வார்த்தைகளில் கவனம் தேவை...


வார்த்தைகளில் கவனம் தேவை...
x

அல்லாஹ்வின் ஆணைப்படி நம்முடைய ஒவ்வொரு செயலும், வார்த்தைகளும் வானவர்களால் பதிவு செய்யப்படுகிறது என்பதை இறைவசனம் உணர்த்துகிறது.

அல்லாஹ், மனிதர்களை மற்ற படைப்புகளை விட, அழகான படைப்பாகப் படைத்திருக்கிறான். நம்மை அழகாகப் படைத்ததுடன், நம்முடைய உடலில் மிகச் சிறப்பாக இயங்கக் கூடிய உறுப்புகளையும் அருட்கொடையாக வழங்கியுள்ளான்.

"நிச்சயமாக நாம் மனிதனை மிக்க அழகான அமைப்பில் படைத்திருக்கிறோம்". (திருக்குர்ஆன் 95:4) ஆகவே நம்மை அழகான அமைப்பில் படைத்ததற்கும், ஆரோக்கியமான உறுப்புகளைத் தந்ததற்கும் ஒவ்வொரு நாளும் எத்தனை முறை இறைவனுக்கு நன்றி செலுத்தினாலும் அது எதற்கும் ஈடாகாது. மிக முக்கியமாக நாவினை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் அல்லது பயன்படுத்தக் கூடாது என்பதை நாம் சிந்தையில் சிரமேற்றுச் செயல்பட வேண்டும். நாவினைப் பற்றி, அதனை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது பற்றி குர்ஆனிலும், ஹதீதுகளிலும் பதிவுகள் உண்டு. நாவினால் பாதுகாப்பு என்பது மற்றவர்களுக்கு நாவினால் தீங்கு தராமல் இருப்பது. 'இரு தாடைகளுக்கும் இடையே உள்ள உறுப்பை பாதுகாத்துக் கொள்ளுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் நவின்றுள்ளது நாவினைப் பற்றியே.

``(மனிதன்) எதைக் கூறியபோதிலும் அதனை எழுதக் காத்துக் கொண்டிருக்கும் ஒருவர் அவனிடம் இல்லாமலில்லை. (அவன் வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையும் உடனுக்குடன் பதியப்படுகிறது)". (திருக்குர்ஆன் 50:18)

அல்லாஹ்வின் ஆணைப்படி நம்முடைய ஒவ்வொரு செயலும், வார்த்தைகளும் வானவர்களால் பதிவு செய்யப்படுகிறது என்பதை இந்த இறைவசனம் உணர்த்துகிறது.

ஈடேற்றம் பெற என்ன வழி என்று இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு நபித்தோழர் கேட்டபோது, "உமது நாவைக் கட்டுப்படுத்திக் கொள்வீராக, உமது பாவங்களை நினைத்து அழுது கொண்டிருப்பீராக" என்று இயம்பினார்கள்.

ரஸூல் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு அறிவிப்பில் வருகிறது: "ஒவ்வொரு நாளும் மனிதன் காலைப்பொழுதை அடைந்தவுடன் எல்லா உறுப்புகளும் நாவிடம் இவ்வாறு வேண்டுகின்றன, 'நீ எங்களுடைய காரியங்களில் அல்லாஹ்வை அஞ்சிக்கொள். ஏனென்றால் எங்களுடைய காரியங்கள் உன்னுடன்தான் இணைந்துள்ளன. நீ நேராக இருந்தால் நாங்களும் நேராக இருப்போம். நீ வளைந்து இருந்தால் நாங்களும் வளைந்து விடுவோம்'. (அதாவது நீ சரியாக இல்லையென்றால் அதற்குரிய தண்டனையை அனுபவிக்க வேண்டும்)".

ஒரு முறை முஆது (ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் எனக்கு ஒரு அமலை சொல்லிக் கொடுங்கள், அதனை நான் செய்வதன் மூலம் என்னை சுவனத்தில் நுழைய வைப்பதற்கு காரணமாகவும், நரகத்தில் இருந்து எனக்கு பாதுகாப்பு கொடுப்பதாகவும் அந்த அமல் இருக்க வேண்டும் என்று வினவிய போது அண்ணலார் ஒவ்வொரு அமலாக சொல்லிக் கொண்டு வரும்போது, இறுதியாக, "நான் இப்போது சொல்லக் கூடிய அமல் இதுவரை சொன்ன எல்லாவற்றையும் உள்ளடக்கியது" என்று கூறி விட்டு தங்களுடைய நாவை விரல்களுக்கிடையில் பிடித்தவர்களாக, "முஆதே உம்முடைய நாவினைத் தடுத்துக் கொள்வீராக, அதாவது தீயவற்றை பேசுவதிலிருந்து உம்முடைய நாவினைப் பாதுகாத்துக் கொள்வீராக" என்பதாகக் கூறுகிறார்கள். மு ஆது (ரலி) ஆச்சரியப்பட்டவர்களாக, "அல்லாஹ்வின் தூதரே, நாங்கள் பேசக்கூடிய ஒவ்வொரு வார்த்தைக்கும் குற்றம் பிடிக்கப்படுவோமா?" என்று வினவுகிறார்கள். "மு ஆதே நீர் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அதிகமான மனிதர்களை நரகத்திற்கு முகங் குப்புறக் கொண்டு போய்த் தள்ளுவது அவர்கள் நாவுகள் சம்பாதித்ததுதான்" என்று நபி (ஸல்) அவர்கள் பதில் அளிக்கிறார்கள்.

மனித உறவுகளை சீர்குலைப்பதில் நாவின் பங்கு பற்றி சொல்லி மாளாது. குடும்பத்தில், நட்பில் பிளவுகள் பெரும்பாலும் நாவடக்கம் இன்றியும், சிந்தனையின்றியும் வார்த்தைகளைக் கொட்டுவதாலேயே ஏற்படுகிறது.

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான், "(நபியே! எனக்கு கட்டுப்பட்ட) என்னுடைய அடியார்களுக்கு நீங்கள் கூறுங்கள். அவர்கள் (எந்த மனிதருடன் பேசியபோதிலும்) எது மிக அழகியதோ அதையே கூறவும். நிச்சயமாக ஷைத்தான் அவர்களுக்கிடையில் (கெட்ட வார்த்தைகளைக் கூறும்படி செய்து) கெடுதலே செய்வான். (ஏனென்றால்) நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்கமான எதிரியாக இருக்கிறான். (ஆகவே எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்)" (திருக்குர்ஆன் 17:53)

நாவைக் கட்டுப்படுத்த நாம் பழகிக்கொள்ள வேண்டும். கோபத்திலோ, வெறுப்பிலோ இருக்கும் நிலையில், அல்லது நமக்கு பிடிக்காதவர்களிடம் பேசும்போதோ கவனமாக இருக்க வேண்டும். நாவினைக் கட்டுப்படுத்த மிகச் சிறந்த வழி மவுனம் தான். பேசாமல் இருப்பதாலும் அல்லது பேச்சைக் குறைத்தாலும் வம்புகள், பாவங்களில் இருந்து விமோசனம் கிடைக்கும்.

நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள், "நல்லதை ஏவுவது அல்லது தீமையை தடுப்பது அல்லது திக்ர் செய்வது ஆகியவற்றைத் தவிர மனிதனுடைய எல்லாப் பேச்சுகளும் நஷ்டத்தைத் தரும். தண்டிக்கப்படுவதற்கு காரணமாகும். மேலும் மறுமை நாளின் மீது எவர் ஈமான் கொண்டாரோ அவர் நல்லதையே பேசட்டும். அல்லது மவுனமாக இருக்கட்டும்".

இறைவனை நினைவு கூருதல், இறை வசனங்களை ஓதுதல், கடும் சொற்களைத் தவிர்த்து இனிய சொற்களை கூறுதல் ஆகியவற்றால் யாருக்கும் நம்மால் தீங்கு விளையாது. நாவினைக் காப்போம்! நரக விடுதலைக்கு வழி செய்வோம்! ஈருலக நன்மைகளை அடைவோம்! இன்ஷா அல்லாஹ்!


Next Story