ஆன்மாவை வலுப்படுத்தும் நல்ல வார்த்தைகள்...
சமூகத்தில் நிலவுகின்ற கொடுமைக்கு எதிராகப் பேசுகிறவன் உண்மையிலேயே சமூக அக்கறை உடையவனாக இருப்பான்.
ஒருவன் தீயவனாக இருந்தால் அவனிடமிருந்து நல்ல வார்த்தைகள் வருவதில்லை. இதயம் முழுவதும் குப்பையைச் சேகரித்து விட்டு, வாயில் நறுமணம் கமழவேண்டுமென நினைத்தால் முடியாது. அப்படியே செயற்கைத் தனமாய் வாசனை பூசிக் கொண்டாலும் அது சற்று நேரத்தில் பல்லிளித்துவிடும். நறுமணம் வேண்டுமெனில் நாம் செய்ய வேண்டியது வாசனையைப் பூசிக் கொள்வதல்ல, மனதில் உள்ள குப்பையை அகற்றி விடுவது.
கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள், 'சட்டியில் இருக்கிறது தான் அகப்பையில் வரும்'. ஒரு மனிதன் தனது உள்ளத்தில் இருப்பதைத் தான் பேச முடியும். சமூகத்தில் நிலவுகின்ற கொடுமைக்கு எதிராகப் பேசுகிறவன் உண்மையிலேயே சமூக அக்கறை உடையவனாக இருப்பான். மத உணர்வுகளைத் தூண்டும்படி பேசிக்கொண்டே இருப்பவனின் உள்ளம் சுயநலத்தினால் நிரம்பியிருக்கும்.
இன்றைக்கு சமூக வலைத்தளங்களில் நிலவுகின்ற உரையாடல்கள் பலருடைய உள்ளத்தை டிஜிட்டல் திரையில் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. உள்ளம் அமைதியாய், அன்பாய் இருந்தால் வார்த்தைகளும் அன்பாய், அழகாய் இருக்கும். அதற்கு நாம் செய்ய வேண்டியது அழகிய வார்த்தைகளைத் தேடுவதல்ல, அழகிய இதயத்தை நாடுவது.
மதவாதிகள் வழக்கம் போல இயேசுவை நம்பாமல் அவரது செயல்களை விமர்சித்துக் கொண்டிருந்தார்கள்.
"விரியன் பாம்புக் குட்டிகளே, தீயோர்களாகிய நீங்கள் எவ்வாறு நல்லவை பேச முடியும்? உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்" என்றார் இயேசு.
விரியன் பாம்புக் குட்டிகள் எப்போதுமே விரியன் பாம்புக் குட்டிகளாகத் தான் இருக்கும். அவை மண்புழுக்களாய் மாறி மண்ணுக்கு வளம் சேர்ப்பதில்லை. மாறாக விஷப் பற்களோடு அலைந்து மனிதரைக் காயப்படுத்தும், கொன்றுவிடும்.
ஏமிகார்மைக்கேல் ஒரு முறை சொன்னார், ''நமது இதயம் இனிப்பான பானம் நிறைந்த பாத்திரமாய் இருந்தால், அதிலிருந்து சிந்துபவை எல்லாமே இனிப்பானவையாய் தான் இருக்கும்'' என்று.
இயேசு, நமது இதயங்களை சரிசெய்யச் சொல்கிறார். அதில் கர்வம் இருக்க வேண்டாம், அதில் அகந்தை இருக்க வேண்டாம், அதில் வன்மம் இருக்க வேண்டாம் என்கிறார். நமது வார்த்தைகள் நம்மைத் தீர்ப்பிடும். தீர்ப்பு நாளில் நாம் குற்றவாளிகளா, இல்லையா என்பதை நாம் பேசிய வார்த்தைகளே முடிவு செய்யும்.
நாம் எதை உண்கிறோம் என்பது பிரச்சினையில்லை. ஆனால் உள் ளிருந்து வருகின்ற வார்த்தை களைக் கவனிக்க வேண்டும். உடலை வலுவாக்க உணவுகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவதைப் போல, ஆன்மாவை வலுவாக்க நல்ல வார்த்தைகளையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.
நமது வார்த்தைகள், நாம் யார் என்பதை அடையாளப்படுத்துகின்றன.
நமது வார்த்தைகள், நமது இதயத்தின் தன்மையை வெளிப்படுத்துகின்றன.
வார்த்தைகளை அன்பில் வார்த்தெடுப்போம், பிறருக்கு ஆதரவாய், ஆறுதலாய், உற்சாகமாய், நற்செய்தியாய் நமது வார்த்தைகளைப் பயன்படுத்துவோம்.