சென்னிமலை கைலாசநாதர்-மாரியம்மன் கோவில்களில்பக்தர்கள் ரூ.8¾ லட்சம் உண்டியல் காணிக்கை
சென்னிமலை கைலாசநாதர்-மாரியம்மன் கோவில்களில் பக்தர்கள் ரூ.8¾ லட்சம் உண்டியல் காணிக்கை செலுத்தியிருந்தனா்.
சென்னிமலை
சென்னிமலையில் இந்து சமய அறநிலையத்துக்கு சொந்தமான மாரியம்மன் கோவில் மற்றும் கைலாசநாதர் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களின் உண்டியல்களை திறந்து காணிக்கை எண்ணும் பணி நடந்தது.
சென்னிமலை கோவில் செயல் அலுவலர் ஏ.கே.சரவணன், பெருந்துறை கோவில் ஆய்வாளர் ஆர்.ரவிக்குமார் ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டது. கோவில் பணியாளர்கள், கூட்டுறவு சங்க பணியாளர்கள், மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆகியோர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் மாரியம்மன் கோவிலில் 4 லட்சத்து 35 ஆயிரத்து 964 ரூபாயும், 35 கிராம் பலமாற்று தங்கம், 197 கிராம் வெள்ளி ஆகியவையும் காணிக்கையாக செலுத்தப்பட்டு இருந்தது.
அதேபோல் சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் உள்ள உண்டியல்களும் திறந்து எண்ணப்பட்டது. இதில் 4 லட்சத்து 43 ஆயிரத்து 983 ரூபாய் மற்றும் பலமாற்று தங்கம் 13 கிராம், வெள்ளி இனங்கள் 80 கிராம் ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.