அட்சய திருதியை சிறப்பு
இந்துசமய இதிகாச, புராணங்களின்படி அட்சய திருதியை நாளானது, பல எண்ணற்ற சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்ற நாளாக சொல்லப்பட்டிருக்கிறது. அவற்றில் சில..
மகாபாரத காவியத்தை எழுத நினைத்த வேத வியாசர், அதனை எழுதுவதற்கு விநாயகப் பெருமானை தேர்வு செய்தார். பின்னர் அவரிடம் மகாபாரதத்தை எழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்ட தினம், இந்த அட்சய திருதியை நாள்தான்.
திருமாலின் பத்து அவதாரங்களில் ஒருவராக கருதப்படுபவர், பரசுராமர். தந்தையின் சொல்லைக் காப்பாற்றுவதற்காக தாயையே கொன்றவர். பின்னர் தந்தை அளித்த வரத்தின் மூலம் தாயை மீட்டவர். தாய்-தந்தையைக் கொன்றதற்காக, சத்ரிய குலத்தைச் சேர்ந்த அரச குமாரர்கள் அனைவரையும் கொன்றழித்தவர். இவர் அவதரித்த நாளாக, இந்த அட்சய திருதியை போற்றப்படுகிறது.
உலகத்தின் தொடக்கம் இந்துசமயப்படி கிருத யுகத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. அப்படி நான்கு யுகங்களில் முதல் யுகமான கிருத யுகத்தில் பிரம்மன் இந்த உலகத்தைத் தோற்றுவித்தது, ஒரு அட்சய திருதியை நாளில்தான்.
இரண்டாவது யுகமான கிரேதாயுகம் தொடங்கியதும், ஒரு அட்சய திருதியை நாளில்தான் என்கிறது புராணங்கள்.
பிரம்மனின் ஆணவத்தை அடக்க, அவருக்கு இருந்த ஐந்து தலைகளில் ஒன்றை சிவபெருமான் கொய்து, நான்முகமாக மாற்றியதாக புராணங்கள் சொல்கின்றன. அப்படி சிவபெருமான் கொய்த தலையானது, அவரது கையிலேயே ஒட்டிக்கொண்டு கபால பிட்சை பாத்திரமாக மாறியது. அந்த கபாலம் அன்னத்தால் நிரம்பும் போதுதான், அது சிவனின் கையைவிட்டு அகலும் என்ற சாபம் அவருக்கு வந்து சேர்ந்தது. உலகம் முழுவதும் சுற்றி வந்தும், பலரிடம், பிட்சை வாங்கியும் கபால ஓடு நிரம்பவில்லை. இறுதியில் காசியில் அன்னபூரணித் தாயாரிடம் இருந்து அன்னத்தைப் பெற்றதும், அந்த கபால ஓடு நிரம்பியது. அதுவும் ஒரு அட்சய திருதியை நாள்தான்.
துவாபர யுகத்தில் துரியோதனனின் சபையில் திரவுபதியின் மானம் பறிக்கப்பட்டது. அவளின் சேலையை துச்சாதனன் பிடித்து இழுத்தான். சபையில் இருந்த அனைவரிடமும் திரவுபதி முறையிட்டும் அவளுக்கு எந்த நீதியும் கிடைக்கவில்லை. இறுதியாக இரு கரங்களையும் கூப்பி, 'கிருஷ்ணா அபயம்' என்று அவள் சொன்னதும், தான் இருந்த இடத்தில் இருந்தே 'அட்சயம்' என்ற ஒன்றைச் சொல்லை உச்சரித்தார், கிருஷ்ணர். அப்போது திரவுபதியின் சேலை வளர்ந்து கொண்டே சென்றது. இது நிகழ்ந்த நாளும் ஒரு அட்சய திருதியை தினமே.
இந்தியாவின் மிகவும் உயர்ந்த புண்ணிய நதியாகக் கருதப்படுவது, கங்கை. இந்த நதி முன்காலத்தில் ஆகாயத்தில் இருந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. பகீரதன் என்ற மன்னன், தன்னுடைய முன்னோர்களின் நற்கதிக்காக இறைவனை வேண்டினான். அப்போது கங்கையில் நீராடினால் அவர்களின் பாவம் தீரும் என்று கூறப்பட்டது. ஆகாயத்தில் இருக்கும் கங்கை பூமிக்கு வந்தால்தானே நீராடுவது. எனவே கங்கையை பூமிக்கு கொண்டுவர, சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தான், பகீரதன். அந்த தவத்தின் காரணமாக, ஆகாய கங்கை, பூமிக்கு வந்தது. அந்த நாளும் அட்சய திருதியை தினம்தான்.
கிருஷ்ணரின் பால்ய நண்பன், குசேலர். வறுமையின் பிடியில் இருந்த அவர், தன்னுடைய நண்பனைக் காண்பதற்காக கசங்கிய துணியில் சிறிதளவு அவல் முடிந்துவைத்துக் கொண்டு வந்திருந்தார். அதை எப்படி நண்பனுக்குக் கொடுப்பது என்று குசேலர் தயங்கிய நிலையில், கண்ணனே அந்த அவல் முடிப்பை பறித்து, 'அட்சயம்' என்று சொல்லி, அவலை சாப்பிட்டார். அந்த நொடியே, குடிசையாக இருந்த குசேலரின் வீடு, மாளிகையானது. குபேரனுக்கு நிகரான செல்வத்தை பெற்றிருந்தார், குசேலர். அது நிகழ்ந்த நாளும், ஒரு அட்சய திருதியை தினம்தான்.