திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் குறைந்தது: அறைகளில் காத்திருக்காமல் நேரடி தரிசனம்
திருப்பதி திருமலையில் நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 5 மணி நேரத்தில் தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதி:
மிக்ஜம் புயல் காரணமாக தமிழகம் மற்றும் ஆந்திராவில் பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. புயல் மழை ஓய்ந்து 5 நாட்கள் ஆகியும் மழையின் தாக்கம் நீடிக்கிறது. மக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.
இதனால் திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. பக்தர்கள் காத்திருப்பு அறைகளில் தங்க வைக்காமல் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
கடந்த ஒரு வாரமாக பக்தர்கள் கூட்டம் குறைந்ததால் திருப்பதி தேவஸ்தானத்திற்கு உண்டியல் வருவாய், தங்கும் அறை வாடகை உள்ளிட்ட இதர வருவாய்கள் குறைந்தன. ரூ.300 ஆன்லைன் சிறப்பு தரிசன டிக்கெட்டில் வந்த பக்தர்கள் 2 மணி நேரத்திலும், நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 5 மணி நேரத்திலும் தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதியில் நேற்று 54,523 பேர் தரிசனம் செய்தனர். 20,817 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.40 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.