தானத்தை பொறுத்தே பலன் கிடைக்கும்


தானத்தை பொறுத்தே பலன் கிடைக்கும்
x
தினத்தந்தி 24 Jan 2017 12:46 PM IST (Updated: 24 Jan 2017 12:46 PM IST)
t-max-icont-min-icon

அந்த ஊரில் ஒரு துறவி இருந்தார். அவரின் உபதேசங்களைக் கேட்டு பலரும் இன்பமான வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருந்தனர். இதனால் அவரைத் தேடி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது.

ந்த ஊரில் ஒரு துறவி இருந்தார். அவரின் உபதேசங்களைக் கேட்டு பலரும் இன்பமான வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருந்தனர். இதனால் அவரைத் தேடி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. அதே ஊரில் ஒரு செல்வந்தன் இருந்தான். ஆனால் அவன் ஒரு கருமி. அவனுக்கும் மோட்சம், முக்தி என்பதெல்லாம் தெரியும். ஆனால் அதற்கு தான, தர்மங்கள் செய்ய வேண்டும் என்பதுதான் அவனுக்கு முடியாத காரியமாக இருந்தது. செலவில்லாமல் எப்படி மோட்சத்தை அடைவது என்று எண்ணினான்.

அப்போது அவனுக்கு துறவியின் நினைவு வந்தது. நேராக அவரிடம் சென்றான். துறவியைப் பார்த்து வணங்கினான். பின்னர் அவரிடம், ‘சுவாமி! எனக்கு மோட்சம் கிடைக்க வழி சொல்ல வேண்டும்’ என்று கேட்டான்.

அவனைப் பார்த்த துறவி, ‘சரியப்பா.. மோட்சம் கிடைக்க வேண்டும் என்றால், சாஸ்திரங்கள் சொல்கிறபடி நடந்து கொள்ள வேண்டும். அது கூறும் மார்க்கத்தை கடைப்         பிடிக்க வேண்டும். அதாவது யாராவது ஏழை பசியோடு வந்தால் அன்னமிடவேண்டும். மேலும் தான, தர்மங்கள் செய்து வந்தால், மோட்சம் கிடைக்கும்’ என்றார்.

துறவி சொன்னதை காது கொடுத்து கேட்டுக் கொண்ட செல்வந்தன், அவரை வணங்கி விட்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தான். துறவியின் வார்த்தைகளை நினைவுபடுத்திப் பார்த்தான். தினமும் தான, தர்மங்கள் செய்ய வேண்டும் என்ற துறவியின் வார்த்தைகள் காதில் எதிரொலித்தன. இல்லாதவர்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்தால், நம்முடைய செல்வம் அல்லவா குறைந்து போய்விடும் என்று எண்ணியவன், ஒரு முடிவுக்கு வந்தான்.

அதன்படி தினமும் யாராவது ஒரு பிச்சைக்காரனுக்கு, ஒரு கைப்பிடி அளவு மட்டும் அரிசியை தானமாக செய்து வந்தான். சில மாதம் சென்றது. மீண்டும் துறவியைச் சந்திப்பதற்காக அந்த செல்வந்தன் சென்றான்.

துறவியை வணங்கினான். அவனைப் பார்த்ததும், ‘என்னப்பா.. தினமும் நல்ல முறையில் தான, தர்மங்கள் செய்கிறாயா?’ என்று கேட்டார் துறவி.

அதற்கு அந்த செல்வந்தன், ‘ஆமாம் சுவாமி! தினமும் யாராவது ஒருவருக்கு ஒரு கைப்பிடி அளவு அரிசி தானமாக தந்து வருகிறேன்’ என்றான். அவனது வார்த்தை வெளிப்பாட்டில் பெருமிதம் இருந்தது.

துறவி அவனுக்கு எந்தப் பதிலும் கூறாமல், அவருக்கு பக்கத்தில் இருந்த ஒரு மரத்தின் அடிப்பாகத்தை, தன் கைவிரல் நகத்தால் கீறி விடத் தொடங்கினார்.

பல மணி நேரம் கடந்தும் துறவி, மரத்தை         கீறியபடியே இருந்தார். பொறுமை இழந்த செல்வந்தன், ‘சுவாமி! தாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டான்.

அதற்கு அவர், ‘என் கை நகத்தால் இந்த மரத்தை வெட்டி சாய்க்கப் போகிறேன்’ என்றார்.

‘சுவாமி! அது எப்படி சாத்தியமாகும்? மிகப்       பெரிய மரத்தை நகத்தால் கீறி சாய்க்க முடியுமா? கோடரியால் தான் வெட்டி சாய்க்க முடியும்’ என்றான் செல்வந்தன்.

இப்போது துறவி பதிலளித்தார். ‘ஒரு நாளைக்கு  ஒரு கைப்பிடி அரிசியை மட்டும் தானமாக வழங்கிவிட்டு, நீ மோட்சம் பெற முடியும் என்று எண்ணுகிறபோது, இதுவும் சாத்தியம்தான்’ என்றார்.

செல்வந்தன் வெட்கி தலைகுனிந்தான். அன்று முதல் தெளிவு பெற்று, ஆன்மிக சிந்தனையோடு, அனைவருக்கும் தாராளமாக தன் செல்வங்களை எடுத்து தான, தர்மங்கள் செய்யத் தொடங்கினான்.

Next Story