வடமதுரை அருகே தலையில் தேங்காய் உடைத்து, சாட்டை அடி வாங்கி நேர்த்திக் கடன் செலுத்திய பக்தர்கள்...!
வடமதுரை அருகே கோவில் திருவிழாவில் தலையில் தேங்காய் உடைத்து, பூசாரியிடம் சாட்டை அடி வாங்கி பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்.
வடமதுரை,
வடமதுரை அருகே உள்ள எட்டிக்குளத்துபட்டியில் சித்தண்ணன், கசுவம்மாள், மதுரைவீரன் மற்றும் 32 பந்தி தெய்வங்களின் கோவில் திருவிழா நடைபெற்றது. நேற்று கோவில் சன்னதியில் இருந்து மின் அலங்கார ரதத்தில் சாமி புறப்பாடு நடைபெற்றது. பக்தர்கள் சேர்வையாட்டம், கரகாட்டம், வான வேடிக்கையுடன் சாமியை அழைத்து சென்றனர்.
இந்ந்லையில், இன்று காலை சாமி கங்கையிலிருந்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அதனைத்தொடர்ந்து கோவில் முன்பாக பக்தர்கள் வரிசையாக உட்கார வைக்கப்பட்டனர். இதனையடுத்து கோவில் பூசாரி கோவிந்தா கோஷம் முழங்க பக்தர்கள் தலையில் தேங்காய்களை உடைத்தார். அதன் பின்னர் பக்தர்கள் பூசாரியிடம் சாட்டையால் அடி வாங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர்.
அதனைத்தொடர்ந்து குழந்தைகளுக்கு முடி எடுத்தல், காது குத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதன் பின்னர் பெண்கள் தங்கள் பிறந்த வீட்டில் எடுத்துக் கொடுத்த கூரை புடவையை கசுவம்மாள் கோவிலில் வைத்து வழிபாடு செய்து அதனை உடுத்தினர். அதன்பின்னர் கோவில் அருகே பந்தல் அமைத்து பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து, சாட்டையால் அடி வாங்கி நேர்த்திக் கடன் செலுத்தும் வினோத வழிபாட்டு முறையை காண ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் மேற்கொண்டனர்.