சென்னையில் பிரம்மோற்சவம்.. பத்மாவதி தாயார் யானை வாகனத்தில் வீதி உலா
ஐந்தாம் நாள் திருவிழாவை முன்னிட்டு நேற்று யானை வாகனத்தில் பத்மாவதி தாயார் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சென்னை,
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சென்னை தியாகராயநகரில் ஜி.என்.செட்டி சாலையில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் 10 நாட்கள் நடக்கும் பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 8-ந் தேதி வரை நடக்கும் விழாவில், தினசரி காலை, இரவு வேளைகளில் பிரம்மோற்சவம் வீதி உலா நிகழ்ச்சி நடந்து வருகிறது. சேஷ வாகனம், ஹம்ச வாகனம், பெரிய சேஷ வாகனம், சிம்ம வாகனம், கல்ப விருக்ச வாகனங்களில் பத்மாவதி தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தொடர்ந்து ஊஞ்சல் உற்சவமும், வயலின் கலைஞர் கன்னியாகுமரியின் இசை நிகழ்ச்சியும் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பத்மாவதி தாயாரை தரிசித்தனர்.
5-ம் நாள் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை பல்லக்கு உற்சவமும், இரவு 7 மணிக்கு யானை வாகனத்தில் பத்மாவதி தாயார் வீதி உலா நிகழ்ச்சியும் நடந்தது. இந்த உற்சவம் கோவிலில் இருந்து புறப்பட்டு, ஜி.என்.செட்டி சாலை, வடக்கு போக் சாலை, விஜயராகவாச்சாரி சாலை, டாக்டர் நாயர் சாலை வழியே மீண்டும் கோவில் வந்தடைந்தது. சாலையின் இருபுறங்களிலும் பொதுமக்கள் தீபாராதனை காண்பித்து வழிபட்டனர்.
இன்று (திங்கட்கிழமை) கருட வாகன சேவையும், 6-ந் தேதி ரதோற்சவமும் நடக்கிறது. விழா நாட்களில் தினசரி இரவு 6 மணியில் இருந்து 7 மணி வரை இசை நிகழ்ச்சியும் நடக்கிறது.