மண்டையூர் பெரிய அய்யனார் சாமி திருக்கோவில் தேரோட்டம்


மண்டையூர் பெரிய அய்யனார் சாமி திருக்கோவில் தேரோட்டம்
x

மண்டையூர் பெரிய அய்யனார் சாமி திருக்கோவில் தேரோட்டம் இன்று நடைபெற்றது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம், மண்டையூரில் பூர்ண புஷ்கலம்பிகா சமேத பெரிய அய்யனார் சாமி திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலின் ஆண்டு தேர்த் திருவிழா கடந்த 12-ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து தினந்தோறும் மண்டகப்படிதாரர்களின் அபிஷேக ஆராதனை நிகழ்ச்சியும் தொடர்ந்து சாமி வீதி உலாவும் நடைபெற்று வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது.

காலை 11 மணியளவில் வண்ண தோரணங்கள் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் பெரிய அய்யனார் உற்சவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பக்தர்கள் தேரின் முன்பு தேங்காய் பழம் உடைத்து அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர்.

பின்னர் மாலை 3.10 மணியளவில் மேளதாளம், அதிர்வெட்டுகள் முழங்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேர் மண்டையூரில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக வந்து மாலை 5.30 மணியளவில் நிலையை அடைந்தது.

விழாவில் புதுக்கோட்டை மாவட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், மண்டையூர், மாத்தூர், திருச்சி, கீரனூர், விராலிமலை மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவின் தொடர்ச்சியாக நாளை(ஞாயிற்றுக்கிழமை) மதியம் படுகளம், பாரிவேட்டை நிகழ்ச்சியும் பின்னர் சாமிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற உள்ளது.

விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக அதிகாரிகள் மற்றும் விழா கமிட்டியாளர்கள், கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story