பழனியாண்டவர் தண்டத்தில் அருணகிரியார்


பழனியாண்டவர் தண்டத்தில் அருணகிரியார்
x
தினத்தந்தி 28 July 2021 10:44 PM IST (Updated: 28 July 2021 10:44 PM IST)
t-max-icont-min-icon

முருகப்பெருமான் கோவில் கொண்டிருக்கும் திருத்தலங்களில், பழனி பால தண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு தனித்துவம் உண்டு. போகர் என்னும் தலைசிறந்த சித்தரால் நவபாஷாணத்தைக் கொண்டு வடிவமைக்கப்பட்டது, இந்த ஆலயத்தில் உள்ள முருகப்பெருமானின் சிலை. இதற்கு செய்யப்படும் அபிஷேக நீர் அருமருந்தாக இருப்பதாக சொல்கிறார்கள்.

நவபாஷாண சிலையைச் செய்ய, சுமார் 9 ஆண்டுகள் எடுத்துக் கொண்டாராம், போகர். இந்த சிலையின் நெற்றியில் உள்ள ருத்ராட்சம், கண், மூக்கு, வாய், தோள், கை, விரல்கள் அனைத்தும் மிக அற்புதமாக செதுக்கப்பட்டுள்ளன.

முருகப்பெருமானின் விக்கிரகத்துக்கு நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி ஆகிய நான்கு பொருட்களால் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. மார்கழி மாதத்தில் மட்டும் பன்னீர், அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த அபிஷேகப் பொருட்களில் சந்தனமும், பன்னீரும் மட்டும்தான் முருகப்பெருமானின் தலை முதல் அடி வரை முழுவதுமாக அபிஷேகம் செய்யப்படும். மற்றவை அனைத்தும் தலையில் வைத்து உடனடியாக அகற்றப்பட்டு விடும்.

ஒரு நாளுக்கு ஆறு முறை இத்தல இறைவன், அபிஷேகம்- அலங்காரம் காண்கிறார். ஒரு முறை அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்யப்பட்டு விட்டால், அடுத்த அபிஷேக நேரம் வரை, முருகப்பெருமானுக்கு மாலை சாற்றுவது, பூக்களால் அச்சனை செய்வது என்று எதுவும் செய்யப்படுவது இல்லை.

முருகப்பெருமானின் புகழ் பாடியவர்களில் முக்கியமானவர், அருணகிரிநாதர். இவர் ஆரம்ப காலத்தில் தவறான வழியில் சென்று, அதில் இருந்து மீள முடியாமல் மனம் வருந்தினார். பின்னர் தற்கொலை செய்து கொள்வதற்காக திருவண்ணாமலை கோவில் கோபுரத்தில் இருந்து குதித்தார். அப்போது முருகப்பெருமான் அவரை தடுத்தாட்கொண்டு காப்பாற்றி, தன்னைப் பற்றி பாடல்கள் பாடும்படி செய்தார். முருகப்பெருமானைப் பற்றி, அருணகிரிநாதர் பாடிய பாடல்கள், ‘திருப்புகழ்’ என்ற பெயரில் புகழ்பெற்று விளங்குகிறது.

பழனி முருகனின் கையில் ஒரு தண்டாயுதம் இருக்கும். மதுரையில் மீனாட்சி அம்மனின் கையில் இருப்பது போல, முருகப்பெருமானின் தண்டாயுதத்திலும் கிளி ஒன்று இருக்கிறது. இந்த கிளி, அருணகிரிநாதரின் சொரூபம் என்று சொல்லப்படுகிறது. முருகனால் புகழ்பெற்று விளங்கிய அருணகிரிநாதரின் மீது, சம்பந்தாண்டான் என்ற புலவன் பொறாமை கொண்டான். ஒரு முறை பிரபுடதேவராய மன்னனுக்கு ஏற்பட்ட நோயை தீர்க்க யாராலும் முடியவில்லை. அப்போது சம்பந்தாண்டான் நயவஞ்சகமாக, தேவலோகத்தில் உள்ள பாரிஜாத மலரை பறிந்து வந்தால்தான், மன்னனின் நோயை குணப்படுத்த முடியும் என்றான். அருணகிரிநாதரால் மட்டுமே இது முடியும் என்று கூறினான்.

அதைக் கேட்டதும் அருணகிரிநாதர், திருவண்ணாமலை கோவில் கோபுரத்தில் இருந்து, கூடுவிட்டு கூடுபாயும் வித்தை மூலமாக தன்னுடைய உடலில் இருந்து உயிரை ஒரு கிளி மீது செலுத்தி, விண்ணுலகம் சென்றார். அவர் வருவதற்கு முன்பாக சம்பந்தாண்டான், கோபுரத்தின் மீது இருந்த அருணகிரிநாதரின் உடலை எடுத்து எரித்து விட்டான். இதனால் அருணகிரிநாதர், கிளி ரூபத்திலேயே இருக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து முருகப்பெருமான், அருணகிரிநாதருக்கு அருள் செய்து, கிளி உருவத்தில் இருந்த அவரை தன்னுடைய தண்டத்திலேயே இருத்திக்கொண்டாராம்.

Next Story