துன்பங்களை நீக்கும் மாசி மகம்
ஒவ்வொரு மாதமும் மகம் நட்சத்திரம் வந்தாலும், மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திமே, ‘மாசி மகம்’ என்று கொண்டாடப்படுகிறது. தட்சனின் மகளான அம்பிகை அவதரித்த தினம் இது என்பதால், இந்த சிறப்பு பெற்றதாக கூறப்படுகிறது. மாசி மாதத்தில் சந்திரன் சிம்ம ராசியில் மகம் நட்சத்திரத்தில் நுழையும் நாளான, மாசி மகம் அன்று, ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும்.
ஒரு முறை கங்கையும், யமுனையும், சிவபெருமானைப் போய் சந்தித்தனர். அவர்கள் ஈசனிடம், “இறைவா.. இந்த உலகத்தில் வாழும் பல கோடி மக்கள், எங்களைத் தேடி வந்து நீராடுவதால், அவர்களின் பாவங்கள் விலகுகின்றன. ஆனால் அவர்களின் பாவங்கள் கழுவப்பட்டதால், எங்களின் புனிதம் குறைந்து வருகிறது. அந்த பாவத்தை நாங்கள் எங்கே போய் தீர்த்துக் கொள்வது?” என்று முறையிட்டனர்.
அப்போது ஈசன், “நீங்கள் மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரம் அன்று, கும்பகோணம் மகாமக குளத்தில் தங்குங்கள். அங்கே உங்களுடைய புனிதம் காக்கப்படும். அந்த புண்ணிய குளத்தில் நீராடுபவர்களுக்கு முன்பிறவி பாவங்கள் அகலும். குழந்தைப் பேறு வேண்டினால் அதுவும் கிடைக்கப்பெறும்” என்று அருளினார்.
ஒருமுறை குருவை கொன்ற பாவத்தின் பலனாக, வருண பகவான் தன்னுடைய கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் கடலுக்குள் அழுத்தப்பட்டு, துன்பம் அனுபவித்து வந்தான். வருணன் இல்லாததால், உலகத்தில் மழை, தண்ணீர் இல்லாமல், உயிர்கள் அனைத்தும் துன்பத்தில் ஆழ்ந்தன. இதனால் தேவர்கள் அனைவரும் சிவபெருமானை சந்தித்து, வருணனை விடுக்க வேண்டுமாய் முறையிட்டனர்.
இதையடுத்து சிவபெருமான், அந்த சமுத்திரத்தில் எழுந்தருளி வருணனின் கட்டுக்களை அறுத்தார். துன்பத்தில் இருந்து வருணன் மீண்டது, ஒரு மாசி மகம் தினம் ஆகும். அன்றைய தினம் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுபவர்களின் பாவத்தை நீக்கி அருள வேண்டும் என்று ஈசனிடம் வருணன் கோரிக்கை வைத்தான். அதன்படியே, மாசி மகத்தில் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுபவர்களின் பாவங்கள் அனைத்தும் நீங்குவதாக ஐதீகம்.
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ‘மகாமகம்’ என்ற பெயரில் பெருவிழா நடைபெறும். அந்த பெருவிழா 2028-ம் ஆண்டில்தான் வரும்.
Related Tags :
Next Story