திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவிலில் வைகாசி திருவிழாவையொட்டி தெப்பத்திருவிழா


திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவிலில் வைகாசி திருவிழாவையொட்டி தெப்பத்திருவிழா
x

திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவிலில் வைகாசி பெருந்திருவிழாவையொட்டி தெப்ப உற்சவம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

திருப்பத்தூர்,

சிவகங்கை மாவட்டம்,திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி பெருந்திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தடை காரணமாக இந்த விழா நடக்கவில்லை. இதையொட்டி இந்தாண்டு இந்த விழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து தினந்தோறும் இரவு சுவாமி அன்னம், பூதம், ரிஷபம், சிம்மம், யானை, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். 5-ம் திருநாள் அன்று சுவாமிக்கும், சிவகாமி அம்பாளுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

9-ம் திருநாளான கடந்த 11 ந் தேதி மாலை விநாயகர், சுவாமி, அம்பாள் ஆகிய 3 தேர்கள் பங்கேற்று தேரோட்டம் நடைபெற்றது. 10-ம் திருநாளான நேற்று காலை சீதளி தெப்பக்குளத்தில் அஸ்திர தேவருக்கு தீர்த்தம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இரவு 11 மணிக்கு தெப்பக்குளத்தில் திருத்தளிநாதர், சிவகாமி அம்மன், பிரியாவிடையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி தெப்ப உற்சவம் நிகழ்ச்சி நடைபெற்றது.

கடந்த 2 ஆண்டுகளாக தெப்பத்திருவிழா நடைபெறாததால் இந்தாண்டு இந்த நிகழ்ச்சியின் போது ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். மேலும் பெண்கள் தெப்பக்குளத்தின் சுவரில் தீபம் ஏற்றி வழிபாடும் செய்தனர்.


Next Story