சபரிமலை ஐயப்பன்


சபரிமலை ஐயப்பன்
x
தினத்தந்தி 16 Nov 2021 9:24 AM IST (Updated: 16 Nov 2021 9:24 AM IST)
t-max-icont-min-icon

மகிஷி என்னும் அரக்கியை, அழிப்பதற்காக அவதரித்தவர் ஐயப்பன். பந்தள மகாராஜாவிடம் வளர்ந்து வந்த இவர், தகுந்த நேரத்தில் மகிஷியை அழித்து, பிரம்மச்சரியாகவே சபரிமலையில் அமர்ந்து தியானம் செய்வதோடு, தன்னை வழிபட வரும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

ஐயப்பனின் உற்சவர் சிலை ஆண்டுக்கு ஒரு முறை பம்பை ஆற்றில் நீராட்ட கொண்டு செல்லப்படும். அப்போது பம்பா விநாயகர் கோவில் முன்பு மக்கள் தரிசனத்துக்காக வைக்கப்படும். அப்போது மலை உச்சிக்கு வர முடியாத பெண்கள் கூட இந்த உற்சவரை தரிசிக்கலாம்.

திருக்கோவில்



கடல் மட்டத்தில் இருந்து 914 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது, சபரிமலை ஐயப்பன் திருக்கோவில்.

‘அஷ்டாபிஷேகம்’

ஐயப்பனுக்கு விபூதி, சந்தனம், பால், பன்னீர், 108 ஒரு ரூபாய் நாணயம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர் ஆகிய எட்டும் கொண்டு செய்யப்படும் அபிஷேகத்துக்கு ‘அஷ்டாபிஷேகம்’ என்று பெயர்.

7 சிறப்புகள்

சுயம்பு லிங்க பூமி, யாக பூமி, பலி பூமி, யோக பூமி, தபோ பூமி, தேவ பூமி, சங்கமம் பூமி என்ற 7 சிறப்புகளைக் கொண்டது.

விசேஷம்

சிவனின் உடுக்கையை படுக்க வைத்த நிலையில் உள்ள பீடத்தில், சிவனைப் போல் தியான கோலத்திலும் (முக்தி தருவது), விஷ்ணுவை போல் விழித்த நிலையிலும் (காத்தல் தொழில்) அருள்பாலிப்பது இத்தல ஐயப்பனின் விசேஷமாகும்.

பக்தர்கள் வருகை 

சபரிமலைக்கு ஆண்டுதோறும் 4 முதல் 5 கோடி பக்தர்கள் வருகை தந்து இறைவனை தரிசித்துச் செல்கின்றனர். 

தாலாட்டுபாடல்


ஐயப்பனுக்கான பாடல்களில் முக்கியமானது,  ‘ஹரிவராசனம்.’ இது இரவில் ஐயப்பனை உறங்கச் செய்வதற்காக இசைக்கப்படும் தாலாட்டு.

பாயசம்

சபரிமலை அரவனை பாயசம் புகழ்பெற்றது. அரிசி, நெய், சர்க்கரை, ஏலக்காய் கலந்து இந்தப் பாயசம் தயாரிக்கப்படுகிறது.

‘தத்வமஸி’

இந்த ஆலயத்தில் ‘தத்வமஸி’ என்ற சொல் எழுதப்பட்டிருக்கும். இதற்கு ‘நீயும் ஒரு கடவுள்’ என்று பொருள்.

ஜோதி தரிசனம்

ஐயப்பன், மகரசங்கராந்தி அன்று ஜோதி வடிவில் பக்தர்களுக்கு காட்சி தருவார். இந்த ஜோதியை அப்பாச்சி மேடு, பம்பை, பெரியானை வட்டம், புல்மேடு ஆகிய இடங்களில் இருந்து தரிசிக்க முடியும்.

மாளிகைப் புறத்தம்மனின் தனி சன்னிதி

ஐயப்பன் கோவிலில் மாளிகைப் புறத்தம்மனின் தனி சன்னிதி உள்ளது. இங்கே தேங்காயை உடைக்கக்கூடாது. உருட்டி வழிபட வேண்டும். மஞ்சள் பொடியை அம்பாளுக்கு படைத்து வழிபடுவார்கள்.

காப்பீடு

திருவாங்கூர் தேவஸ்தானம், சபரிமலை ஐயப்பன் கோவிலை, சுமார் ரூ.30 கோடிக்கு காப்பீடு செய்திருக்கிறது.

Next Story