ஆண்டிப்பட்டி அருகே கோவில் திருவிழாவில் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

ஆண்டிப்பட்டி அருகே கோவில் திருவிழாவில் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கொப்பையம்பட்டியில் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இங்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பெரிய கும்பிடு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த 3 நாட்களாக நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் காப்பு கட்டி 48 நாட்கள் விரதம் இருந்த பெண்கள் உள்பட 61 பேர் கம்பிளி பையில் தேங்காய்களை சுமந்து வந்தனர். பின்னர் பக்தர்கள் கோவில் முன்பு அமர வைக்கப்பட்டு அவர்கள் தலையில் பூசாரி தேங்காய் உடைத்தார். இதையடுத்து அன்னதானம் நடைபெற்றது. இந்த விழாவில் கொப்பையம்பட்டி கன்னியப்பபிள்ளைபட்டி, ஓடைப்பட்டி, மாலைய கவுண்டன்பட்டி, ஊத்துப்பட்டி, வடபுதுப்பட்டி ஆகிய ஊர்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த கோவிலில் பங்காளிகள் மற்றும் மாமன், மைத்துனர்கள் இணைந்து வழிபாடு நடத்துவது குறிப்பிடத்தக்கது.