நேர்மை தவறாதீர்கள்
பழகுவதற்கு இனிமையானவன் மனிதன். ஒருவரது நற்குணங்கள் தான் அவனை நல்லவன் என்று இவ்வுலகத்திற்கு அறிமுகம் செய்து வைக்கிறது.
சிலர் ஆசை அல்லது வறுமை காரணமாக சமநிலையை இழக்கத் தொடங்குகிறார்கள். அதுவே பின்னர் நேர்மையற்ற தன்மைக்கு அவனை அழைத்துச் செல்கிறது.
நீதியும், நேர்மையும் மனிதனின் இரு கண்களைப்போன்றது. இதில் ஒன்று தவறினாலும் அவனது வாழ்க்கைப்பாதை தடுமாறத்தொடங்கிவிடும். இதுகுறித்து திருக்குர்ஆன் வசனம் (46:13) இவ்வாறு குறிப்பிடுகிறது:
‘எவர்கள், எங்கள் இறைவன் அல்லாஹ் தான் என்று கூறி (அவன் அருள் புரிந்த இவ்வேதத்தை நம்பிக்கை கொண்டு), அதில் நேர்மையாக நீடித்திருக்கின்றார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக யாதொரு பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்’.
நமது வாழ்க்கைக்கு அடிப்படையாக விளங்கும் வேதம் திருக்குர்ஆன். அது உண்மையானது, உறுதியானது, நிலையானது, நீதியானது என்று முழுயாக நம்பிச்செயல்பட வேண்டும். அது தான் நமது வேதத்திற்கு நாம் செய்யும் முதல்கடமை.
அந்த வேதம் சொல்கிறது, ‘நீங்கள் நபிகள் நாயகத்தையும் முழுமையாக பின்பற்றி நடக்க வேண்டும்’ என்று. அப்படியானால், குர்ஆனுக்கு விளக்கமாக நபிகள் நாயகம் இருக்கிறார்கள் என்பது தானே பொருள்.
‘நம்பிக்கையாளர்களே, நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். நீங்கள் (நம் வசனங்களை) செவியுற்ற பின் அதற்குக் கீழ்ப்படிவதிலிருந்து விலகாதீர்கள்’. (திருக்குர்ஆன் 8:20)
உங்களுக்கிடையில் ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள். உண்மையாகவே நீங்கள் உண்மையான நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து நடங்கள். (திருக்குர்ஆன் 8:1)
வேதத்தின் மொழிக்கும், தூதரின் வழிக்கும் நேர்மையாக நாம் நடந்து கொண்டால் அடுத்து நாம் செய்ய வேண்டியது நம்மைச் சுற்றி வாழும் மக்களுடன் நேர்மையாக நடந்து கொள்வது தான்.
‘அவர்கள் (தம் உடன்படிக்கைப்படி) உங்களுடன் நேர்மையாக நடந்து கொள்ளும்வரை நீங்களும் அவர்களுடன் நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோரை நேசிக்கின்றான்’. (திருக்குர்ஆன் 9:7)
நாம் எல்லோருடனும் நேர்மையாக நடந்து கொண்டால் தான் மற்றவர்களும் நம்மிடம் நேர்மையாக நடந்து கொள்வார்கள். நாம் எதைக் கொடுக்கிறோமோ அதைத்தானே நாம் பதிலாகப் பெறமுடியும்.
எனவே நமது சொல், செயல், உடை, நடை, பாவனை, கொடுக்கல், வாங்கல் என அனைத்திலும் நமது நேர்மையை வௌிப்படுத்திக் காட்டவேண்டும். எங்கே நாம் நேர்மை தவறுகிறோமோ அங்கே அநீதி ஆட்டம் போட ஆரம்பித்து விடுகிறது. எனவே நாம் எப்போதும் மிகக்கவனமாகவே இருக்க வேண்டும்.
‘நம்பிக்கையாளர்களே, அல்லாஹ்வுக்காக நீதமாக (உண்மை) சாட்சி சொல்பவர்களாகவே இருங்கள். ஒரு வகுப்பார் மீது (உங்களுக்கு)ள்ள துவேஷம் அவர்களுக்கு அநியாயம் செய்யும்படி உங்களைத் தூண்டாதிருக்கட்டும். (எவ்வளவு குரோதமிருந்த போதிலும்) நீங்கள் நீதியே செலுத்துங்கள். அதுதான் பரிசுத்தத் தன்மைக்கு மிக நெருங்கியது. (எத்தகைய சந்தர்ப்பங்களிலும்) நீங்கள் அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவனாக இருக்கின்றான்’ (திருக்குர்ஆன் 5:8).
நீதியும், நேர்மையும் என்றைக்கும் தவறவிட்டு விடக்கூடாத ஒன்று. அது நமது வாய்ச் சொல்லிலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் அது குறித்தும் திருக்குர்ஆன் இப்படி குறிப்பிடுகிறது:
‘நம்பிக்கையாளர்களே, நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான சொற்களையே கூறுங்கள். அவன் உங்களுடைய காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து, உங்களுடைய குற்றங்களையும் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகின்றாரோ, அவர் நிச்சயமாக மகத்தான பெரும் வெற்றியடைந்து விட்டார்’. (திருக்குர்ஆன் 33:70,71)
நேர்மையான ஒரு சொல் அது ஏற்படுத்தும் பின்விளைவுகள் என்னென்ன என்பதை இவ்வசனம் தௌிவாக விளக்கிக் காட்டுகிறது. முக்கியமாக நமது காரியங்கள் அனைத்தும் சீர்பெறும், நமது குற்றங்கள் மன்னிக்கப்படும்,
நேர்மை எனும் குணம் எங்கெல்லாம் இணைந்திருக்கிறதோ அங்கெல்லாம் நிம்மதி மலர்கள் நீடித்து மணம் பரப்புவதை கண்கூடாகக் காணலாம். இந்த உலகில் இறைத்தூதர்கள் பலர் இடைவிடாது வந்து சென்றதுக்கு முக்கியக் காரணம் நேர்மை எனும் மனிதப்பண்பு அவனை விட்டும் அறுந்து போய்விடக்கூடாது என்பதற்காகத் தான். ஒவ்வொரு வகுப்பினருக்கும் ஒரு தூதர் (நம்மால்) அனுப்பப்பட்டார்கள். அவர்களுடைய தூதர் (அவர்களிடம்) வந்த சமயத்தில் (அவரைப் பின்பற்றியவர்களை பாதுகாத்தும், பொய்யாக்கியவர்களை அழித்தும்) அவர்களுக்கிடையில் நீதமாகவே தீர்ப்பளிக்கப்பட்டது. அவர்களுக்கு (அணுவளவும்) அநியாயம் செய்யப்படவில்லை (திருக்குர்ஆன் 10:47).
“மத்யன் (எனும் ஊர்)வாசிகளுக்கு அவர்களுடைய சகோதரர் ஷுஐபை (நம்முடைய தூதராக அனுப்பி வைத்தோம்.) அவர் (அவர்களை நோக்கி) ‘என்னுடைய மக்களே, அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள்; அவனைத் தவிர வேறு இறைவன் உங்களுக்கு இல்லை. அளவையும் நிறுவையையும் குறைக்காதீர்கள். நீங்கள் நல்ல நிலைமையில் இருப்பதையே நான் காண்கிறேன். (அவ்வாறிருக்க அளவையும் நிறுவையையும் குறைத்து ஏன்மோசம் செய்கிறீர்கள்?. அவ்வாறு செய்தால்) நிச்சயமாக உங்களைச் சூழ்ந்து கொள்ளக்கூடிய வேதனை ஒரு நாளில் உங்களை வந்தடையும் என்று நான் பயபடுகிறேன்”.
“என்னுடைய மக்களே, அளவையும் நிறுவையையும் நீதமாகவே முழுமைபடுத்தி வையுங்கள். மனிதர்களுக்கு(க் கொடுக்க வேண்டிய) அவர்களுடைய பொருள்களைக் குறைத்து விடாதீர்கள். பூமியில் விஷமம் செய்து கொண்டும் அலையாதீர்கள்”.
“நீங்கள் உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் (உங்கள் தொழிலில் லாபகரமாக) அல்லாஹ் மீதப்படுத்துவதே உங்களுக்கு மிக்க மேலானதாகும். நான் உங்களைக் கண்காணிப்பவனல்ல; (அல்லாஹ் தான் உங்களைக் கண்காணிப்பவன். ஆகவே, அவனுக்கு நீங்கள் பயந்து நடந்து கொள்ளுங்கள்)” என்றும் கூறினார். (திருக்குர்ஆன் 11:84-86)
இன்றைக்கு நம்மைச் சுற்றி நடக்கும் யதார்த்த வாழ்க்கை எப்படி இருக்கிறது?, பொய்யும்-புரட்டும், லஞ்சமும்-மோசடியும், அநியாமும்-அட்டகாசமும், கொள்ளையும் திருட்டும், ஊழலும்-ஏய்ப்பும் என எங்கு திரும்பினாலும் நேர்மையற்ற நிலை தான் காணப்படுகிறது. இதை நாம் சீர் செய்ய வேண்டும் என்றால், முதலில் அதை நாம் தான் நம்மிடம் இருந்து தான் தொடங்கி வைக்க வேண்டும்.
எந்தவொரு நற்காரியத்தை நாம் செய்வதாக இருந்தாலும், அல்லது தீயதொரு காரியத்தை விடுவதாக இருந்தாலும் அது நமது மனஉறுதியில் தான் நிலைத்திருக்கிறது. எண்ணம் சரியாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும் என்பார்கள். அதுதான் உண்மை. நேர்மைப் பண்பு என்பது வௌியிலிருந்து வருவதல்ல, நம் மனதுக்குள்ளிருந்து தோன்றுவது.
நம் மனதை எப்போதும் ஆரோக்கியமானதாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் நம் வாழ்க்கை என்றென்றைக்கும் ஆரோக்கியமானதாக இருக்கும். ஒருவனின் வாழ்க்கை நலமானதாக அமைந்து விட்டால் அதை விட வேறு என்ன பாக்கியம் வேண்டும்.
வாருங்கள், நேர்மைப் பண்பைப் போற்றுவோம், நேர்மையின்மையை மாற்றுவோம்.
மவுலவி எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3.
Related Tags :
Next Story