வந்தவாசி ஜலகண்டேஸ்வரர் கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம்
மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த 2 தேர்களையும் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
வந்தவாசி,
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஶ்ரீஜலகண்டேஸ்வரர் கோவில் மற்றும் ஶ்ரீரங்கநாதப் பெருமாள் கோவில் ஆகியவற்றுக்கு 2 மரத் தேர்கள் உள்ளன. இதில், ஆண்டுதோறும் மாசி மாதம் நடைபெறும் ஶ்ரீஜலகண்டேஸ்வரர் கோவில் தேரோட்டத்தில் 2 தேர்களும், பங்குனி மாதம் நடைபெறும் ஶ்ரீரங்கநாதப் பெருமாள் கோவில் தேரோட்டத்தில் ஒரு தேரும் பவனி வரும். கடந்த 16 ஆண்டுகளுக்கு முன் இந்த இரு மரத் தேர்களும் சேதமடைந்ததால் அதன்பின்னர் தேரோட்டம் நடைபெறவில்லை.
இதையடுத்து தமிழக அரசு ஒதுக்கிய சுமார் ரூ.60 லட்சம் நிதியுடன், பொதுமக்கள் பங்களிப்பையும் சேர்த்து இரு புதிய மரத் தேர்களை செய்யும் பணி நடைபெற்று வந்தது.
இதில் ஒரு தேரின் பணிகள் முழுமை பெற்று கடந்த ஆண்டு ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் மற்றொரு தேரின் பணிகளும் நிறைவடைந்ததை அடுத்து இதற்கான வெள்ளோட்டம் கடந்த பிப். 16-ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து ஶ்ரீஜலகண்டேஸ்வரர் கோவில் சார்பில் 2 தேர்கள் பங்கேற்கும் மாசி மக பிரம்மோற்சவ தேரோட்டம் 16 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை கோவிலில் மூலவர் மற்றும் உற்சவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. பின்னர் உற்சவர் சுவாமிகள் 2 தேர்களிலும் வைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த 2 தேர்களையும் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். இதில் ஒரு தேரில் மனோன்மணி சமேத சோமாஸ்கந்தமூர்த்தியும், மற்றொரு தேரில் பராசக்தி அம்பாளும் பவனி வந்தனர்.
இரண்டு தேர்களும் வந்தவாசி பஜார் வீதி, அச்சிரப்பாக்கம் சாலை, பாலுடையார் தெரு, சன்னதி தெரு ஆகிய மாட வீதிகள் வழியாகச் சென்று தேர் நிலையை வந்தடைந்தன.