வளர்ச்சியை ஏற்படுத்தும் அட்சய திருதியை
சித்திரை மாத அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறை திருதியை ‘அட்சய திருதியை’ என்று போற்றப்படுகிறது.
'சயம்' என்றால் 'தேய்தல்' என்று பொருள். 'அட்சயம்' என்றால் 'தேயாமல் வளர்வது' என்று பொருள்படும். அமாவாசை மற்றும் பவுர்ணமிக்கு அடுத்த மூன்றாவது நாள் வரும் திதியை 'திருதியை' என்கிறோம். இதில் சித்திரை மாத அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறை திருதியை 'அட்சய திருதியை' என்று போற்றப்படுகிறது.
அனைத்து நலன்களையும் அள்ளித் தரும் நாளாக, அட்சய திருதியை இருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. அட்சய திருதியை நாளில், நெல்லை படைத்து திருமாலை வணங்குவதுடன், உண்ணா நோன்பு இருந்தும் வழிபாடு செய்வார்கள். இந்த நாளில் கங்கை நதியில் நீராடுவது, மிகவும் மங்கலகரமானது என்று கருதப்படுகிறது.
அட்சய திருதியை நாளில், அறிவுபெறுதல் அல்லது கொடையளித்தல் போன்ற செயல்கள் நல்ல பலனளிக்கும் என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த நாளில் புதிய வணிகத்தையோ அல்லது புதிய முயற்சி களையோ தொடங்கலாம். பலர் இந்த நாளில் சொத்துக்களும், விலை உயர்ந்த ஆபரணங்களும் வாங்குவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். செல்வ வளத்தை பெருக்கும் நாளில் அட்சய திருதியைக்கு முக்கிய பங்கு உண்டு. இந்த நாளில் குண்டுமணி அளவுக்காவது தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்பது பலரது நம்பிக்கையாக இருக்கிறது. ஆனால் அனைவராலும் அது சாத்தியமாகாது. அப்படிப்பட்டவர்கள், அட்சய திருதியை நாளில், சிறிதளவு உப்பு வாங்கி வீட்டில் வைத்தால் கூட செல்வ வளம் பெருகும். இந்த நாளில் லட்சுமி, குபேரன், சிவசக்தி, அன்னபூரணி, லட்சுமிநாராயணர் ஆகியோரின் படங்களில் ஏதாவது ஒன்றை வீட்டில் வைத்து வழிபட்டு விரதம் இருந்தால் பலன்கள் இரட்டிப்பாகும். அவர்கள் குறைவில்லாத செல்வத்தை அள்ளித் தருவார்கள்.
இந்த நாளில் செல்வத்திற்கு அதிபதியான குபேரனையும், லட்சுமியையும் வழிபாடு செய்வது சிறப்புக்குாியது. அன்றைய தினம் குபேர லட்சுமி பூஜையும் நடத்தப்படுகிறது. லட்சுமி உருவப்படத்துடன் குபேரரின் அடையாளமான, சுதர்சன குபேர எந்திரமும் வைக்கப்பட்டு வணங்கப்படுகிறது.
விரதம் இருக்கும் முறை
அட்சய திருதியை நாள் அன்று, அதிகாலை எழுந்து நீராட வேண்டும். பின்னர் இல்லத்து பூஜை அறையில் அரிசி மாவால் கோலம் போட வேண்டும். அந்த கோலத்தின் மீது பலகை வைத்து, அதன் மீதும் கோலம் போட வேண்டும். ஒரு சொம்பில் அரிசி, மஞ்சள், நாணயம், சிறிய நகைகளை போட வேண்டும். பின்னர் அந்த சொம்பில் நீர் நிரப்பி, அதற்கு சந்தனம், குங்குமம் இட வேண்டும். பின்னர் சொம்பின் மேல் தேங்காய் வைத்து, அதைச் சுற்றிலும் மாவிலையை வைத்து கலசமாக தயார் செய்து பலகையில் வைக்க வேண்டும். மேலும் லட்சுமி நாராயணர், அன்னபூரணி, குபேரன், சிவ-சக்தி ஆகியோரது படங்களில் ஒன்றை வைத்து, அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு மாலையிட வேண்டும்.
அந்தப் படங்களின் முன்பு குத்துவிளக்கு அல்லது காமாட்சி விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். பிறகு கும்பத்தின் முன்பு நுனி வாழை இலையில் அரிசியை பரப்பி, அதன் மீது விளக்கு ஏற்றிவைக்க வேண்டும். அதன் அருகில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து, அதற்கு குங்குமம் இட்டு பூ போட வேண்டும். மேலும் பொன் மற்றும் புதியதாக வாங்கிய பொருட்களை கலசத்திற்கு அருகில் வைத்து தீபாராதனை காட்டி வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால் அளவற்ற பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். அட்சய திருதியை நாளில் குலதெய்வ வழிபாடு செய்வதும் முக்கியமானது. தயிர் சாதம் தானம் செய்தால் ஆயுள் கூடும். இனிப்பு பொருள் தானம் செய்தால் திருமணத் தடை நீங்கும். உணவு தானியம் அளித்தால் அகால மரணத்தைத் தடுக்கலாம். கால்நடைகளை தானமாக வழங்கினால், வாழ்வு வளம் பெறும். மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்தால், பாவ விமோசனம் கிடைக்கும். ஏழைகளுக்கு தயிர் சாதம் தருவது, 11 தலைமுறைக்கான பலன்களைப் பெற்றுத் தரும்.