பாடுகளின் பாதை, பரமனின் பாதை


பாடுகளின் பாதை, பரமனின் பாதை
x
தினத்தந்தி 7 Aug 2018 11:00 AM IST (Updated: 7 Aug 2018 11:00 AM IST)
t-max-icont-min-icon

படைப்பு இறைவனுடையது, புதுப்பித்தலும் அவரது சித்தத்துக்கு ஏற்ற ஒன்று. இறைவன் படைத்த இயற்கையை அழிப்பவர்களை எதிர்த்து நிற்க இறைவார்த்தை அறைகூவல் விடுக்கிறது.

திருமறையில் நாம் கற்கின்ற அடிப்படை விஷயம் என்னவென்றால், கடவுள் ஒரு மக்களினத்தை தனக்குரிய சொந்த மக்களாக தேர்ந்தெடுக்கிறார். பின்னர் அவர்கள் மூலம் உலக மக்கள் முழுவதையும் தனக்குரியவர்களாக மாற்றுகிறார். பல அரசர்களுடைய வாழ்க்கை விவிலியத்தில் இப்படித் தான் விவரிக்கப்படுகிறது.

ஆரம்பத்தில் இறைவனை அறியாமல் தவறான வாழ்க்கையும், தவறான வழிபாட்டு முறையும் கொண்டிருக்கின்றார்கள். பின்னர் அவர்களுக்கு இறைவார்த்தையைப் போதித்த இறைவாக்கினர்கள், கடவுளுக்கு நேராக அவர்களைத் திருப்புகிறார்கள்.

புதிய ஏற்பாட்டில் யூதர்கள், யூதரல்லாதோர் எனும் மாபெரும் இரண்டு பிரிவுகளை நாம் பார்க்கிறோம். பேதுரு யூதருக்கானவர் என்றும், பவுல் யூதர்கள் அல்லாதவர்களுக்கானவர் என்றும் நற்செய்தி அறிவித்தலில் நாம் பிரித்துப் பார்ப்பதுண்டு.

முழு மக்களினமும் மீட்பைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனும் இறைவனின் ஆர்வமும், ஆதங்கமுமே இவற்றில் வெளிப்படுகிறது.

ஒதுக்கி வைக்கப்பட்டவர்களாகவோ, நிராகரிக்கப்பட்டவர்களாகவோ எந்த மக்களினமும் இல்லை.

“யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும் திரளான மக்களைக் கண்டேன். அவர்கள் எல்லா நாட்டையும், குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள்; அரியணைக்கும் ஆட்டுக்குட்டிக்கும் முன்பாக நின்றுகொண்டிருந்தார்கள்” என்கிறது திருவெளிப்பாடு 7:9

மேசியாவின் ரத்தமும், வாழ்வும் தோல்விக்குரிய சிலுவைகளை வெற்றிகளாக மாற்றிவிட்டன. பாடுகளினாலும், துயரங்களினாலும் சோர்ந்து போனவர்கள், ரத்த காயம் அடைகிறார்கள். இப்படி வலியிலும், சோர்விலும் இருப்பவர்களை இன்னொரு தூய ரத்தம் கழுவுகிறது.

விளைவு, இவர்கள் வெண்மையாகிறார்கள். பிறருக்காக இறைமகன் சிந்திய ரத்தம் அடுத்தவர்களை சிவப்பாக அல்ல, வெண்மையாக மாற்றுகிறது.

தூயவர் தூய்மையான ரத்தத்தால் நம்மைக் கழுவுகிறார். ஆனால் அது எளிதாக நடைபெறுவதில்லை. அது பாடுகளின் வழியாக நாம் பயணிக்கும் போது தான் கிடைக்கிறது. அத்தகைய பாடுகளைச் சந்திக்கும் மன உறுதியை, ஆற்றலை தனது சீடர்களுக்கு இயேசு தருகிறார்.

“தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரை நியமித்தார்” (மார்க் 3:14) என்கிறது விவிலியம். தீமையை விரட்டவும், தீமையைத் தாங்கவும் இயேசு சீடர்களை வலுவூட்டுகிறார்.

“கடவுள் நமக்குக் கோழை உள்ளத்தினை அல்ல, வல்லமையும், அன்பும், கட்டுபாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ளார். கடவுளின் வல்லமைக்கேற்ப நற்செய்தியின் பொருட்டுத் துன்பத்தில் என்னுடன் பங்குகொள்” (2 கொரி 1:7,8) எனும் வசனங்கள் தீமோத்தேயுவை பவுல் ஆயத்தப்படுத்தும் நிகழ்ச்சியை விளக்குகிறது.

ஆண்டவர் தனது சீடர்களை வலுப்படுத்தியது போல, பவுல் தீமோத்தேயுவை பலப்படுத்துகிறார். ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைத் தான் முன்மாதிரியாக பவுல் பயன்படுத்துகிறார்.

எப்படி பிலாத்துவின் முன்னால் இறைமகன் இயேசு நின்றாரோ, அதே உறுதியோடு நிற்கவேண்டும் என பவுல் உற்சாகமூட்டுகிறார்.

இயேசுவுக்காக பாடுகளையும், நிந்தைகளையும் அவரது சீடர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது கட்டாயம். அதை நிராகரித்து விட்டு நாம் கிறிஸ்தவ வாழ்க்கைக்குள் பயணிக்க முடியாது.

பாடுகளின் வழியாக வெளிப்படுவது தான் நற்செய்தி. துன்புறுத்தப்படுவதும், பாடு அனுபவித்தலும் கிறிஸ்தவ வாழ்க்கையில் உண்டு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதை இயேசு தனது நற்செய்தியில் தெளிவாக உரைத்திருக்கிறார்.

“தங்கள் தொழுகைக்கூடங்களில் உங்களைச் சாட்டையால் அடிப்பார்கள். என்பொருட்டு ஆளுநர்களிடமும் அரசர்களிடமும் உங்களை இழுத்துச்செல்வார்கள்” என்கிறது மத்தேயு நற்செய்தி.

பின்வாங்குவது எப்படி என்பதை யோசிக்க அல்ல, முன்னேறிச் செல்ல இயேசுவின் வார்த்தைகள் நமக்கு துணிச்சல் அளிக்க வேண்டும்.

பாடுகளையும், துன்பத்தையும் ஏற்று நாம் உலகத்தலைவர்களின் முன்னால் நிற்கும் போது என்ன பேசவேண்டும் என்பதை தூய ஆவியானவர் உணர்த்துவார் எனும் இறை வார்த்தை நமக்கு ஆறுதலாய் இருக்கிறது.

“ஆனால் அவரது ஞானத்தையும் தூய ஆவி வாயிலாக அவர் பேசிய வார்த்தைகளையும் எதிர்த்து நிற்க அவர்களால் இயலவில்லை” என ஸ்தேவான் குறித்த இறைவார்த்தை நமக்கு அதை நிரூபித்துக் காட்டுகிறது.

‘இயேசுவுக்காக தனது உயிரையே கையளித்த முதல் ரத்த சாட்சி’ என கிறிஸ்தவ வரலாற்றில் ஸ்தேவான் நிரந்தர இடம் பிடித்து விட்டார்.

நமது உடலைப் பாதுகாப்பது அல்ல முக்கியமானது, நமது ஆத்மாவை நாம் காத்துக்கொள்ள வேண்டும். பாடுகள் நமது உடலை ஊனமாக்கலாம், ஆனால் நமது ஆத்மாவை நாம் தூயதாகக் காத்துக் கொள்ள வேண்டும்.

இயேசுவுக்காக மரித்த சீடர்களெல்லாம் மீட்பின் நிச்சயத்தோடு மரித்தார்கள். இறைவனோடு இணைந்திருப்போம் எனும் உறுதியுடன் தங்கள் உயிரையே கையளித்தார்கள்.

அந்த உறுதி நமக்கு இருக்க வேண்டும். அதற்கு இறைமகனை விசுவாசித்து, அவரால் தூய்மையாக்கப்பட்டு, அவருக்காகப் பாடுகளில் பயணிக்க வேண்டும்.

பாடுகள் உடலைக் கொல்லலாம், ஆனால் நமக்கு இறைவன் அருளப்போகும் நிலைவாழ்வை அழிக்காது என்பதைப் புரிந்து கொள்வோம். இறைவனின் அருள் நமக்கு வலிமை ஊட்டும். 

Next Story