயத்திற்கு 17 ஏக்கர் நிலமும் உள்ளது. இந்த ஆலயத்தில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களின் போது, இங்கு சுமார் 60 ஆயிரம் பேர் வரை தங்க முடியும்.