தேவ சந்தோஷம் காண வாருங்கள்...
தேவனின் இருப்பிடமான பரலோகம் மிகவும் அற்புதமானது. அந்த பரலோகம் முழுவதும் தெளிந்த பளிங்குக்கு ஒப்பான சுத்த பொன்னாக இருக்கிறது. எங்கும் தங்கத்தால் செய்யப்பட்ட சாலைகள், அதன் மதில்கள் வஜ்ஜிர கல்லால் பதிக்கப்பட்டு இருக்கிறது.
அங்கு சூரியனும் சந்திரனும் இல்லை, கல்வாரி சிலுவையில் அடிக்கப்பட்ட இயேசுவே அதற்கு விளக்கு. பரலோகத்திலே எண்ணி முடியாத வாசஸ்தலங்கள் சுத்த பொன்னால் செய்யப்பட்டு அழகாக இருக்கிறது.
"சேனைகளின் கர்த்தாவே உமது வாசஸ்தலங்கள் எவ்வளவு இன்பமானவைகள்" என்று சங்கீதம் (84:1) குறிப்பிடுகின்றது.
பரலோகம் முழுவதும், எங்கும் தேவபரிசுத்தம், எங்கும் தேவ வல்லமை, எங்கும் தேவ மகிமை, எங்கும் தேவ பிரசன்னம், எங்கும் தேவ ஒளி, எங்கும் தேவ சமாதானம், எங்கும் தேவ சந்தோஷம்.
அந்த மகிமையை, சந்தோஷத்தைப்பெற நாம் தயாராக இருக்க வேண்டும். இதற்கு உதாரணமான நிகழ்வை காண்போம்.
பரலோக ராஜ்யம் மணவாளனுக்கு எதிர்கொண்டு போக புறப்பட்ட பத்து கன்னிகைகளுக்கு ஒப்பாக இருக்கிறது. அவர்களில் ஐந்து பேர் புத்திசாலிகள், ஐந்து பேர் இதற்கு மாறுபட்டவர்கள்.
புத்திசாலிகள் தங்கள் பயணத்தின் போது தீவட்டிகளையும், அவை தொடர்ந்து எரிய தேவையான எண்ணெய்யை ஒரு பாத்திரத்தில் கொண்டு போனார்கள். மற்ற 5 பேரும் தீவட்டிகளை மட்டும் எடுத்துக்கொண்டு போனார்கள், எண்ணெய் கொண்டு போகவில்லை.
மணவாளன் இயேசு வர காலதாமதம் ஆனபோது எல்லோரும் நித்திரை மயக்கத்தில் தூங்கிவிட்டார்கள். நடு இரவில், "இதோ மணவாளன் இயேசு வருகிறார். அவருக்கு எதிர்கொண்டு போகப் புறப்படுங்கள்" என்று பரலோகத்தில் இருந்து சத்தம் கேட்டது.
எல்லோரும் எழுந்திருந்து தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினார்கள். புத்திசாலிகள் தாங்கள் கொண்டு வந்த எண்ணெய்யை பயன்படுத்தி தீவட்டிகளை ஏற்றிக்கொண்டனர்.
மற்றவர்கள் எண்ணெய் இன்றி தவித்தனர். உடன் வந்தவர்களிடம் 'உங்கள் எண்ணெய்யில் எங்களுக்கு கொஞ்சம் கொடுங்கள்' என்றார்கள்.
அதற்கு அவர்கள், "நீங்கள் விற்கிறவர்களிடத்திற்கு போய் உங்களுக்காக வாங்கிக் கொள்ளுங்கள் என்றார்கள்". (மத். 25:9)
அப்படியே அவர்கள் வாங்க போனபோது மணவாளன் வந்துவிட்டார். "ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடே கூட பரலோகம் போனார்கள், கதவு அடைக்கப்பட்டது". (மத்.25:10)
புத்தியில்லாதவர்கள், நித்திரை மயக்கத்தில் உள்ளவர்கள் என்றால், சோதனைக்கு உட்பட்டவர்கள். "நீங்கள் சோதனைக்கு உட்படாதபடி விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்". (மத்.26-41)
விசுவாசத்திலும், பரிசுத்தத்திலும், அபிஷேகத்திலும் குறைவுபட்டவர்கள் புத்தியில்லாதவர்கள்.
எண்ணெய் இல்லாதவர்கள் என்றால் பரிசுத்தமாக வாழாதவர்கள், கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தம் ஆகாதவர்கள்.
புத்திசாலிகள் யார்?, எண்ணெய் எடுத்துச்சென்றார்கள் என்றால் என்ன அர்த்தம்?- 'பரிசுத்தமாக வாழ்ந்து, ஆயத்தமாய் இரு' என்று அர்த்தம், தேவ அபிஷேகத்தில் ஆயத்தமாய் காத்திருக்கிறவர்கள் பரிசுத்த ஆவியின் மாறாத பிரசன்னத்தில் வாழ்கிறவர்கள்.
தீவட்டிகள் என்றால் - எரிந்து பிரகாசிக்கிற விளக்கு. "யோவான் ஸ்நானன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காய் இருந்தான்". (யோவா. 5-35)
தேவமனிதன் யோவான்ஸ்நானன் தேவ பிரசன்னத்தாலே, எரிந்து பிரகாசிக்கிற விளக்காக வாழ்ந்தான். நாம் தேவ பிரசன்னத்தில் வாழவேண்டும். ஜீவ வசனத்தை பிடித்துக்கொண்டு உலகத்திலே பரிசுத்தமாக வாழ்ந்து சுடர்களைப் போல பிரகாசிக்கிற நீங்கள் புத்தியுள்ளவர்கள் (பிலி 2-14).
தேவனின் மகிமையைப்பெறவும் பரலோகத்தின் சந்தோஷத்தைப்பெறவும் நம்மை நாம் தயார் படுத்திக்கொள்வோம், வாருங்கள்.