வேத விநாயகர்


வேத விநாயகர்
x
தினத்தந்தி 5 Nov 2021 10:00 PM IST (Updated: 5 Nov 2021 10:00 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, திருவேதிக்குடி. இங்கு வேதபுரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.

இத்தல இறைவனான வேதபுரீஸ்வரர், ரிக், யஜூர், சாமம், அதர்வணம் என்னும் நான்கு வேதங்களையும் அருளிச் செய்த திருத்தலமாக இது இருக்கிறது. ஈசன் அருளும் வேதங்களை கேட்பதற்காக, கருவறையின் வாசலில் செவி சாய்த்தபடி ஒரு விநாயகர் சிலை உள்ளது. இவருக்கு ‘வேதவிநாயகர்’ என்று பெயர். வேதங்களை கேட்பதில் விருப்பமுள்ள கோலத்தில் தலை சாய்த்தபடி இந்த விநாயகர் காட்சி தருகிறார்.

விநாயகரை வழிபடும் சமயமாக ‘காணாபத்தியம்’ என்னும் பிரிவு இருக்கிறது. விநாயகரின் அற்புதங்களைப் பற்றி சொல்லும் புராணக் காவியமாக ‘கணேஷ புராணம்’ உள்ளது. இந்த புராணத்தில், விநாயகப்பெருமான் கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என நான்கு யுகங்களில், நான்கு வேதங்களின் சாரமாக அவதரிப்பதாக கூறப்படுகிறது.

கிருத யுகம்

இந்த யுகத்தில் காசியப முனிவருக்கும், அதிதி தேவிக்கும் பிள்ளையாக அவதரித்தார், விநாயகர் என்று சொல்லப்படுகிறது. அப்போது விநாயகரின் திருநாமம், ‘மகாகடர்’ என்பதாகும். இந்த யுகத்தில் அசுரர்கள் பலரை அழித்து, தர்மத்தை நிலைநாட்டினார் என்கிறது புராணம்.

திரேதா யுகம்

இந்த யுகத்தில் பார்வதி தேவியின் மகனாக, விநாயகர் அவதரித்தார். தன்னுடைய குழந்தை பருவத்தில், அழகான மயிலைப் பிடித்து விளையாடியதன் காரணமாக, இவருக்கு ‘மயூரேசர்’ என்ற பெயர் வந்தது.

துவாபர யுகம்

பராசர மகரிஷிக்கும், அவரது மனைவி வத்ஸலாவுக்கும் மகனாக பிறந்தார். இந்த யுகத்தில் அவருக்கு கஜானனன் என்ற பெயர் நிலைத்தது.

கலி யுகம்

சிவபெருமானுக்கும் அம்பிகைக்கும் குழந்தையாக அவதரித்து, அதர்மம் செய்வோரின் செயல்களில் தடங்கல்களையும், தர்மநெறியில் இருப்போரின் இன்னல்களைப் போக்கியும் அருள் செய்வதாக, கணேஷ புராணம் சொல்கிறது.


Next Story