பவானி கூடுதுறையில் புனிதநீராடிய பக்தர்கள்


பவானி கூடுதுறையில் புனிதநீராடிய பக்தர்கள்
x

வைகாசி அமாவாசையையொட்டி பவானி கூடுதுறையில் பக்தர்கள் புனிதநீராடினார்கள். மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் கூட்டம் அலைமோதியது.

ஈரோடு

வைகாசி அமாவாசையையொட்டி பவானி கூடுதுறையில் பக்தர்கள் புனிதநீராடினார்கள். மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் கூட்டம் அலைமோதியது.

பவானி கூடுதுறை

அமாவாசை நாட்களில் புனிதநதிகளில் நீராடி, முன்னோர்களுக்கு திதி கொடுப்பது இந்துக்களின் வழக்கம். குறிப்பாக ஆடி, தை, புரட்டாசி உள்ளிட்ட மகாளய அமாவாசையில் ஏராளமானோர் நதிக்கரைகளில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பார்கள். ஈரோடு மாவட்டத்தில் பவானி, காவிரி, கண்ணுக்கு புலப்படாத அமுதநதி என 3 நதிகள் பவானி கூடுதுறையில் சங்கமிப்பதால் திதி கொடுக்கவும், பல்வேறு பரிகாரங்கள் செய்யவும் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வருவார்கள்.

புனிதநீராடல்

இந்தநிலையில் நேற்று வைகாசி அமாவாசையையொட்டி ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி திருப்பூர், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் பவானி கூடுதுறைக்கு புனிதநீராட வந்திருந்தார்கள்.

காவிரி ஆற்றில் தற்போது பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் படிக்கரைகளை ஒட்டியபடி தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதன்காரணமாக பக்தர்கள் மகிழ்ச்சியுடன் புனிதநீராடினார்கள். அதன்பின்னர் சிலர் முன்னோர்களுக்கு திதி கொடுத்தார்கள். பிறகு சங்கமேஸ்வரரை தரிசனம் செய்ய சென்றார்கள்.

பண்ணாரி

சத்தியமங்கலம் அருகே உள்ள புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோவிலில் நேற்று அதிகாலை முதலே ஏராளமானோர் அம்மனை தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்தார்கள். காலை 6 மணி அளவில் கோவில் நடை திறக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

முன்னதாக பக்தர்கள் பிரசித்திபெற்ற குண்டம் அமைக்கப்படும் இடத்தில் திருவிளக்கு ஏற்றி உப்பு-மிளகு தூவி வணங்கினார்கள். அங்குள்ள திருமண்ணை எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டார்கள்.

இதேபோல் கோபி, கொடுமுடி, பெருந்துறை, அந்தியூர், சென்னிமலை, அம்மாபேட்டை, ஊஞ்சலூர் என ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் வைகாசி அமாவாசையையொட்டி சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.


Related Tags :
Next Story