திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
திருவண்ணாமலை:
பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலுக்கு வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். மேலும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கிரிவலம் சென்று கோவிலில் சாமி தரிசனம் செய்வார்கள்.
இந்த மாதத்திற்கான பவுர்ணமி வருகிற 9-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை சுமார் 6.20 மணியளவில் தொடங்கி மறுநாள் 10-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 4.30 மணியளவில் நிறைவு பெறுகின்றது.
இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் பவுர்ணமியன்று கோவிலுக்கு வர முடியாத பக்தர்களும் முன்னதாகவே இன்று கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். இதனால் நேற்று பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.