காமாட்சி விளக்கு பயன்படுத்துவது ஏன்?


காமாட்சி விளக்கு பயன்படுத்துவது ஏன்?
x
தினத்தந்தி 29 Jun 2019 5:44 PM IST (Updated: 29 Jun 2019 5:44 PM IST)
t-max-icont-min-icon

வீட்டில் விளக்கு ஏற்றுவது என்பதே, வீட்டை ஒளியூட்டும் சிறப்பான ஒரு விஷயம்தான். விளக்குகளில் வட்ட முகம், இரட்டை முகம் முதல் 5 முகம் என பல விதங்களில் காணப்படுகின்றன.

இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் இல்லங்களில் ஏற்றப்படும் காமாட்சி விளக்கு திகழ்கிறது. இது பெரும்பாலும் பல வீடுகளில் இருக்கும். ‘காமாட்சி விளக்கை ஏன் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துகிறார்கள்?’, ‘அந்த விளக்கை வீட்டில் ஏற்றி வைப்பதால் என்ன நன்மை ஏற்படும்?’ என்பதை தெரிந்துகொள்வோம்.

உலக மக்களின் நன்மைக்காக தவம் இருந்தவர், காமாட்சி அம்மன். அவர் அப்படி தவம் இருந்த வேளையில், சகல தெய்வங்களும் காமாட்சி அம்மனுக்குள் அடங்கியது. இதன் காரணமாக காமாட்சி அம்மனை வழிபட்டாலே, ஒருவருக்கு அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைத்துவிடும். காமாட்சி அம்மனுக்குள் சகல தெய்வங்களும் அடக்கம் என்பதால், ஒவ்வொருவரும் தங்களுடைய குலதெய்வங்களை நினைத்துக் கொண்டு காமாட்சி விளக்கை ஏற்றி வணங்குவது ஐதீகம். இதனால் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு காமாட்சி அம்மனுடைய அருளும், அவரவர் குலதெய்வத்தின் ஆசியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ஒரு சிலருக்கு தங்களுடைய குலதெய்வம் எது? என்பது தெரியாமல் இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள், காமாட்சி அம்மனையே, குலதெய்வமாக நினைத்துக் கொண்டு விளக்கேற்றி வழிபடுவார்கள். அதற்கு ‘காமாட்சி தீபம்’ என்று பெயர். அனைத்து தெய்வங்களின் அருளையும், ஒன்றாகப் பெறுவதற்காகத்தான், திருமண சமயங்களில் கூட, மணமகள் காமாட்சி விளக்கை கையில் ஏந்திக்கொண்டு வலம் வரச் சொல்கிறார்கள். திருமணமாகி கணவன் வீட்டிற்குச் செல்லும் மணப்பெண், அங்கு முதன் முதலில் காமாட்சி விளக்கை ஏற்றுவதற்கும் இதுதான் காரணம். அதோடு காமாட்சி விளக்கில் குலதெய்வமும் இருந்து அருள்புரிவதால், முதன்முதலில் அந்த விளக்கை ஏற்றுவதன் மூலம் அவர்களின் குலம் தழைத்து வளரும்.

- பொ.பாலாஜிகணேஷ்

Next Story