ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x

ஆடிப்பூர விழாவையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் உள்ளது. இங்கு வருடந்தோறும் ஆடி மாதம் ஆடிப்பூரத்தன்று தேர் திருவிழா வெகு விமரிசையாக நடப்பது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டுக்கான ஆடிப்பூரத்திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 8 மணியில் இருந்து 9 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீ ஆண்டாள் - ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அதன்பின் 16 வண்டி சப்பரத்தில் மேளதாளங்கள் முழங்க கொடிப்பட்டம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதைத்தொடர்ந்து நாள்தோறும் ஆண்டாள் வீதி உலா வருகிறார். வருகிற 3-ந்தேதி கருட சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. வருகிற 5-ந்தேதி அன்று ஆண்டாள்-ரெங்கமன்னார் சயன சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 7-ந்தேதி தேரோட்ட திருவிழா நடக்கிறது.

ஆண்டாள் கோவில் முன்பு அமைக்கப்பட்டு உள்ள பிரமாண்ட பந்தலில் தினமும் சொற்பொழிவு பாட்டு கச்சேரிகள், பரதநாட்டியம் கிராமிய நிகழ்ச்சிகள், வில்லிசை பாட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராம ராஜா, அறங்காவலர்கள், கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். இந்த திருவிழாவையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.


Next Story