ஆச்சரியங்கள் நிகழ்த்திய அரிய நவமணிகள்


ஆச்சரியங்கள் நிகழ்த்திய அரிய நவமணிகள்
x
தினத்தந்தி 8 Aug 2017 3:48 PM IST (Updated: 8 Aug 2017 3:48 PM IST)
t-max-icont-min-icon

நவமணிகளில் மீதமுள்ள நாகமணி, கஜமணி, மூங்கில்மணி, திமிங்கலமணி மற்றும் மேகமணி பற்றிய பலசுவையான தகவல்களை இந்த வாரம் பார்க்கலாம்...

வரத்தினங்களின் வரிசையில் மேலும் பலவிதமான மணிகள் இருப்பதாகவும், அத்தகைய மணி வகைகள் பல்வேறு உயிரினங்களின் உடலில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இயற்கையாக உருவாவது பற்றியும், அவை ரகசியமான தந்திரா முறையில் பூஜைகளில் பயன்படுத்தப்படுவது பற்றியும் கடந்த வாரம் பார்த்தோம். மேலும் நவமணிகளில் சங்குமணி, வராகமணி, மச்சமணி, ஆணிமுத்து ஆகியவை பற்றி தெரிந்து கொண்டோம். 

நாக மணி

பழங்காலத்தில் இருந்தே அனைவரது கவனத்தையும் ஈர்த்து வந்திருக்கும் செய்திகளில் ஒன்று நாகமணி பற்றியது. இதில் பெரும்பாலானவை புனை கதைகளாக இருக்கின்றன. அவற்றில் அறிவியல் பூர்வமான தகவல்கள் ஏதேனும் இருக்கிறதா? என்றால் பதில் இல்லை. ஆனால், நாகத்தின் தலைப் பகுதியில் மணி இருப்பதும், அவை சாதாரண தோற்றத்துடன் காணப்படுவதும் படங்களாக வெளியிடப்பட்டுள்ளது. அது பற்றிய தகவல்கள் பரவலாக பல வலைத்தளங்களில் இப்போது காணக்கிடைக்கின்றன.

நாக மணியானது முட்டை வடிவத்தில் இருப்பதாகவும், ஒளி ஊடுருவும் தன்மை கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. இரவில் ஒளி வீசுமா? என்பது பற்றிய தகவல்கள் இல்லை. 2 செ.மீ அளவு நீளம் மற்றும் அகலம், 6 கிராம் அளவுக்கு எடை கொண்டவையாக அவை இருக்கின்றன. பொன்னிறம், மெல்லிய பச்சை, இளஞ்சிவப்பு, கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய நிறங்களில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

‘பிருஹத் சம்ஹிதை’ மற்றும் கருட புராணம் ஆகிய வற்றில் நாகமணி பற்றிய தகவல்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. பெரும்பாலும் அக்காலத்திய அரசர்கள் தங்களுடன் நாகமணிகளை வைத்திருந்ததாக தகவல்கள் உள்ளன. அதன் மூலமாக அவர்களுக்கு விஷ பயங்கள் நீங்கவும், பாம்புகளால் உயிருக்கு ஆபத்து வராமல் இருக்கவும் அந்த மணிகள் உதவிபுரிவதாக அவர்கள் பெரிதும் நம்பினார்கள்.

கஜ மணி

யானை மணி என்று அழைக்கப்படும் கஜ மணி, அவ்வளவாக வெளியில் அறியப்படாததாக இருந்தாலும் புகழ் பெற்ற மனிதர்களால் ரகசியமாக பயன்படுத்தப்பட்டு வந்திருப்பதாக செவிவழி செய்திகள் நிறைய இருக்கின்றன. வராகமிகிரர் தமது நூலில் கஜ மணியின் தோற்றம் பற்றி ஆச்சரியமான ஜோதிட விளக்கத்தை தந்திருக்கிறார். அதாவது, ‘உத்தராயண புண்ணிய காலத்தின் தொடக்கமான தை மாதத்தில் வரும் திங்கட்கிழமையன்று, பூசம் நட்சத்திரத்தில் ஏற்படும் சந்திர கிரகணம் மற்றும் ஞாயிற்றுக்கிழமையன்று திருவோணம் நட்சத்திரத்தில் ஏற்படும் சூரிய கிரகணம் ஆகிய காலங்களில் பிறக்கும் யானைகளின் நெற்றியில் கஜ மணி உருவாகும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அக்கால மன்னர்கள் அந்த நேரத்தில் பிறக்கும் யானைகளை தமது நாட்டின் பட்டத்து யானையாக பயன்படுத்தி வந்த தோடு, அவை இறந்த பிறகு, அவற்றின் நெற்றியான மத்தக பகுதியில் இருக்கும் கஜமணியை பத்திரமாக எடுத்து, தனது பரம்பரைக்கு தந்திருக்கிறார்கள். கருட புராணத்திலும் கஜமணி பற்றிய குறிப்புகள் இருக்கின்றன.

யானையின் தந்தம் ஆரம்பிக்கும் பகுதிக்கு சற்று மேலாக உள்ள நெற்றிப் பகுதியில் தோன்றுவதாக கூறப்படும் கஜமணியானது விலை மதிப்பற்றதாகும். பொருளாதார வசதி படைத்தவர்கள் கஜமணியை பயன்படுத்தி தங்களது வாழ்க்கை தரத்தை மேலும் உயர்த்த முயற்சி செய்திருக்கிறார்கள். மன்னர்கள் தங்களது உடல் வலிமைக்கும், வெற்றிக்கும், அறிவுப்பூர்வமான குழந்தைகள் பிறக்கவும் கஜமணி உதவி செய்வதாக நம்பினார்கள். முட்டை வடிவத்தில், பவுர்ணமி சந்திரனைப்போலவும், மெல்லிய வண்ணங்களில் கஜமணி இருப்பதாக சொல்லப்படுகிறது.

மூங்கில் மணி

புல் வகையைச் சேர்ந்த மூங்கிலில் தோன்றும் இந்த மணி பற்றி, அவ்வளவாக தகவல்கள் இல்லை. ஆனால் காடுகளில் வசிக்கும் பழங்குடி மக்களில், ஒரு சில வயதானவர்களுக்கு மூங்கில் மணி பற்றி தெரிந்துள்ளது. அவை பொதுவாக தங்க நிறத்தில் அல்லது ஒளிரும் பச்சை நிறத்தில் கற்பூரக் கட்டி போல இருப்பதாக சொல்கிறார்கள். நான்கு வேதங்களில் மூன்றாவதாக உள்ள சாம வேதத்தில் வரக்கூடிய ‘மகா உபநிஷதம்’ மூங்கில் மணியைப் பற்றி, ‘பக்குவ நிலையை அடைந்த பாக்கியசாலிகள், தங்களது கடைசி பிறப்பில் மூங்கிலில் உருவாகும் முத்துகளை காண்பார்கள்’ என்று சொல்லுகிறது.

‘தெய்வீக அம்சங்கள் நிரம்பிய இடத்தில் உயர்ந்த வகை மூங்கில்களின் அடித்தண்டில் இவ்வகை மணிகள் தாமாகவே உருவாகும். அவை உருண்டையான பனிக்கட்டிகளை போன்று பளபளப்பாகவும், ஒளி ஊடுருவக்கூடியதாகவும் இருக்கும்’ என்று கருட புராணம் கூறுகிறது.

ஜோதிட வல்லுனர் வராகமிகிரரும் தமது நூலில் மூங்கில் மணியானது, ‘கற்பூரக் கட்டி அல்லது கண்ணாடி கட்டி போன்றும், வட்டம் அல்லது நீள் வட்ட வடிவத்தில் பளபளப்பாக இருக்கும். அதை வைத்திருப்பவர்கள் புகழ்மிக்க பிள்ளைகளும், நிறைந்த தனமும், ஆரோக்கியமான உடலும் பெற்று அரசர்களைப்போல வாழ்வார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

திமிங்கல மணி

நீண்ட காலம் கடலுக்கு சென்று மீன் பிடித்து வரும் மீனவர்களில் பலருக்கும் திமிங்கல மணி பற்றி தெரிந்துள்ளது. அது பற்றி அறிந்தவர்கள் திமிங்கலங்கள் பிடிபடும்போது சம்பந்தப்பட்ட மீனவர்களை சந்தித்து அதை பெற்றுக்கொள்வதாக சொல்கிறார்கள். பொதுவாக அவை சிறு கூழாங்கல் அளவுக்கு முட்டை வடிவத்திலும், பல்வேறு வகைகளிலும் இருப்பதாக கூறப்படுகிறது.

கருட புராணம்... இவ்வகை மணியானது, திமிங்கலத்தின் வாயின் உட்புறத்தில் உருவாவதாக குறிப்பிடுகிறது. ஜோதிட ஆச்சாரியரான வராகமிகிரரும், ‘மீனின் கண்களை போல பளபளப்பாகவும், தூய்மையாகவும், நீள்வட்ட வடிவத்திலும் உள்ள திமிங்கல மணியானது விலை மதிப்பற்றது’ என்று குறிப்பிடுவதோடு, ‘அந்த மணியை துளைகள் இடப்படாமல் அணிவது முக்கியம்’ என்றும் தெளிவுபடுத்துகிறார்.

குற்றமில்லாத திமிங்கல மணியானது மனதை உயர்ந்த நிலைக்கு அழைத்துச்செல்லும் தன்மை படைத்ததாம். இது மன வலிமையை அதிகரிக்க செய்வதாக நம்பப்படுகிறது. மேலை நாடுகளில் பல்வேறு வடிவங்களில் அவை கண்டுபிடிக்கப்பட்டு அதிக விலைக்கும் விற்கப்படுகின்றன. திமிங்கல மணிகள் பெரும்பாலும் ‘டாலர்’ போன்று செய்து அணியப்படுகிறது.

மேக மணி

முற்றிலும் ஆச்சரியத்தை விளைவிக்கக்கூடிய மணிகளாக இவை இருக்கின்றன. ‘மேகத்திலிருந்து மணி தோன்றுமா?’ என்றுதான் இன்றைய நிலையில் நாம் நினைப்போம். ஆனால் அவை பற்றி படங்களுடன் நமக்கு காட்டியிருக்கிறார்கள். அறிவியலின் பார்வையில் மேக மணி என்பது ஏற்று கொள்ளப்படாவிட்டாலும், அதை விரும்புபவர்களும் இருக்கிறார்கள். பகவான் கிருஷ்ணர் தம்முடன் ஒரு உயர்ந்த வகை மேக மணியை வைத்திருந்ததாக புராணச் செய்தி உண்டு.

வராகமிகிரர் தனது நூலில், ‘காற்றில் இருக் கும் பல அடுக்குகளில், ஏழாவது அடுக்கில் உண்டாகும் மேகக்கூட்டங்களில் ஏற்படும் மின்னல் வழியாக வரும் ஒளியானது மழை நீர் பட்டு மணியாக மாறி பூமிக்கு வருகிறது. அவை பூமியில் விழுவதற்கு முன்பாக தேவர்கள் அதை கைப்பற்றி சென்று விடுகிறார்கள்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

பொதுவாக மேக மணிகள், ஒரு முட்டையின் அளவிலும், நீல வானின் வண்ணத்தில் பளபளப்பாக ஒளிரும் பனிக்கட்டி போன்றும் இருப்பதாக சொல்லப்படுகிறது. ‘இரவிலும் ஒளிவிடும் மேக மணியை தம்மிடம் வைத்திருப்பவர், அரசனுக்கு இணையான அந்தஸ்தை அடைவது உறுதி’ என்று கருட புராணம் சொல்கிறது.

அடுத்தவாரம் ஸ்படிகம் பற்றி பார்ப்போம் 

Next Story