சகல சவுபாக்கியங்களும் அருளும் 'மகாளய பட்சம்'
முன்னோர்களை வழிபாடு செய்வதற்கு ஏற்ற தினமாக புரட்டாசி மாதத்தில் வரும் ‘மகாளய பட்ச அமாவாசை’ திகழ்கிறது. அமாவாசைக்கு 15 நாட்களுக்கு முன்னதாகவே மகாளய பட்சம் தொடங்கிவிடும். ‘மகாளயம்’ என்பதற்கு ‘பெரிய கூட்டம்’ என்றும், ‘பட்சம்’ என்பதற்கு ‘பதினைந்து நாட்கள்’ என்றும் பொருள்.
மறைந்த நம் முன்னோர்கள், பித்ரு லோகத்தில் இருந்து பதினைந்து நாட்களுக்கு முன்பாகவே, நம் இல்லத்தில் கூடி தங்கியிருக்கும் காலம் 'மகாளய பட்சம்' ஆகும்.
இந்த மகாளய பட்சம் என்பது, புரட்டாசி மாத பவுர்ணமிக்கு மறுநாள் வரும் பிரதமை திதியில் இருந்து புரட்டாசி மாத அமாவாசை வரை நீடிக்கும். அமாவாசை என்பது நம் முன்னோர்களை நினைத்து திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்கும் தினமாகும்.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தில் மட்டும் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்தால் போதுமானது. ஆனால் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய பட்சத்தில், பிரதமை தொடங்கி அமாவாசை வரையான 15 நாட்களும், நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்.
அப்போது அனைத்து முன்னோர்களையும் நினைவுகூர வேண்டும். புனித நீர்நிலைகளுக்குச் சென்று நீராடி, முன்னோர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்க வேண்டும். அதோடு ஏழைகளுக்கு பசி போக்க உணவு, கல்வி கற்க சிரமப்படும் மாணவர்களுக்கு, கல்விக்கான உதவித் தொகை, வயதில் பெரியவர்களுக்கு, கற்றறிந்த அறிஞர்களுக்கு புதிய ஆடைகள் வழங்கினால், முன்னோர்கள் மகிழ்ச்சியடைந்து நமக்கு ஆசிகளை வழங்குவார்கள். மேலும் பித்ரு சாபம் இருந்தால் அது விலகி, வாழ்க்கை ஒளிமயமாகும்.
பொதுவாக ஒவ்வொரு அமாவாசை அன்றும், நாம் முன்னோர்களுக்காக செய்யும் தர்ப்பணம், எமலோகத்தின் அரசனான எமதர்மராஜனின் கைகளுக்கே சென்றடையும். அவர்தான், நம் முன்னோர்களை அழைத்து, அதை அவர்களிடம் ஒப்படைப்பார் என்கிறார்கள். ஆனால் இந்த மகாளய பட்சம் ஆரம்பிக்கும் நாள் அன்று, நம் முன்னோர்களை அவரவர் விருப்பமான இடத்திற்கு சென்று வரும்படி, எமதர்மராஜன் அனுமதிப்பதாகச் சொல்லப்படுகிறது. அதன்படியே நம் முன்னோர்கள் அனைவரும், மகாளய பட்சத்தின் 15 நாட்களும், நம் இல்லங்களில் வந்து தங்குவதாக ஐதீகம். இந்த பதினைந்து நாட்களும் நம் இல்லத்தை சுத்தமாக வைத்திருந்து முன்னோர்களை வணங்கி வந்தால், நம் வாழ்க்கை விருத்தியடையும்.
தற்போது உள்ள தலைமுறையினருக்கு, தாய், தந்தையைத் தவிர, அதற்கு முந்தைய தலைமுறையினரின் பெயர்கள் கூட அதிகமாக தெரிவதில்லை. ஆனால் இந்த மகாளய பட்சத்தில் நம் முன்னோர்களின் மூன்று தலைமுறையினரின் பெயர்களையாவது உச்சரித்து, அவர்களுக்கு நாம் நம்முடைய கடமைகளைச் செய்ய வேண்டும். அப்போதுதான் அதற்கான முழுமையான பலன் கிடைக்கப்பெறும். எனவே நம் முந்தைய தலைமுறையினரான, நம் முன்னோர்களின் பெயர்களையும், அவர்களைப் பற்றிய தகவல்களையும் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்து வளர்ப்பது அவசியமானது.
மகாளய பட்ச நாட்களும்.. பலன்களும்.
மகாளய பட்சம், புராட்டாசி மாத பவுர்ணமிக்கு பின் வரும் பிரதமை தொடங்கி அமாவாசை வரை உள்ளது. அதன் ஒவ்வொரு நாட்களும், நாம் முன்னோர்களை நினைத்து தர்ப் பணம் செய்வதனால் கிடைக்கும் பலன்களைப் பார்க்கலாம்.
முதல் நாள் (பிரதமை திதி) - பித்ரு தோஷம் நீங்கும்.
இரண்டாம் நாள் (துதியை திதி) - குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
மூன்றாம் நாள் (திருதியை திதி) - மன அமைதி பெறலாம்.
நான்காம் நாள் (சதுர்த்தி திதி) - தெய்வீகத் தன்மை மேலோங்கும்.
ஐந்தாம் நாள் (பஞ்சமி திதி) - இல்லத்தில் ஐஸ்வர்யம் சேரும்.
ஆறாம் நாள் (சஷ்டி திதி) - புகழ் பெறுவீர்கள்.
ஏழாம் நாள் (சப்தமி திதி) - சிறந்த பதவிகளை அடைவீர்கள்.
எட்டாம் நாள் (அஷ்டமி திதி) - ஆன்மா முக்தி பெறும்.
ஒன்பதாம் நாள் (நவமி திதி) - திருமணத் தடை அகலும்.
பத்தாம் நாள் (தசமி) - விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.
பதினொன்றாம் நாள் (ஏகாதசி) - படிப்பு, கலையில் தேர்ச்சி கிட்டும்.
பன்னிரண்டாம் நாள் (துவாதசி) - பொருளாதாரம் உயரும்.
பதிமூன்றாம் நாள் (திரயோதசி) - தீர்க்காயுள் கிடைக்கும்.
பதினான்காம் நாள் (சதுர்த்தசி) - ஆரோக்கியம் பலம் பெறும்.
பதினைந்தாம் நாள் - சகல சவுபாக்கியங்களும் நமக்குக் கிடைக்க, (மகாளய அமாவாசை) முன்னோர்கள் ஆசி வழங்குவர்.