சிதம்பரத்தில் விமரிசையாக நடந்த ஆருத்ரா தரிசனம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு


சிதம்பரத்தில் விமரிசையாக நடந்த ஆருத்ரா தரிசனம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 27 Dec 2023 5:52 PM IST (Updated: 27 Dec 2023 5:58 PM IST)
t-max-icont-min-icon

சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகாபிஷேகமும், திருவாபரண அலங்காரமும், பஞ்ச மூர்த்தி வீதி உலாவும் நடைபெற்றது.

சிதம்பரம்:

உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசன விழா இன்று நடைபெற்றது. இதையொட்டி இன்று அதிகாலையில் மகா அபிஷேகம் நடைபெற்றது. 32 வகையான வாசனை திரவியங்களால் நடராஜருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின், திருவாபரண அலங்காரமும், பஞ்ச மூர்த்தி வீதி உலாவும் நடைபெற்றது.

பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து ஸ்ரீநடராஜமூர்த்தியும் ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளும் வெளியே வந்து முன்னும் பின்னும் ஆடி பக்தர்களுக்கு ஆருத்ரா தரிசன காட்சியளித்தனர். இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் பல்வேறு சிவ ஆலயங்களில் இன்று ஆருத்ரா தரிசன விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரம் மிகவும் உயர்வானது. திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி 10 நாட்கள் விழா கொண்டாடப்படுகிறது. இதற்கு `திருவாதிரை திருவிழா' என்று பெயர். இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, நடராஜப் பெருமானுக்கு ஆருத்ரா அபிஷேகம் நடைபெறும். திருவாதிரை நட்சத்திர தினத்தில் செய்யப்படும் மகா அபிஷேகத்தையும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தையும் காண்பவர்களுக்கு பாவங்கள் நீங்கி பெரும் புண்ணியம் சேரும் என்பது ஐதீகம்.


Next Story