இறைவன் வழங்கும் அருட்கொடைகள்


இறைவன் வழங்கும் அருட்கொடைகள்
x

இல்லாதவர்களுக்கு இருப்பவர்கள் அள்ளிக்கொடுப்பதே கொடைத்தன்மை ஆகும். உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே கொடுக்கும் தன்மை மனிதனுக்கு வளர்ந்து வருகிறது. இதற்கு ஆரம்பம் ஏக இறைவன் தான்.

இறைவன் மனிதர்களுக்கு தனது அருட்கொடைகளை வழங்கினான். இதன் மூலம் மனிதனின் வாழ்வு செழித்தது. மனித வாழ்க்கைக்கு மிக அத்தியாவசியமான தேவைகளாக உணவு, உடை, ஆரோக்கியம், வாழ்க்கைக்கு தேவையான வசதிகள், போதும் என்ற மனம் ஆகியவை கருதப்படுகிறது. மிக குறைவான வசதி வாய்ப்புகளிலேயே மனிதன் நிம்மதியாக வாழ்ந்துவிட முடியும். ஆனால் ஆசையால் தூண்டப்பட்ட மனிதன் பணத்தை தேடியும், உடல் சுகத்தை தேடியும், பதவி, புகழைத்தேடியும் அலைகின்றான். இந்த தேடலில் இறைவனை மறந்து, அவன் வகுத்த வழியில் இருந்து தவறி நடக்கத் தொடங்குகின்றான். இதனால் நிம்மதி இழந்து விடுகின்றான்.

இறைவன் நமக்கு அளித்த அருட்கொடைகளே போதும் என்ற மனதுடன் வாழ்ந்தால் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். இறைவன் வகுத்த வழியிலும், அவனது திருத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் காட்டிய வழியிலும் நடந்து வந்தால் போதும், எத்தனை சோதனைகள், வேதனைகள் வந்தாலும் அதை தாங்கி நிற்கும் வலிமையையும், நிம்மதியையும் இறைவன் நமக்குத்தருவான். இறைவன் நமக்கு வழங்கியுள்ள அருட்கொடைகள் குறித்து திருக்குர்ஆன் வசனங்களும், நபி மொழிகளும் ஏராளம் உள்ளன. இறைவன் தரும் அருட்கொடைகளை நாம் பரிபூரணமாக பெற என்ன செய்ய வேண்டும் என்பதும் திருக்குர் ஆனில் இவ்வாறு சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.

"ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்வீர்களானால் அவன் உங்களுக்கு (நன்மை தீமையைப்) பிரித்தறிந்து நடக்கக்கூடிய நேர்வழி காட்டுவான்; இன்னும் உங்களை விட்டும் உங்கள் பாவங்களைப் போக்கி உங்களை மன்னிப்பான்; ஏனெனில் அல்லாஹ் மகத்தான அருட்கொடையுடையவன்". (திருக்குர்ஆன் 8:29).

முதல்கட்டமாக அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்தால் நமக்கு கிடைக்கும் முக்கியமான அருட்கொடை- நன்மை, தீமைகளை பிரித்தறிந்து கொள்ளும் ஞானம், அதன் மூலம் கிடைக்கும் நேர்வழி ஆகும். அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொண்டால் தான் மனிதனின் செயல்கள் நன்மையை நோக்கி அமையும். அப்போது தான் இறைவனின் அருட்

கொடையான பாவ மன்னிப்பும் சொர்க்கமும் அவனுக்கு கிடைக்கும். இதையே இந்த திருக்குர்ஆன் வசனங்கள் இவ்வாறு குறிப்பிடுகிறது:

"உண்மையில் எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு (அதாவது, இவ்வேதத்தில் எடுத்துரைக்கப்பட்ட சத்தியங்களை ஏற்றுக்கொண்டு) நற் செயல்கள் புரிந்து கொண்டிருந்தார்களோ அவர்களை, அவர்களின் (ஈமான்) நம்பிக்கையின் காரணத்தால் அவர்களுடைய இறைவன் நேர்வழியில் செலுத்துவான். அருட்கொடைகள் நிறைந்த சுவனங்களில், அவர்களுக்குக் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். (திருக்குர் ஆன் 10:9).

"மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அறிவுரை உங்களிடம் திண்ணமாக வந்திருக்கிறது. இது இதயங்களில் உள்ள நோய்களைக் குணப்படுத்தக்கூடியதாகவும், தன்னை ஏற்றுக்கொள்ளக் கூடியவர்களுக்கு வழி காட்டக்கூடியதாகவும், ஓர் அருட்கொடையாகவும் திகழ்கின்றது". "(நபியே) நீர் கூறும்: "அல்லாஹ் தன்னுடைய கருணையைக் கொண்டும் அருளைக் கொண்டும் இதனை இறக்கியுள்ளான். இதனைக் குறித்து மக்கள் மகிழ்ச்சி அடையட்டும். அவர்கள் சேகரித்துக் கொண்டிருக்கும் எல்லாவற்றையும்விட இது சிறந்ததாகும்" (திருக்குர்ஆன் 10:57-58).

இன்று வாழ்வில் நாம் அனுபவித்து மகிழும் அனைத்து சுகங்களும், வசதிகளும், கருவிகளும், வாகனங்களும் இறைவன் நமக்கு அளித்த அருட்கொடைகள் தான். அந்த அருட்கொடைகள் எண்ணில் அடங்காதவை. இதற்காக நாம் இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். இறைவனின் கட்டளைகளை ஏற்று இறைவன் வகுத்த வழியில் நம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். நம்மை படைத்து பரிபாலிக்கும் ஏக இறைவன் கருணை மிகுந்தவன், நமது பாவங்களையும், தவறுகளையும் மன்னிக்கும் பொறுமை மிக்கவன். இதையே இந்த திருக்குர்ஆன் வசனங்கள் மூலம் இறைவன் நமக்கு விளக்குகின்றான்: `அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள்

எண்ணிட முயன்றால் அவற்றை உங்களால் எண்ணவே முடியாது. திண்ணமாக அல்லாஹ் பெரிதும் மன்னிப்பவனாகவும், கருணை புரிபவனாகவும் இருக்கின்றான்'. (திருக்குர்ஆன் 16:18).

"நம்பிக்கையாளர்களே! அல்லாஹ் உங்களுக்கு அளித்தவைகளில் ஆகுமான நல்லவைகளையே புசியுங்கள். நீங்கள் அல்லாஹ்வை வணங்குபவர்களாக இருந்தால், அவனுடைய அருட்கொடைகளுக்கு நீங்கள் நன்றி செலுத்தி வாருங்கள்". (திருக்குர்ஆன் 16:114). இறைவனின் அருட்கொடையான நேர் வழியில் நடந்து, நிம்மதியான வாழ்வைப் பெற வேண்டும் என்றால், முதலில் நாம் இறைவன் மீது முழு நம்பிக்கை கொள்ள வேண்டும். மனித வாழ்க்கை எவ்வாறு இருக்க வேண்டும் என்று இறைவன் காட்டியுள்ள வழியில் நமது வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் நாம் நிம்மதியான வாழ்க்கையை இம்மையிலும், மறுமையில் சொர்க்கத்தையும்

பெற முடியும்.


Next Story