ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா;பூச்சாட்டுதலுடன் இன்று தொடங்குகிறது


ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா;பூச்சாட்டுதலுடன் இன்று தொடங்குகிறது
x

ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது.

ஈரோடு

ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது.

பெரிய மாரியம்மன்

ஈரோடு மாநகர் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலிலும், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் ஆகிய வகையறா கோவில்களிலும் ஆண்டுதோறும் குண்டம் தேர்த்திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 9 மணிக்கு பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது.

வருகிற 25-ந் தேதி இரவு 8.30 மணிக்கு பட்டாளம்மன் அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து 10 மணிக்கு கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் 3 கம்பங்களுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பூசாரிகள் தங்களது தோளில் சுமந்தப்படி ஊர்வலமாக கொண்டு வருவார்கள். பின்னர் பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் ஆகிய கோவில்களில் கம்பங்கள் நடப்படுகிறது. அன்று முதல் தினமும் கம்பத்துக்கு பெண்கள் புனிதநீர் ஊற்றி அம்மனை வழிபடுவது வழக்கம்.

குண்டம் விழா

வருகிற 29-ந் தேதி இரவு 10.30 மணிக்கு கிராம சாந்தி பூஜை நடைபெறுகிறது. 30-ந் தேதி மாலை 5 மணிக்கு கொடியேற்றப்படுகிறது. அடுத்த மாதம் (ஏப்ரல்) 4-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் விழா நடக்கிறது. அன்று இரவு 8 மணிக்கு மாவிளக்கு பூஜையும், கரகம் எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

5-ந் தேதி காலை 9.30 மணிக்கு பொங்கல் விழா நடைபெறுகிறது. அன்றைய தினம் சின்ன மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடக்கிறது. இந்த கோவிலில் இருந்து புறப்படும் தேர் பல்வேறு வீதிகளில் பக்தர்களின் தரிசனத்துக்காக நிறுத்தப்படும். 6-ந் தேதி இரவு 9.30 மணிக்கு பெரிய மாரியம்மன் மலர் பல்லக்கில் எழுந்தருளுகிறார். தொடர்ந்து அம்மனின் திருவீதி உலா நடைபெறுகிறது.

மஞ்சள் நீராட்டு விழா

7-ந் தேதி மாலை 4 மணிக்கு சின்ன மாரியம்மன் கோவிலுக்கு தேர் நிலை வந்தடையும். இரவு 8 மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மன், 9.30 மணிக்கு சின்ன மாரியம்மன் மலர் பல்லக்குகளில் எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.

விழாவின் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சியான கம்பம் பிடுங்கும் விழாவும், மஞ்சள் நீராட்டு விழாவும் 8-ந் தேதி மதியம் 3 மணிக்கு நடைபெறுகிறது. அதன்பின்னர் 9-ந் தேதி நடைபெறும் மறு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. இந்த விழாவையொட்டி கோவில் பகுதியில் 37 தற்காலிக கடைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அங்கு போலீசார், தீயணைப்பு படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.


Related Tags :
Next Story