இறைவனின் அழைப்பு
எனக்கன்பானவர்களே, கர்த்தருடைய கிருபையினால் உங்களுக்காக ஜெபத்தோடு எழுதுகிறேன்.
இதில் எழுதப்பட்டுள்ள அத்தனை வார்த்தைகளும் உங்களுக்காகவே என எடுத்துக்கொள்ளுங்கள். அந்த வகையில் ‘உங்களை அழைக்கும் தேவன்’ என்ற செய்தியை கர்த்தர் உங்களுக்கு தந்திருக்கிறார்.
இறைவனின் அழைப்பு
‘நீங்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மகிமையை அடையும் பொருட்டாக எங்கள் சுவிசேஷத்தினாலே அந்த இரட்சிப்புக்கு அவர் உங்களை அழைத்தார்.’ (II தெச.2:14)
தேவனுடைய பிள்ளையே, இந்த அழகிய உலகில் நீங்களும் நானும் ஒரே ஒரு முறைதான் பிறக்கிறோம். இவ்வுலகில் ஏராளமான மார்க்கங்களும், மதங்களும் உள்ளன. இருந்தாலும், வெற்றி, சமாதானம், நம்பிக்கை, விடுதலை, ஆரோக்கியம், எல்லாவற்றுக்கும் மேலாக நாம் மரித்த பிறகும் பரலோகத்தில் ஆண்டவரோடு நித்திய காலமாய் வாழ்கிற வாழ்க்கை என இத்தனை ஆசீர்வாதங்களையும் கொண்டது தான் கிறிஸ்தவ மார்க்கமாகும்.
இந்தியாவில் மட்டும் ஏறத்தாழ 130 கோடி மக்கள் வசிக்கிறார்கள். இத்தனை பெரிய தேசத்தில், நீங்கள் ஜீவனுள்ள தேவனாகிய இயேசு கிறிஸ்துவினால் அழைக்கப்படுவது மாபெரும் ஆசீர்வாதமாகும். அதே வேளையில் கடவுள் நம்மை அழைத்ததின் நோக்கத்தை நாம் அனைவரும் அறிய வேண்டும்.
பாவமன்னிப்பு
தெசலோனிக்கேயர்க்கு பவுல் எழுதும்போது ‘இரட்சிப்புக்கு அவர் உங்களை அழைத்தார்’ என எழுதுகிறார். நீங்கள் தேவனிடத்தில் பெற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான அற்புதம் இரட்சிப்பு ஆகும். ‘இரட்சிப்பு’ என்ற வார்த்தை ‘மனந்திரும்புதல்’, ‘பாவமன்னிப்பின் நிச்சயம்’, ‘மறுபடியும் பிறப்பது’ என கூறலாம்.
இந்தச் செய்தியை நீங்கள் வாசிக்கும் இவ்வேளையில் உங்களுக்கு இரட்சிப்பின் அனுபவம் உண்டா? என்ற கேள்வியை நீங்களே கேட்டுப்பாருங்கள்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இவ்வளவு பெரிதான இரட்சிப்புக்காக இயேசு ரத்தம் சிந்தினார். அவருடைய ரத்தத்தால் நம்முடைய பாவங்கள் முற்றிலும் கழுவப்படுவதற்குப் பெயர்தான் இரட்சிப்பு அல்லது மனந் திரும்புதல்.
ஆண்டவர் உங்களோடு பேசுகிறார்
ஒரு வேளை நீங்கள் இயேசுவை அறியாத நபராக இருந்தால் இந்த கட்டுரையின் வழியாக ஆண்டவர் உங்களோடு பேசுகிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அல்லது நீங்கள் ஒரு கிறிஸ்தவ நபராக இருந்தால் ‘நான் என் பாவங்களை எல்லாம் அறிக்கையிட்டு, இயேசுவின் ரத்தத்தினால் கழுவப்பட்டு, மறுபடியும் பிறந்த கிறிஸ்தவனா?’ என்று கேள்வி கேட்டுப்பாருங்கள்.
நாம் கிறிஸ்தவர்களாகப் பிறந்தபடியினாலும், கிறிஸ்தவ ஆலயங்களுக்குச் செல்லுகிறபடியினாலும் பரலோக பாக்கியமடையலாம் என நினைத்துவிடக்கூடாது. நம் அருமை ஆண்டவர் சிந்திய விலையேறப்பெற்ற ரத்தத்தால் பாவங்களை அறிக்கையிட்டு கழுவப்பட அர்ப்பணிக்க வேண்டும்.
உலக இன்பங்கள்
சிலர் இவ்விதமாய் நினைக்கிறார்கள், அதாவது வேலை செய்கிறேன், பணம் சம்பாதிக்கிறேன், வீடு வசதிகளோடு வாழ்ந்து வருகிறேன். பிறருக்கு விரோதமாய் எந்த தவறான காரியங்களையும் செய்யவில்லை. அனுதினமும் சந்தோஷமாகத் தான் இருக்கிறேன்.
அன்பானவர்களே, இவ்வுலக இன்பங்களுக்கு பெயர் சிற்றின்பமாகும். உங்கள் நடத்தையைக்கெடுக்கும் அனைத்து போதைகளும் பெயர் சிற்றின்பமாகும். அதாவது இதனால் நீங்கள் பெறும் இன்பம் நிரந்தரமற்றதாகும்.
அதே வேளையில் நம் அருமை ஆண்டவர் கொடுக்கிற சந்தோஷம் நிரந்தர மாகும். அதற்குப் பெயர் பேரின்பம் என வேதம் கூறுகிறது.
பேரின்பம்
உங்களை ஆண்டவர் ஒரு நோக்கத்தோடு அழைத்திருக்கிறார் என்பதை மறந்து விடாதீர்கள். இப்படிப்பட்ட இரட்சிப்பு என்று சொல்லப்படுகிற பேரின்பத்தைப் பற்றி ஒரு முறை கூட கேள்விப்படாத பல கோடி மக்கள் இந்தியாவில் உலகத்தை விட்டே போய் விட்டார்கள்.
இன்னும் பல கோடி மக்கள் உண்மையுள்ள ஜீவிக்கிற இயேசுவை அறியாமல் வாழ்ந்து வருகிறார்கள். ஆகவே உங்களை அழைக்கிற தேவன் உங்களுக்குக் கூறும் அன்பான அழைப்பு உலக சிநேகத்திற்கும், சிற்றின்பத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து ஆண்டவராகிய இயேசுவை நம்புங்கள். நீங்களும் உங்கள் பிள்ளைகளும் பேரின்பத்துடன் வாழ்ந்து சுகமாயிருப்பீர்கள்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஆமென்.
சகோ.ஜி.பி.எஸ்.ராபின்சன், இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள், சென்னை-54.
Related Tags :
Next Story