தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 6 April 2024 9:22 AM IST (Updated: 6 April 2024 9:52 AM IST)
t-max-icont-min-icon

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 20-ந்தேதி நடக்கிறது.

தஞ்சாவூர்,

தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. உலக பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த பெரிய கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும்.

இந்த நிலையில் 18 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு சந்திரசேகரர், பஞ்சமூர்த்தி சுவாமிகளுடன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளினார். தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு மங்கள வாத்தியம் முழங்க கொடியேற்றம் நடந்தது.

முன்னதாக கோவிலில் பஞ்சமூர்த்திகளுக்கு கொடிமரம் முன்பு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கோவில் வளாகத்தில் பல்லக்கில் எடுத்து வந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். விழா நாட்களில் காலை, மாலை வேளைகளில் சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் புறப்பாடு நடைபெறவுள்ளது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 20-ந்தேதி நடக்கிறது.


Next Story