முன்னேற்றம் தரும் மூன்று நரசிம்மர்கள்


முன்னேற்றம் தரும் மூன்று நரசிம்மர்கள்
x

ஒரே நாளில் தரிசிக்கக்கூடிய வகையில் ஒரே நேர்க்கோட்டில் மூன்று நரசிம்மர் ஆலயங்கள் அமைந்துள்ளன. அவை, சிங்கிரிக்குடி, பூவரசங்குப்பம், பரிக்கல் ஆகிய தலங்களாகும்.

பக்தன் பிரகலாதனுக்காக மகாவிஷ்ணு எடுத்த அவதாரம், நரசிம்மர். இவர் அவதரித்த தலமாக ஆந்திராவில் உள்ள அகோபில மடம் போற்றப்படுகிறது. நரசிம்மருக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் ஆலயங்கள் அமையப்பெற்றுள்ளன. அந்த வகையில், தமிழகத்தில் சோளிங்கர், நாமக்கல், பூவரசங்குப்பம், பரிக்கல், சிங்கிரிக்குடி, சிங்கபெருமாள்கோயில், அந்திலி, சிந்தலவாடி ஆகிய 8 தலங்களும் `அட்ட நரசிம்ம தலங்களாக' உள்ளன. அவற்றில், ஒரே நாளில் தரிசிக்கக்கூடிய வகையில் ஒரே நேர்க்கோட்டில் மூன்று நரசிம்மர் ஆலயங்கள் அமைந்துள்ளன. அவை, சிங்கிரிக்குடி, பூவரசங்குப்பம், பரிக்கல் ஆகிய தலங்களாகும். இந்த மூன்று ஆலயங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.

சிங்கிரிக்குடி

புதுச்சேரியில் இருந்து இந்த தலம் மிக அருகில் உள்ளது. எனவே ஒரே நாளில் 3 நரசிம்மரை வழிபட விரும்புபவர்கள், புதுச்சேரியில் இருப்பவர்கள் இங்கிருந்து நரசிம்மர் வழிபாட்டைத் தொடங்கலாம். சிங்கிரிக்குடியில் வீற்றிருக்கும் நரசிம்ம மூர்த்தியின் திருநாமம், 'லட்சுமி நரசிம்மர்' என்பதாகும். இங்கு இவர் உக்கிர நரசிம்மராக அருள்கிறார். தாயாரின் திருநாமம் கனகவல்லி ஆகும். திருமணத் தடையால் அவதிப்படுபவர்கள், இங்குவந்து லட்சுமி நரசிம்மருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், விரைவில் திருமணம் நடந்தேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த உக்கிர நரசிம்மரை வணங்கினால் எதிரி களின் தொல்லை நீங்கும். இந்த ஆலயம் காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும். புதுச்சேரியில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, சிங்கிரிக்குடி.

பூவரசங்குப்பம்

சிங்கிரிக்குடியில் இருந்து சுமார் 26 கிலோமீட்டர் தூரம் சென்றால் இந்த ஊரை அடையலாம். நேர்கோட்டில் உள்ள லட்சுமி நரசிம்மர் தலங்களில் நாம் 2-வதாக வழிபட வேண்டியது இது. இந்த ஆலயத்திலும் இறைவன், 'லட்சுமி நரசிம்மர்' என்ற திருநாமத்துடனேயே அருள்பாலித்து வருகிறார். தாயாரின் பெயர், அமிர்தவல்லி என்பதாகும். இந்த ஆலயத்தில் உள்ள இறைவனை வழிபாடு செய்து வந்தால், உடல்பிணி மற்றும் சகலவிதமான தோஷங்கள் நீங்கும். இந்த ஆலயம் காலை 8.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.

பரிக்கல்

பூவரசங்குப்பத்தில் இருந்து 39 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஊர் இருக்கிறது. நரசிம்மர் ஆலயத்தில் மூன்றாவதாக வழிபட வேண்டிய கோவில் இது. இந்த ஆலய இறைவனின் பெயரும், 'லட்சுமி நரசிம்மர்'தான். தாயாரின் பெயர் கனகவல்லி என்பதாகும். பதவி உயர்வு வேண்டும் என்று நினைப்பவர்கள், பதவி இழந்தவர்கள் அந்தப் பதவியை மீண்டும் பிடிப்பதற்கும் இங்கு வந்து வழிபாடு செய்யலாம். காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் இந்த ஆலயம் திறந்திருக்கும். விழுப்புரத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை செல்லும் சாலையில் விழுப்புரத்தில் இருந்து சுமார் 21 கிலோமீட்டரில் பரிக்கல் இருக்கிறது.


Next Story