உயரமான சிவலிங்கம்


உயரமான சிவலிங்கம்
x

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஐந்து முக்கியமான சிவாலயங்கள், ‘பஞ்சராம ஷேத்திரங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.

அவற்றில் ஒன்றுதான், குண்டூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி நகரில் அமைந்த, அமரராம ஆலயம். இங்கு அமரலிங்கேஸ்வரர் என்ற பெயரில் இறைவனும், பாலசாமுண்டிகா என்ற பெயரில் அம்பாளும் அருள்பாலித்து வருகிறார்கள். இந்த ஆலயம் கிருஷ்ணா நதியின் தென்கரையில் அமைந்துள்ளது.

இங்குள்ள சிவலிங்கம் மிகவும் உயரமானது. இது 31.4 மீட்டர், அதாவது 103 அடி உயரம் கொண்டது. இந்த சிவலிங்கத்திற்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்ய, அர்ச்சகர்கள் ஒரு பீட மேடையில் ஏறி நின்றுதான் அனைத்து சடங்குகளையும் செய்தாக வேண்டும்.

இந்த சிவலிங்கத்தின் மேற்பகுதியில் சிவப்பு நிறத்தில் கறை போன்று தென்படுகிறது. ஆரம்ப காலத்தில் இந்த சிவலிங்கம் பெரிதாக வளர்ந்து கொண்டே சென்றதாம். அது மேலும் வளராமல் இருப்பதற்காக, சிவலிங்கத்தின் மேற்பகுதியில் ஒரு ஆணி அடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆணி சிவலிங்கத்திற்குள் நுழைந்ததும், அதில் இருந்து ரத்தம் கசிய ஆரம்பித்தது. அதுதான் இப்போது காணப்படும் சிவப்பு நிற கறைக்கு காரணம் என்கிறார்கள்.

சிவபெருமானிடம் இருந்து பல வரங்களைப் பெற்ற தாரகாசுரன் என்ற அசுரன், தேவர்களையும், முனிவர்களையும் வதைத்தான். அவனை அழிப்பதற்காக தேவர்கள் அனைவரும் இங்கு வந்து தங்கியிருந்து சிவபெருமானை பூஜித்தனர். தேவர்களுக்கு, 'அமரர்கள்' என்ற பெயரும் உண்டு. தேவர்கள் வந்து தங்கியிருந்த இடம் என்பதால் இது அமராவதி என்றும், இறைவன் அமரலிங்கேஸ்வரர் என்றும் பெயர் பெற்றனர். குண்டூரில் இருந்து 40 கிலோமீட்டர் தூரத்தில் இந்த ஆலயம் உள்ளது.


Next Story