கைவிட வேண்டிய பொறாமை


கைவிட வேண்டிய பொறாமை
x
தினத்தந்தி 6 Jan 2017 5:30 AM IST (Updated: 5 Jan 2017 7:58 PM IST)
t-max-icont-min-icon

இல்லாமை, கல்லாமை, அறியாமை போன்ற துன்பம் தரும் ஆமைகளில், பெரும் தீங்கை தரும் ஆமை பொறாமையாகும்! இந்த பொறாமை வஞ்சக எண்ணத்தினால் ஏற்படுகிறது. உலக உண்மைகளைப் புரியாத வர்கள் பொறாமை என்ற நெருப்பில் விழுந்து விடுகிறார்கள்.

ல்லாமை, கல்லாமை, அறியாமை போன்ற துன்பம் தரும் ஆமைகளில், பெரும் தீங்கை தரும் ஆமை பொறாமையாகும்!

இந்த பொறாமை வஞ்சக எண்ணத்தினால் ஏற்படுகிறது. உலக உண்மைகளைப் புரியாத வர்கள் பொறாமை என்ற நெருப்பில் விழுந்து விடுகிறார்கள்.

நல்லறம் சார்ந்த வாழ்க்கையில் இருந்தும் பொறாமை மனிதனை புரட்டி போட்டுவிடுகின்றது; பொறாமைக்காரனின் நன்மைகள் கூட பொறாமையினால் அழிந்து போகின்றது என்பதை அண்ணலார் குறிப்பிடும்போது ‘நெருப்பு விறகை எரித்து கரித்து விடுவதைப் போன்று பொறாமை (என்ற நெருப்பு) நன்மைகளை அழித்து இல்லாமல் ஆக்கி விடுகின்றது’ என்றார்கள்.

பொறாமை கொள்வது என்பது தன்னைத்தானே அழிவில் போட்டு கொள்வதோடு,  அதனால் மற்றவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே தான் இறைவன் தனது திரு மறையில் இவ்வாறு பாதுகாவல் தேடச்சொல்கின்றான்:

‘‘இறைவா பொறாமைக்காரன் பொறாமைக் கொள்ளும் போது (ஏற்படும்) தீங்கைவிட்டும் (உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்)’’ (113:5).

பொறாமையின் காரணமாகவும், எப்படியாவது முன்னேற வேண்டும் என்ற அடிப்படையில் யாரை வேண்டுமானாலும் இடித்து தள்ளிவிட்டு சாதிக்க வேண்டும் என்று முயல் வதுதான் இன்று எங்கு பார்த்தாலும் குற்றங்கள் அதிகமாகிவிட்டது.

செல்வமும், செல்வாக்கும், அதிகாரமும், தவறான ஒன்றல்ல. ஆனால் அதனை நாம் நல்லவழியில் பெற வேண்டும். இல்லையென்றால் அது அழிவை கொண்டுவந்துவிடும்.

உலக இச்சைகள் யாவும் எதனால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது என்பதை அருள்மறை குர்ஆன் இவ்வாறு சுட்டிக் காட்டுகின்றது:

‘பெண்கள், ஆண்மக்கள், பொன், வெள்ளியினால் ஆன குவியல்கள், அடையாளமிடப்பட்ட குதிரைகள் (வாகனங்கள்), (ஆடு, மாடு, ஒட்டகம்) போன்ற கால்நடைகள், வேளாண்மை ஆகிய இச்சையூட்டும் (அம்சங்களை) நேசிப்பது மனிதர்களுக்கு அலங்காரமாக ஆக்கப்பட்டுள்ளது. இவை (யாவும்) உலக வாழ்வின் சுகப்பொருட்கள் ஆகும். ஆனால் ‘அல்லாஹ்’ அவனிடத்தில் தான் அழகிய தங்குமிடம் உள்ளது’ (திருக்குர்ஆன் 3:14)

இதில் கூறப்பட்டுள்ள அலங்காரப் பொருட்கள் அனைத்தும் பல்வேறு வடிவங்களாக காட்சி தந்தாலும், அவற்றின் மூலம் மண் என்பதை மறந்துவிடக்கூடாது. மண்ணில் இருந்து தான் பல வகை வடிவங்களாக இப்பொருட்களை இறைவன் மாற்றி தந்துள்ளான். மீண்டும் அவைகள் மண்ணாகி போகும். எனவே இப்பொருட்களின் மீது நமது கவனத்தை அதிகப்படுத்தாமல் அதனை படைத்த இறைவனிடத்திலே நிலையான தங்குமிடத்தை பெறவே இவ்வுலகில் நாம் பாடுபடவேண்டும். இந்தக்கருத்தையே இந்த வசனம் நமக்கு அறிவுறுத்தி தருகின்றது.

அழிந்து விடும் பொருட்களுக்காக ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ள கூடாது. இன்னும் அதனை அடைந்தவர்களை கண்டு பொறாமைப்படவும் கூடாது. பொறாமை என்பது மனிதர்களை கொல்லும் நஞ்சாகவே உள்ளது.

அத்தகைய பொல்லாங்கு மிக்க பொறாமையை யார் கைவிடுகிறார்களோ, அவர்கள் சொர்க்கவாதிகளாக மாறிவிடுகிறார்கள் என்பதற்கான வரலாற்று நிகழ்வு இது.

ஒரு அன்சாரி தோழர் ஒளூ (கை, கால், முகம் ஆகியவற்றை சுத்தம்) செய்துவிட்டு, நனைந்த தாடியுடன் தனது இடக்கையில் செருப்பை பிடித்தவராக வந்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்த அண்ணலார் தன் அருகிலிருந்த தோழர்களிடம் கூறினார்கள், ‘நீங்கள் சொர்க்கவாதியை காண விரும்பினால் அவரை பார்த்துக் கொள்ளுங்கள். அவர் ஒரு சொர்க்கவாதி ஆவார்’ என்றார்கள்,

அதனைக் கேட்ட அப்துல்லாஹ் இப்னு அமர் என்ற நபித்தோழர் ‘இத்தகைய பெரும் பாக்கியத்தை பெற அவர் எத்தகைய வணக்கம் புரிகிறார்’ என்பதை அறிய விரும்பினார்.

அதனால் அவரது அனுமதியோடு அவருடன் சில நாட்கள் தங்கி அவரை கவனித்து வந்தார். வழக்கமாக வணக்கத்தை தவிர சிறப்பான எந்த வணக்க வழிபாடுகளையும் அவரிடத்தில் காணமுடியவில்லை. எனவே அந்த அன்சாரி தோழரிடமே அவரது உயர் தகுதிக்கான காரணத்தை கேட்டபோது அவர் கூறினார், ‘நான் எந்த முஸ்லிம் மீதும் வஞ்சக எண்ணம் (கபடம்) வைப்பதில்லை. இன்னும் யாருக்காவது இறைவன் தனது பாக்கியத்தை (செல்வத்தை) அதிகம் அளித்திருந்தால் அதைக் கண்டு நான் பொறாமை கொள்வதுமில்லை. இது என் வழக்கத்தில் உள்ள ஒன்றாகும்’ என்றார்கள்.

அதுகேட்டு அப்துல்லாஹ் (ரலி), ‘இந்த வழக்கத்தின் காரணமாகவே நீர் சொர்க்கவாதி என்ற உயர்ந்த பாக்கியத்தை அடையப் பெற்றீர்’ என்றார்கள்.

பொறாமை தான் சொர்க்கத்தை அடைய பெரும் தடையாக உள்ளது என்பதை இதன் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.

அதிகமான வணக்க வழிபாடு புரிபவர்களை கண்டும், தர்மங்களை தாராளமாக செய்பவர்களை கண்டும், இதை விட அதிகமாக நானும் இறைவழியில் ஈடுபடுவேன் என பொறாமைப்படவே இஸ்லாம் அனுமதிக்கின்றது. கேடு விளைவிக்கும் பொறாமைகள் அனைத்தையும் கைவிடவே இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

அன்பை இதயத்தில் நிறைத்து விடும் போது பொறாமை என்பது இருந்த இடம் தெரியாமல் போய்விடுகின்றது. அன்பு அதிகமானால் எதற்கெடுத்தாலும் எதிர்த்து நிற்கும் தன்மை ஏற்படாது. இன்னும் பிறரிடத்தில் அதிக எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தாது.

மு. முகம்மது சலாகுதீன், ஏர்வாடி, நெல்லை மாவட்டம்.


Next Story