வீட்டில் ஆடிப்பெருக்கு பூஜை செய்வது எப்படி?


வீட்டில் ஆடிப்பெருக்கு பூஜை செய்வது எப்படி?
x

சுமங்கலி பெண்கள் காலையில் ஒரு மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொண்டு, திருமாங்கல்யத்தை சுத்தம் செய்து அம்மன் பாதத்தில் வைத்து வழிபட்ட பிறகு, அதை கழுத்தில் எடுத்து கட்டிக் கொள்ளலாம்.

விவசாயத்திற்கு ஆதாரமான தண்ணீரை வழங்கும் ஆறுகள் மற்றும் நீர்நிலைகளை வழிபடும் முக்கியமான நாளாக ஆடிப்பெருக்கு அமைந்துள்ளது. குறிப்பாக, நதிகளை பெண் தெய்வமாக கருதி வழிபாடு செய்யப்படுகிறது. நல்ல மழை பெய்து ஆறுகளில் புது வெள்ளம் பெருகி ஒடி வரும் நாளில் ஆறுகளை வணங்கி மக்கள் புனித நீராடுவார்கள்.

ஆடி மாதம் 18ஆம் நாள் கொண்டாடப்படும் ஆடிப்பெருக்கு நாளில், கிராம பகுதிகளில் ஆடி பதினெட்டாம் பெருக்கு என்றும் வழிபடுகின்றனர். ஆடிப்பெருக்கில் செய்யப்படும் வழிபாடு, வாங்கும் பொருள் என அனைத்தும் பெருகிக் கொண்டே போகும் என்ற ஐதீகம் உள்ளது. எனவே இந்த நாளில் பெண்கள் தங்களின் மாங்கல்ய பலம் நிலைக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு, தாலிக்கயிறு மாற்றிக் கொள்ளும் பழக்கம் உள்ளது.

இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு நாளை (ஆகஸ்டு 3) கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் நதிகளை வழிபட்டு மஞ்சள், குங்குமம், மலர், வஸ்திரம் சமர்ப்பிப்பார்கள். சுமங்கலி பெண்கள் இந்த வழிபாட்டின்போது தாலி கயிறை மாற்றிக்கொள்வது வழக்கம். குறிப்பாக, புதுப்பெண்கள் தாலியில் உள்ள மஞ்சள் கயிற்றை நீக்கிவிட்டு, புதிய மஞ்சள் கயிற்றில் தாலியை மாற்றி, தன்னுடைய கணவனின் கையால் கட்டிக்கொள்வார்கள். இதன் மூலம் தன்னுடைய மாங்கல்ய பலம் நீடிக்கும், நிலைக்கும் என்பது அவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

காலை 07.35 முதல் 08.50 வரையிலும், காலை 10.35 முதல் 11.55 வரையிலும் தாலிக்கயிறு மாற்றுவதற்கு நல்ல நேரம் ஆகும். தாலிக்கயிறு மாற்றிக் கொள்பவர்கள் பகல் 12 மணிக்கு முன்பாக மாற்றிக் கொள்ள வேண்டும். இறங்கு பொழுதில் தாலி மாற்றிக் கொள்ளக் கூடாது.

இந்த ஆண்டு காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, காவிரியில் இறங்குவதை மக்கள் தவிர்க்கவேண்டும்.

ஆடிப்பெருக்கு நாளில் ஆற்றங்கரைக்கு செல்ல முடியாத சுமங்கலிப் பெண்கள் வீட்டிலேயே தாலிக்கயிறு மாற்றிக்கொள்ளலாம். காலையில் ஒரு மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொண்டு, திருமாங்கல்யத்தை சுத்தம் செய்து அம்மன் பாதத்தில் வைத்து வழிபட்ட பிறகு, அதை கழுத்தில் எடுத்து கட்டிக் கொள்ளலாம்.

நதிக்கரையோரத்தில் இல்லாத மக்கள், ஆடிப்பெருக்கு பூஜையை வீட்டிலும் எளிய முறையில் செய்யலாம். நிறைகுடத்தில் இருந்து ஒரு செம்பு நிறைய தண்ணீர் எடுத்து, அதில் அரைத்த மஞ்சளை சேர்த்தால் வழிபாட்டுக்கான தீர்த்தம் தயார். பூஜை அறையில் திருவிளக்கேற்றி, தீர்த்த செம்பை விளக்கின் முன்பாக வைக்க வேண்டும். தண்ணீரில் உதிரிப் பூக்களைப் போட வேண்டும். கற்பூர ஆரத்தி அல்லது நெய்தீபம் காட்டி, புண்ணிய தீர்த்தங்களான கங்கை , யமுனை , நர்மதை , காவிரி, வைகை, தாமிரபரணி போன்றவற்றை மனதில் நினைத்து வணங்கவேண்டும். காவிரியையும், தாமிரபரணியையும் நமக்களித்த அகத்திய முனிவரையும் மனதார வணங்கவேண்டும். பூஜை முடிந்ததும் செம்பிலுள்ள நீரை செடி, கொடிகளில் ஊற்றி விட வேண்டும்.

ஆடிப்பெருக்கு மிக விசேஷமான நாள் என்பதால் ஆடிப்பெருக்கு வரும் நாளில் கிழமை, நட்சத்திரம், திதி என எதுவும் பார்க்க வேண்டியதில்லை. ஆடிப்பெருக்கு அன்று சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்தால் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை . அட்சய திருதியை தினத்தில் மங்கலப் பொருட்கள் வாங்குவது நல்லது என்ற கருத்து உள்ளது. ஆனால் அட்சயதிருதியை தினத்தை விட, சிறப்பான நாளாக ஆடிப்பெருக்கு உள்ளது. இந்தநாளில் தங்க நகை மட்டுமல்லாது, மங்கலம் நிறைந்த எந்தப் பொருட்களாக இருந்தாலும் வாங்கலாம். இதனால் வீட்டில் சுபிட்சம் உண்டாகும். நாம் செய்கின்ற நற்செயல்களால், புண்ணியம் எப்படி பெருகுகிறதோ , அதுபோல் இந்நாளில் தொடங்கும் சேமிப்பும், பல மடங்காய் பெருகும் என்கிறார்கள்.

மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Others/Devotional


Next Story