கர்த்தர் நம்மோடு இருக்கிறார்....


கர்த்தர் நம்மோடு இருக்கிறார்....
x

நம்முடைய வாழ்க்கையில் எந்த சூழ்நிலையில் இருந்தாலும், யார் நமக்கு எதிராக செயல்பட்டாலும், கர்த்தருடைய கரம் நம்மோடு இருந்தால் எதுவும் நம்மை சேதப்படுத்தாது.

என்ன தான் பணம், புகழ், செல்வாக்கு என்று சிறப்பான வாழ்க்கை அமைந்தாலும் மனித வாழ்க்கை நிச்சயமற்றதாக, பயம் நிறைந்ததாகவே உள்ளது. பணியிடத்தில் சின்ன பிரச்சினை வந்துவிட்டாலோ, தொழில் சிறிய நஷ்டம் வந்தாலோ, உடல் ஆரோக்கியத்தில் லேசான பாதிப்பு வந்தாலோ மனம் பதறித்துடிக்கிறது.

அன்பானவர்களே, இந்த உலக வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைகள், பிரச்சினைகள், நோய்கள், எதிர்காலம் இவைகளை குறித்து பயப்பட்டு கலங்கி நிற்கின்றோம் என்பதுநிதர்சனமான உண்மை.

அப்படிப்பட்ட நம்மைப்பார்த்து இயேசு சொல்கிறார்: "பராக்கிரமசாலியே, அன்பு மகனே, மகளே, கர்த்தர் உன்னோடே இருக்கிறார். உனக்கு இருக்கிற இந்த பலத்தோடு போ, உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா".

எவ்வளவு ஆறுதலான வார்த்தைகள்.

பரிசுத்த வேதாகமத்தில், உள்ள நியாதிபதிகள் புத்தகத்தில் மேற்கூறிய கடவுளின் வார்த்தைகள் உள்ளது. இது குறித்த வரலாற்றை காண்போம்.

இஸ்ரவேல் மக்கள் கர்த்தரின் வார்த்தைகளை பின்பற்றாமல் பொல்லாப்பான காரியங்களைச் செய்கிறார்கள். அதனால் கர்த்தருடைய பாதுகாப்பை இழந்து விடுகிறார்கள்.

அப்போது மீதியானியர் என்ற ஜனக்கூட்டத்தினர் இஸ்ரவேல் மக்களை துன்புறுத்துகின்றார்கள். இதனால் இஸ்ரவேல் மக்கள் மலைகளிலும், குன்றுகளிலும் உள்ள குகைகளில் அடைக்கலம் புகுந்து பயந்து இருக்கின்றார்கள்.

ஒவ்வொரு முறையும் மீதியானியர் வந்து இவர்களுடைய விளைநிலங்கள், கால்நடைகள், ஆகாரங்கள் இவற்றில் ஒன்றையும் வைக்காமல் எடுத்துச்சென்று விடுவார்கள். இஸ்ரவேலர்களும் பயந்து, ஒடுங்கி, கவலையோடு, எதிர்காலத்தில் என்ன நடக்குமோ என்ற கலக்கத்தோடு இருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில்தான் கர்த்தருடைய தூதர் ஒருவர், யோவாஸ் என்பவருடைய மகனாகிய கிதியோனிடம் தரிசனமாகி, "பராக்கிரமசாலியே, கர்த்தர் உன்னோடு இருக்கிறார்" என்று கூறுகிறார்.

அப்பொழுது கிதியோன் கர்த்தருடைய தூதரைப்பார்த்து, "கர்த்தர் எங்களோடே இருந்தால் இந்த சூழ்நிலைகள் எங்களுக்கு ஏன் நேரிடுகிறது?, கர்த்தர் எங்களை கைவிட்டு மீதியானியர் கையில் எங்களை ஒப்புக்கொடுத்தாரே" என்று புலம்பி கேட்கிறார்.

அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி பார்த்து, "உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ, நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி இரட்சிப்பாய். உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா" என்றார்.

அதற்கு கிதியோன், "என் ஆண்டவரே, நான் இஸ்ரவேலை எதனால் இரட்சிப்பேன். இதோ என் குடும்பம் மிகவும் எளிமையானது, என் தகப்பன் வீட்டில் நான் எல்லோரிலும் சிறியவன்" என்றான்.

அதற்குக் கர்த்தர், "நான் உன்னோடு கூட இருப்பேன். ஒரே மனுசனை முறியடிப்பது போல் நீ மொத்த மீதியானியரையும் முறியடிப்பாய்" என்றார்.

வேதத்தில் நடந்த மேற்கூறிய சம்பவத்தில் ஒரு விஷயம் நமக்கு தெளிவாகத் தெரிகிறது. இஸ்ரவேல் என்ற மக்களை இவர்களிலும் பெரிய ஜனக்கூட்டம் உள்ள மீதியானியர் என்ற மக்கள் அடிக்கடி வந்து தாக்குகின்றார்கள். இவர்களுடைய விளைநிலங்களை சேதப்படுத்துகின்றார்கள். கால்நடைகளை பிடித்துச்செல்கிறார்கள். இந்த சூழ்நிலையில் இஸ்ரவேல் மக்கள் தங்கள் வாழ்க்கையை தினமும் பயத்தோடும், கலக்கத்தோடும், திகிலோடும், எதிர்காலம் குறித்த நம்பிக்கையின்மையோடும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இந்த மோசமான சூழ்நிலையில்தான் கர்த்தர் கிதியோன் என்ற ஒரு தனி மனிதனை தேர்ந்தெடுக்கின்றார். இந்தக் கிதியோன் மூலமாகத்தான் இஸ்ரவேல் மக்களுக்கு ஒரு மாபெரும் இரட்சிப்பை, விடுதலையை, வெற்றியைத் தருகின்றார்.

ஆம், இந்த கிதியோன் தான் மீதியானியர்களின் கையில் இருந்து இஸ்ரவேல் மக்களை விடுதலையாக்கி வெற்றி சிறக்கிறார்.

பிரியமானவர்களே, இன்றைக்கும் நாமும் நம்முடைய வாழ்க்கையில் எந்த சூழ்நிலையில் இருந்தாலும், யார் நமக்கு எதிராக செயல்பட்டாலும், கர்த்தருடைய கரம் நம்மோடு இருந்தால் எதுவும் நம்மை சேதப்படுத்தாது.

ஆகவே, நீங்கள் இருக்கும் இடங்களில் உள்ள பிரச்சினைகளைப் பார்த்து கலங்காமல், நமக்கு எதிரான சூழ்நிலைகளையே நமக்கு சாதகமாக மாற்றித்தருகின்ற இயேசுவை நோக்கி பார்ப்போம். அப்போது, அவர் உங்களைப் பார்த்து, என்னைப் பார்த்து கூறுகிற வார்த்தை இது தான்: "பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார், உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ. உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா".

இவ்வாறு அன்போடு, உரிமையோடு இன்றும் நம்மோடு பேசும் தெய்வமாக கர்த்தர் இருக்கிறார். ஆம், இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். இந்த நம்பிக்கையோடு நம் பயணத்தை தொடருவோம், ஆமென்.


Next Story