கடம்பத்தூர் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
கடம்பத்தூர் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 21-ந் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்று வரும் விழாவையொட்டி, தினந்தோறும் காலை மாலை இரு வேளையும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டு திருவீதி உலா நடைபெற்றது. மேலும் கருட வாகனம், சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த 23-ம் தேதியன்று திரவுபதி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம், 26-ந் தேதி சூது, துகில் உரிதல், அர்ஜூனன் தபசு, கர்ணன் மோட்சம், நிகழ்ச்சியும் துரியன் வீழ்ச்சி நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நேற்று மாலை தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் கடம்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். தீமிதி திருவிழாவை ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கண்டு களித்தனர். அதன் பிறகு அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.