திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்


திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
x
தினத்தந்தி 29 April 2024 9:34 AM IST (Updated: 29 April 2024 3:26 PM IST)
t-max-icont-min-icon

மாட வீதிகளில் வலம் வந்த சுவாமியை, திரளான பக்தர்கள் வரவேற்று தரிசனம் செய்தனர்.

சென்னை,

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா நின்ற திருக் கோலத்தில் வேங்கட கிருஷ்ணன் என்ற திருநாமத்துடன் காட்சி தருகிறார். மேலும் தனது தேவியார் ருக்மணி பிராட்டி, மகன் பிருத் யும்னன், பேரன் அனிருத்தன், தம்பி சாத்யகி என குடும்ப சகிதமாக இக்கோவிலில் அருள் பாலிக்கிறார். குருஷேத்திரப் போரில் தன் முகத்தில் ஏற்பட்ட காயங்களும் உற்சவர் பார்த்த சாரதிபெருமாளுக்கு காணப்படுகிறது.

இக்கோவிலில் ஆண்டு தோறும் பார்த்தசாரதி பெருமாள் பிரம்மோற்சவம் சித்திரை மாதமும், இங்கு மேற்கு நோக்கி எழுந்தருளி இருக்கும் நரசிம்ம பெருமாள் பிரம்மோற்சவம் ஆனிமாதமும் விமரிசையாக நடைபெறுகிறது.

அதன்படி பார்த்த சாரதி பெருமாளுக்கான சித்திரை மாத பிரம்மோற்சவ விழா 23-ம் தேதி காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாளில் புன்னைமர வாகன வீதி உலாவும், 2-ம் நாள் விழாவில் பரமபதநாதன் திருக் கோலத்தில் சேஷ வாகன வீதி உலா மற்றும் சிம்ம வாகன வீதி உலாவும் 3-ம் நாளில் கருட சேவையும் நடைபெற்றது.

4-ம் நாளில் சூரிய பிரபை, சந்திர பிரபை, 5-ம் நாள் நாச்சியார் திருக் கோலத்தில் பல்லக்கு சேவை நடைபெற்றது. 6-ம் நாள் அதிகாலை 5.30 மணிக்கு சூர்ணா பிஷேகம் நடைபெற இரவு 8 மணிக்கு யானை வாகனத்தில் பெருமாள் வீதி உலா வந்தார். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 7-ம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது. அதிகாலை 3.30 மணிக்கு பெருமாள் திருத்தேரில் எழுந்தருளினார். காலை 7 மணி அளவில் தேரோட்டம் நடைபெற்றது.

கோவிந்தா.... கோவிந்தா... என்ற முழக்கத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து கோவிலின் நான்கு மாட வீதிகளிலும் இழுதனர். செல்லும் வழியெல்லாம் தேரின் சக்கரத்துக்கு அடியில் உப்பு வைத்து பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்தி வழிபட்டனர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேருக்கு முன்பு நெற்றியில் நாமம் இட்டுக் கொண்டு திவ்ய பிரபந்தம் பாடி சென்றனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

8-ம் நாள்திருவிழாவான 30-ந் தேதி செவ்வாய்கிழமை வெண்ணெய்த் தாழி கண்ணன் கோலத்தில் பல்லக்கு சேவை. 9-ம் நாள் திருவிழாவில் காலை 6.15 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம், அன்று இரவு 7.45 மணிக்கு கண்ணாடி பல்லக்கு சேவை நடக்கிறது. 10-ம் நாளான மே-2ந்தேதி கொடி இறக்கத்துடன் பிரம்மோற் சவ விழா நிறைவடைகிறது.


Next Story