சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்


ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரியில் இன்று ஒரே நாளில் சுமார் 12 ஆயிரம் பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்தனர்.

விருதுநகர்:

விருதுநகர்-மதுரை மாவட்ட எல்லைப் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் சதுரகிரி அமைந்துள்ளது. அங்கு சுந்தர மகாலிங்கம் சுவாமி மற்றும் சந்தன மகாலிங்கம் சுவாமி திருக்கோவில்கள் உள்ளன. இக்கோவில்களில் நாளை மறுநாள் ஆடி அமாவாசை திரு விழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

இந்நிலையில் இன்று ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை கேட்டிற்கு முன்பு குவிந்தனர்.

பின்னர் அதிகாலை 5 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் வனத்துறை கேட் வழியாக மலைப்பாதையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக நடைபயணத்தை தொடங்கினார்.

ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மாலிங்கம் சுவாமி திருக்கோவிலில் பிரதோஷ வழிபாடு வெகு விமர்சியாக நடைபெற்றது. அப்போது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு 18 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரமும், தீபாராதனைகளும் நடைபெற்றது. நந்திக்கு 16 வகையான அபிஷேகமும் நடைபெற்றது.

பிரதோஷத்தை முன்னிட்டு இன்று ஒரே நாளில் சுமார் 12 ஆயிரம் பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் பக்தர்கள் நடந்து செல்லும் மலைப்பாதைகளில் இரண்டு இடங்களில் மருத்துவ குழுவினரால் மருத்துவ வசதியும், ஐந்து இடங்களில் கோவில் நிர்வாகத்தின் சார்பில் குடிநீர் வசதியும்,மேலும் மலைப்பாதையில் ஆங்காங்கே தொண்டு நிறுவனகள் பக்தர்களுக்கு குடிநீர் வழங்கி வருகின்றனர்.

மேலும் இன்றும் , நாளை நடைபெற உள்ள ஆடி அமாவாசை சிறப்பு பூஜையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து அமாவாசை சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய உள்ளனர்.

இந்நிலையில் கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் அன்னதானம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பயன்படும் வகையில் மட்டுமே உள்ளது என்றும். ஆடி அமாவாசை தினங்களில் வரக்கூடிய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பயன்பட முடியுமா என்கிற நிலை என்பது ஒரு கேள்விக் குறியாக உள்ளதாக பக்தர்கள் ஒரு குற்றச்சாட்டினை கூறுகின்றனர்.


Next Story