மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
நாளை அறுபத்து மூவர் உலா நிகழ்ச்சி நடக்கிறது.
சென்னை,
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மேற்கு திசை நோக்கி அமைந்திருக்கும் சிவாலயங்களில் சிறப்பு வாய்ந்த தலமாகும். பிரசித்தி பெற்று விளங்கும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இதில் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தின் போது கோவிலின் 4 மாட வீதிகளில் உலா வரும் தேரோட்டத்தை காண லட்சக்கணக்கோர் வருவர். அந்த வகையில் கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனி பெருவிழா கடந்த 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்த கொடியேற்றத்தின் போது கற்பகாம்பாள், சண்டிகேஸ்வரர், வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமாள் அருள்பாலித்தனர். இந்த நிலையில் முக்கிய விழாவான தேரோட்டம் இன்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் வலம் வந்த போது பக்தர்கள் கபாலி.. கபாலி என்று பக்தி கோஷம் எழுப்பினார்கள்.
4 மாட வீதிகளில் வலம் வந்த தேருக்கு பக்தர்கள் மலர் தூவி வரவேற்றனர். சிவ வாத்தியம் முழங்க தேர் வலம் வந்தது. தேரில் கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.தேரோட்டத்தையொட்டி மாட வீதிகளில் பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு நீர்மோர், தண்ணீர், பானகரம், அன்னதானம் வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நாளை 63 நாயன்மார்களோடு வீதி உலா வருதல், மார்ச் 25 ஆம் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடைபெறும். 26-ம் தேதி மகேஷ்வர் தரிசனமும் மார்ச் 27ஆம் தேதி திருமுழுக்குடன் விழா நிறைவு பெறுகிறது.
விழாவின் 10 நாட்களுக்கு பகல், இரவில் வீதி உலா நடைபெறுகிறது. தேரோட்ட தினமான இன்று கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தேர்த்திருவிழா காரணமாக மயிலாப்பூர் பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.