மழைக்காக வித்தியாசமான வேண்டுதல் செய்த சித்தர்


மழைக்காக வித்தியாசமான வேண்டுதல் செய்த சித்தர்
x
தினத்தந்தி 26 Jun 2018 3:54 PM IST (Updated: 26 Jun 2018 3:54 PM IST)
t-max-icont-min-icon

சுள்ளென்று சுட்டெரித்துக் கொண்டிருந்த பகல் பொழுது வானம், மழையை பொழிந்தது. பெரியசாமி சித்தரின் தேகம் குளிர்ந்தது.

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகாவில் உள்ள குக்கிராமத்தில் தான் பெரியசாமி என்ற சிறுவன் வசித்து வந்தான். அப்போது நம் நாட்டில் வெள்ளையர்கள் ஆதிக்கம் நடந்து கொண்டிருந்தது. பெரியசாமியைத் தவிர அந்த கிராமத்தில் இருந்த அனைவரும் வேறு ஒரு மதத்திற்கு மாறியிருந்தனர். ஏன் பெரியசாமியின் குடும்பத்தினரும் கூட மதம் மாறியிருந்தனர். அவனுடைய வீட்டில் மொத்தம் 7 பிள்ளைகள். அதில் பெரியசாமியின் எண்ணத்தில் மட்டும் ஈசன் இருந்து ஆட்சி செய்து கொண்டிருந்தார்.

அனுதினமும் சிவனையே பூஜித்து வந்தான். ஆனால் அவனது வழிபட்டிற்கு வீட்டில் உள்ளவர்களாலேயே இடையூறு ஏற்பட்டதால், அந்தச் சிறுவன் அங்கிருந்து புறப்பட்டு திருவண்ணாமலை சென்றான். அங்கு சிவனை வணங்கி அண்ணாமலையாரே கதி என்று கிடந்தான்.

காலங்கள் பல கழிந்து விட்டன. அவனது வயதும் உயர்ந்து விட்டது. திருவண்ணாமலையில் தான் பெரியசாமி சித்தராக உருமாறினார். அதை அவரது கனவில் தோன்றி சிவபெருமான் உணர்த்தினார். ஒருநாள் இறைவழிபாட்டை முடித்து விட்டு, மடம் ஒன்றில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவரது கனவில் தோன்றிய ஈசன், ‘என் புகழ் பரப்பி, எனக்கு உனது பிறப்பிடமான தென்தமிழகத்தில் கோவில் ஒன்றைத் எழுப்புவாயாக. அந்தக் கோவில் தென் திருவண்ணாமலை என திகழும்' என்றுரைத்தார்.

விழித்தெழுந்தப் பெரியசாமி சித்தர் திகைத்தார். அவரது எண்ண ஓட்டம் பலவாறாக ஓடியது. ‘நமது ஊரோ வேறு ஒரு மதத்தை தழுவியிருக்கும் பகுதி. அங்கு எப்படி திருவண்ணாமலையை உருவாக்க முடியும்?’ என்று நினைத்தார்.

ஆனால் இறைவனே சொல்லி விட்டார், இனி தடையில்லை என்று மனதை தைரியப்படுத்தினார். ஒரு கார்த்திகை திருநாள் அன்று, தீபம் ஏற்றும் வேளையில் திருவண்ணாமலையே களை கட்டியிருந்தது. அனைவரும் மலையை நோக்கி தீபம் ஏற்றக் கிளம்பினர். இவரும் மலை மீது ஏறி தீபமேற்றலாம் எனச் சென்றார். அப்போது ஒருவர் அவரை தடுத்தார்.

கோபமடைந்த பெரியசாமி சித்தரோ.. ‘நீங்கள் அண்ணா மலையாரின் தீபத்தை மலையில் ஏற்றுகிறீர்கள். நான் தலையிலேயே ஏற்றுகிறேன்' என்று சபதமிட்டார்.

அதன் பிறகு ஒரு நிமிடம் கூட அங்கே நிற்கவில்லை. சிவபெருமானை நோக்கி, ‘பெருமானே! நீ கனவில் கூறியபடி தென்திருவண்ணாமலை அமைக்க என்னோடு வா..' என கூறி, அங்கிருந்து பிடிமண்ணை எடுத்துக்கொண்டார். பின் கோபுரத்தை நோக்கி இரு கைகளையும் தூக்கி வணங்கினார். ‘இறைவா என்னோடு வா. தென்னாட்டு மக்களுக்கு உன் அருளாசியைத் தா' என்று வேண்டியபடி, ஊரை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

பல இடங்களில் உள்ள சிவ தலங்களை வணங்கியபடியே சங்கரன்கோவில் வந்தடைந்தார். சங்கர நாரயணரை மனதுருக வேண்டிக்கொண்டு, தான் பிறந்த ஊருக்கு வந்து சேர்ந்தார். அங்கு, திருவண்ணாமலையில் இருந்து கொண்டு வந்த பிடி மண்ணை வைத்து சிவ பூஜை செய்யத் தொடங்கினார். அவரது வழிபாட்டிற்கு அவரது சகோதரர்கள் இடையூறு செய்தனர்.

‘இனி இங்கிருப்பது உகந்தது அல்ல’ என நினைத்து, அங்கிருந்து திருவண்ணாமலை பிடி மண்ணுடன் பனவடலி சத்திரம் என்ற ஊருக்கு வந்தார். அங்கேயும் அவரால் சிவ வழிபாட்டை சரியாகத் தொடர முடியவில்லை. அங்கிருந்து மேற்கே 6 கிலோமீட்டர் தொலைவில் அழகான மலையைக் கண்டார். ஆகா.. இது வல்லவோ.. தென் திருவண்ணாமலை என ஆனந்தக் கூத்தாடினார். அம் மலையின் அடிவாரம் அப்போது முத்து கிருஷ்ணாபுரம் என அழைக்கப்பட்டது. முத்துகிருஷ்ணாபுரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தேர்வு செய்தார். அவ்விடத்தில் பிடி மண்ணை வைத்து வணங்க ஆரம்பித்தார்.

இறைவனிடம் தான் இசைந்தது போலவே இவ்வூரை திருவண்ணாமலையாக்க வேண்டுமே, தன்னை மலை மீது ஏறக் கூடாது என தடுத்தவரிடம், தலையில் தீபம் ஏற்றுவேன் என்று சபதமிட்டோமே.. அதை நிறைவேற்ற வேண்டுமே.. முதலில் இவ்விடம் இறைவனுக்கு முழுவதும் சொந்தமான இடமாகவேண்டும் என்று நினைத்தார்.

அதற்காக அந்த இடத்துக்குச் சொந்தக்காரனமான ஊத்துமலை ஜமீன்தார் இருதாலய மருத்தப்ப தேவரிடம் சென்றார். ‘சிவபெருமானுக்கு கோவில் கட்ட இடம் தரவேண்டும்’ எனக் கேட்டார்.

அவரும் அதற்கு இணங்கி தற்போது கோவில் உள்ள இடத்தைத் தானமாக கொடுத்து விட்டார். அதுவரை முத்துகிருஷ்ணாபுரம் என அழைக்கப்பட்ட அவ்வூர், அதன்பிறகு ‘அண்ணாமலை புதூர்’ என்று அழைக்கப்பட்டது.

தீபத்தைத் தலையில் சுமக்க பெரியசாமி சித்தர், நாள் குறித்தார். திருக்கார்த்திகை தினத்தன்று, தனது தலையில் துளசி மாலையை, சும்மாடு போல் மடக்கிக் கட்டிக் கொண்டார். அதற்குள் மிகப்பெரிய திரியை தயார் செய்து, எண்ணெய் விட்டு தீபம் எரியச் செய்தார். இதை ஊரே அதிசயமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

‘வெறும் தலையில் சாமியார் தீபம் எரிய விடுகிறார். அத்தீபம் விடிய விடிய எரிகிறது’ என்ற செய்தி காட்டூத்தீ போல அக்கம் பக்கத்தில் உள்ள கிராமங்களுக்கு பரவியது. இதனால் மக்கள் பெரியசாமி சித்தரை அதிசயத்துடன் காண ஓடோடி வந்தனர். அவருக்கு வேண்டிய உதவிகளை காணிக்கையாகக் கொடுத்தனர். அந்த காணிக்கையை சிவ தொண்டுக்கு சித்தர் பயன்படுத்தினார்.

அவ்வூரில் அண்ணாமலையாருக்கு சிறியக் கோவில் ஒன்றை கட்டினார். அங்கே இறைவனின் ஐம்பொன் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட ஆரம்பித்தார். அச்சிலை தற்போதும் கர்ப்பக்கிரகத்தில் மூலவர் சிலைக்கு வலப்புறத்தில் உள்ளது. மூலவராகக் கல்லால் ஆன சிவலிங்கமும் காணப்படுகிறது. திருவண்ணாமலையில் சிவனின் பின்புறத்தில் மேற்கு திசையில் மலை காணப்படும். தென் திருவண்ணாமலையான இங்கே சிவனின் முன் புறத்தில் கிழக்கு திசையில் மலை காணப்படுகிறது. இங்குள்ள மலைமீது சப்தக்கன்னிமார் கோவிலும் உள்ளது. தெப்பக்குளமும் இருக்கிறது.

பெரியசாமி சித்தர், சுமார் 3 ஆயிரம் அடி உயரமுள்ள இந்த மலைக்கு தினமும் சென்று விடுவார். அங்குள்ள தெப்பக்குளத்தில் நீராடுவார். அதன் பின் அங்கிருந்து அபிஷேகம் செய்யக் குடத்தில் நீரை எடுத்துக்கொண்டு கீழே இறங்கி கோவிலுக்கு வருவார். தினந்தோறும் பெரியசாமி சித்தரின் வழிபாடு மலையில் உள்ள தெப்பக்குள நீரில் தான் நடந்துள்ளது.

ஆரம்பக் காலக்கட்டத்தில் தனியொரு மனிதனாகவே மலைமீது ஏறி கார்த்திகை தீபம் ஏற்றியுள்ளார். மலை மீது தீபம் எரிவதைப் பார்த்த மக்களுக்கு பெரும் ஆச்சரியம். ‘திருவண்ணாமலையில் தீபம் எரிவதைப் போல, நம்மூர் பகுதியிலும் தீபம் எரிகின்றதே’ என்று சுற்றுவட்டார மக்கள் ஆச்சரியப்பட்டனர். மலை மீது தீபம் எரிவது வருடந்தோறும் திருக்கார்த்திகை நாளில் வழக்கமானது. ஒரு முறை மலை மீது எரியும் தீபத்தைப் பார்க்க மறுநாள் காலையில் பொதுமக்கள் சிலர் மலைக்குச் சென்றுள்ளனர். சென்றவர்களுக்கு பெருத்த ஆச்சரியம்.

ஆம்.. தீபம் எரிந்தது மலை மீது அல்ல.. மலையில் அமர்ந்து தவம் இயற்றிக்கொண்டிருந்த பெரியசாமி சித்தரின் தலை மீது. இதைக் கண்டு மக்கள் அனைவரும் பெரியசாமி சித்தரை வணங்கத் தொடங்கினர். அதன்பிறகுதான் ஊரார் ஆதரவு கிடைத்தது.

அடுத்து வந்த வருடங்களில் பெரியசாமி சித்தர், தலையில் ஏற்றிய தீபத்துடன் வீடு வீடாகச் சென்று அருளாசியும் வழங்கி உள்ளார். தீபம் அணைந்து விடாமல் இருக்க ஒவ்வொரு வீட்டிலும் எண்ணெய் ஊற்ற ஆரம்பித்தனர். அப்படி எண்ணெய் ஊற்றினால், அவர்களுக்கு வேண்டிய வரமெல்லாம் கிடைக்கிறது என நம்பிக்கை மக்களுக்கு பிறந்தது.

கொதிக்கும் எண்ணெய் தலை வழியாக அவர் தேகமெல்லாம் வழிந்தோடினாலும், அதனால் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டதில்லையாம். சித்தர் மீது மிகவும் பாசம் கொண்ட பலர் தங்களது தேவைகளைக் கேட்டறிந்து, அது நிறைவேறியவுடன் அவருக்கு காணிக்கையையும் வழங்கி வந்தனர்.

ஒரு நாள் இப்பகுதியில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. இதனால் தண்ணீர் இன்றி மக்கள் தவித்தனர். பெரியசாமி சித்தரிடம் வந்து வாக்கு கோரினர். அவர், ‘4 கிலோ மிளகாய் வத்தல் கொண்டு வாருங்கள்' என்றார்.

மக்களும் அதுபோலவே செய்தனர். அவர் அந்த வத்தலை சிவபெருமான் முன்பு பரப்பி வைத்தார். அதன் பின் விரதம் மேற்கொண்டு, வெறும் வயிற்றில் வத்தலை சாப்பிட ஆரம்பித்தார். அனைவரும் திகைத்தனர். வத்தலை வெறும் வயிற்றில் சாப்பிடுகிறாரே.? அய்யோ.. சுவாமிக்கு என்ன ஆச்சு என்று துடித்தனர்.

பெரியசாமி சித்தர், அங்குள்ள ஓடக்கரையில், சூரியன் சுட்டெரிக்கும் மணலில் படுத்து உருண்டார். வத்தல் சாப்பிட்டதால் உடலுக்குள் எரிச்சல், சுட்டெரிக்கும் வெயிலால் உடலுக்கு வெளியிலும் எரிச்சல். சித்தரின் முரட்டுத் தனமான பக்தியின் தவத்தை மெச்சிய வருண பகவான், கண் திறந்தார்.

சுள்ளென்று சுட்டெரித்துக் கொண்டிருந்த பகல் பொழுது வானம், மழையை பொழிந்தது. பெரியசாமி சித்தரின் தேகம் குளிர்ந்தது. ஓடக்கரையில் தண்ணீர் வழிந்தோடத் தொடங்கியது. அந்த பூமி மழையால் செழிக்க ஆரம்பித்தது. மக்கள் மகிழ்ச்சியின் உச்சியில் இருந்தனர். பெரியசாமி சித்தரின் அருளாசியை நினைத்து பக்திப் பரவசம் கொண்டனர்.

பெரியசாமி சித்தர், ஊர் ஊராக சென்று மக்களிடம் காணிக்கை பிரித்து, சுமார் 75 ஏக்கர் நிலம் வாங்கிக் கோவிலுக்கு எழுதி வைத்தார். அதோடு மட்டுமல்லாமல் கோவிலுக்கு ஒரு கல் மண்டபமும் கட்டினார். தன்னுடைய சொந்த முயற்சியில் தெப்பக்குளம் வெட்டி, கோவிலுக்கு தெப்ப உற்சவமும் நடத்தினார்.

கோவிலை மென்மேலும் உயர்த்த வேண்டும் என நினைத்த அவர், தீபத்தைத் தலையில் எரிய விட்டப் படியே இரவு நேரத்தில் பல ஊருக்கு சென்று காணிக்கை பிரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

பக்கத்து கிராமத்தில் திருடர்கள் தொந்தரவு இருந்தக் காலம் கட்டம் அது. பல இடங்களில் இரவு தீ வெட்டி திருடர்கள் கூட்டமாக வந்து ஊரைக் கொள்ளையடித்துச் சென்று விடுவார்கள்.

ஒருநாள் பெரியசாமி சித்தர், தலையில் தீபம் ஏற்றியபடி ஒரு கிராமத்துக்கு காணிக்கை பிரிக்கச் சென்றார். அப்போது அவருடன் அவர் மீது அதிக பக்தி கொண்டவர்கள் சிலரும் சென்றனர். வருவது தீவெட்டி திருடர்கள் என நினைத்து ஊர்மக்கள் தீடீரென்று இவர்களை சுற்றி வளைத்தனர். தொடர்ந்து தாக்கவும் ஆரம்பித்து விட்டனர். உடன் வந்தவர்கள் எல்லாம் ஓடி விட்டனர். தலையில் சுடருடன் நின்ற பெரியசாமி சித்தரை, பொதுமக்கள் அனைவரும் திருடர்களின் தலைவன் என்று நினைத்தனர்.

சித்தரை குறிப்பிட்ட ஓரிடத்தில் நிறுத்தினர். 10 கட்டு காய்ந்த ஓலையைக் கொண்டு வந்து, அவரைச் சுற்றிப் போட்டனர். பின்னர் தீயைக் கொளுத்தினர். சித்தர் தப்பித்து சென்று விடக்கூடாது என்று சுற்றி வளைத்து நின்று கொண்டனர். 10 கட்டு ஓலையும் எரிந்து சாம்பலானது.

இப்போது சுற்றி நின்ற பொதுமக்கள் அனைவரும் திகைப்பில் மூழ்கியிருந்தனர்.

Next Story