மங்கல வாழ்வைத் தரும் ஆடிப்பெருக்கு...!


மங்கல வாழ்வைத் தரும் ஆடிப்பெருக்கு...!
x
தினத்தந்தி 1 Aug 2023 12:22 PM IST (Updated: 1 Aug 2023 1:26 PM IST)
t-max-icont-min-icon

ஆடி மாதத்தில் வரும் மிகச் சிறப்பான நாளாக, ஆடிப்பெருக்கு பார்க்கப்படுகிறது

இந்த நாளானது திருமணமான பெண்களுக்கு மாங்கல்ய பலம் தருவதாகவும், கன்னிப் பெண்களுக்கு திருமணவரம் தருவதாகவும், காவிரியில் நீராடி வழிபடுபவர்களுக்கு பாவங்களைப் போக்குவதாகவும் போற்றப்படுகிறது. தட்சிணாயன புண்ணியகாலம் தொடங்கும் மாதமான ஆடியில், சூரியன் தென் திசை நோக்கி பயணம் செய்கிறார். அப்படி அவர் பயணம் செய்யும் முதல் மாதமான ஆடி மாதத்தில், விவசாயிகள் உழவுப் பணிகளைத் தொடங்குவார்கள். அதனால்தான் 'ஆடிப்பட்டம் தேடி விதை' என்ற பழமொழி வந்தது.

நாடு செழிப்பாக இருக்க வேண்டுமானால், விவசாயம் செழிக்க வேண்டும். அந்த விவசாயம் செழிப்பதற்கு தேவையானது நீர். எனவே நீரைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், நதிகள் அனைத்தும் புனிதம் மிக்கவை என்று நம் முன்னனோர்கள் சொல்லி வைத்தனர். அவற்றுக்கு வருடத்தில் ஒருமுறை வழிபாடுகள் செய்யவும் அவர்கள் ஒரு ஏற்பாட்டை செய்தனர். அப்படி நதித் தாயைவழிபடும் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றுதான், ஆடி மாதம் 18-ந் தேதி வரும் 'ஆடிப் பெருக்கு' நிகழ்வாகும். இந்த விழாவானது, தமிழகத்தில் உள்ள அனைத்து ஆறு மற்றும் நதியின் கரையயோரங்களிலும் நடத்தப்படுகிறது. இந்த விழா இப்போதும் காவிரிக் கரையோர மாவட்டங்களில் சிறப்பாக நடக்கிறது. ஆடிப்பெருக்கு நாள் அன்று தொடங்கும் செயல்கள் எதுவாக இருந்தாலும் அவை இனிதாக நடைபெற்று முடியும் என்பது ஐதீகம். ஆடி18-ல் காவிரியில் நீராடி, காவிரி அன்னையை வழிபட்டு மஞ்சள் , குங்குமம், மலர், வஸ்திரம் சமர்ப்பிப்பர். புதுமணத் தம்பதிகள் இந்த விழாவில் முதன்மையாக பங்கேற்பார்கள்.

அப்போது புதுப்பெண் தன்னுடைய தாலியில் உள்ள மஞ்சள் கயிற்றை நீக்கிவிட்டு, புதிய மஞ்சள் கயிற்றில் தாலியை மாற்றி, தன்னுடைய கணவனின் கையால் கட்டிக்கொள்வார். இதன் மூலம் தன்னுடைய மாங்கல்ய பலம் நீடிக்கும், நிலைக்கும் என்பது அவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. காவிரிக் கரையோரம் உள்ளவர்கள் மட்டுமே இந்த ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடும் நிலை இப்போது இருக்கிறது. மற்றவர்கள் நம் ஊரில்தான் ஆறு, நதிகள் இல்லையே , பிறகு எப்படி இந்த விழாவைக் கொண்டாடுவது என்று விட்டு விடும் வழக்கமும் உள்ளது. ஆனால் ஆடிப்பெருக்கை கொண்டாட நதிக்கரை யோரம் தான் இருக்கவேண்டும் என்று இல்லை . அங்குதான் அந்த வழிபாட்டை செய்ய வேண்டும் என்பதும் இல்லை . நதிக்கரை யோரத்தில் இல்லாத மக்கள், ஆடிப்பெருக்கு பூஜையை வீட்டிலும் எளிய முறையில் செய்யலாம். ஒரு செம்பில் அரைத்த மஞ்சளை சிறிதளவு போட வேண்டும். நிறை குடத்தில் இருந்து அந்த செம்பில் நீர் எடுத்ததும், மஞ்சள் கரைந்து விடும். பின்னா் பூஜை அறையில் திருவிளக்கேற்றி, அந்த நீரை விளக்கின் முன்பாக வைக்க வேண்டும்.

தண்ணீரில் உதிரிப் பூக்களைப் போட வேண்டும். கற்பூர ஆரத்தி அல்லது நெய்தீபம் காட்டி, புண்ணிய தீர்த்தங்களான கங்கை , யமுனை , நர்மதை , காவிரி, வைகை, தாமிரபரணி போன்றவற்றை மனதில் நினைத்து, 'முன்னொரு காலத்தில் எங்கள் மூதாதையர் உங்களை புனிதமாகக் கருதி வழிபட்டது போல் எங்களுக்கும் அத்தகைய மனநிலையைத் தாருங்கள்' என்று வேண்டுங்கள். காவிரியையும், தாமிரபரணியையும் நமக்களித்த அகத்திய முனிவரை மனதார வணங்குங்கள். பூஜை முடிந்ததும் செம்பிலுள்ள நீரை செடி, கொடிகளில் ஊற்றி விட வேண்டும். ஆடிப்பெருக்கு அன்று சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்தால் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை .

அட்சய திருதியை தினத்தில் மங்கலப் பொருட்கள் வாங்குவது நல்லது என்ற கருத்து உள்ளது. ஆனால் அட்சயதிருதியை தினத்தை விட, சிறப்பான நாளாக ஆடிப்பெருக்கு உள்ளது. இந்தநாளில் தங்க நகை மட்டுமல்லாது, மங்கலம் நிறைந்த எந்தப் பொருட்களாக இருந்தாலும் வாங்கலாம். இதனால் வீட்டில் சுபிட்சம் உண்டாகும். நாம் செய்கின்ற நற்செயல்களால், புண்ணியம் எப்படி பெருகுகிறதோ , அதுபோல் இந்நாளில் தொடங்கும் சேமிப்பும், பல மடங்காய் பெருகும் என்கிறார்கள். ஆடி மாதத்தில் பொதுவாக புதுத்தொழில் தொடங்குவதில்லை . ஆனால், அதற்கு ஆடிப்பெருக்கு தினம் மட்டும் விதிவிலக்காக இருக்கிறது. இந்த நாளில் தொடங்கும் எந்த ஒரு புதிய விஷயமும் பன்மடங்கு பலனைத்தரும்.



காவிரிக்கு சீர் கொடுக்கும் அரங்கநாதர்

காவிரியன்னை, திருவரங்கம் அரங்கநாதரின் தங்கையாகக் கருதப்படுகிறாள். ஆடிப்பெருக்கு அன்று சமயபுரம் பகுதியில் திருவிழா கோலாகலமாக இருக்கும். இவ்வூரில் உள்ள சகோதரர்கள், தங்கள் சகோதரிகளையும், மைத்துனர்களையும் வீட்டிற்கு அழைத்து சீர் கொடுக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது.

தம்பதியரை இங்குள்ள ஆதிமாரியம்மன் கோவிலுக்கும் அழைத்துச் செல்வர். இவள் சமயபுரம் மாரியம்மனின் சகோதரியாக கருதப்படுகிறாள். சாதாரண மக்கள் சீர்கொடுப்பதைப் போலவே, திருவரங்கத்தில் கோவில் கொண்டிருக்கும் அரங்கநாதரும் தனது தங்கையான காவிரித் தாய்க்கு சீர் கொடுக்கிறார்.

ஆடிப்பெருக்கு அன்று, திருவரங்கம் அரங்கநாதர், காவிரிக் கரையில் உள்ள அம்மா மண்டப்படித்துறைக்கு எழுந்தருள்வார். அங்குள்ள மண்டபத்தில் அரங்கநாதருக்கு திருமஞ்சனம் நடைபெறும். மாலை வரை அங்கேயே வீற்றிருப்பார். பின்னர் சீதனப்பொருட்களாக பட்டு, தாலிப்பொட்டு, மஞ்சள் உள்ளிட்ட மங்கல பொருட்கள் காவிரி ஆற்றில் மிதக்க விடப்படும்.


Next Story