பைபிள் மாந்தர்கள் : 143. கானா திருமண மேற்பார்வையாளர்


பைபிள் மாந்தர்கள்  : 143. கானா திருமண மேற்பார்வையாளர்
x
தினத்தந்தி 3 Jan 2017 5:45 AM IST (Updated: 2 Jan 2017 6:25 PM IST)
t-max-icont-min-icon

ஒரு திருமணம் கலிலேயாவில் உள்ள கானா என்னும் கிராமத்தில் இருந்தது. இயேசுவின் தாய்க்கு அழைப்பு இருந்தது. அவர் இயேசுவையும், சீடர்களையும் அழைத்துக் கொண்டு நாசரேத்திலிருந்து ஐந்து மைல் தொலைவில் இருந்த கானாவை நோக்கி நடந்தார்கள்.

ரு திருமணம் கலிலேயாவில் உள்ள கானா என்னும் கிராமத்தில் இருந்தது. இயேசுவின் தாய்க்கு அழைப்பு இருந்தது. அவர் இயேசுவையும், சீடர்களையும் அழைத்துக் கொண்டு நாசரேத்திலிருந்து ஐந்து மைல் தொலைவில் இருந்த கானாவை நோக்கி நடந்தார்கள்.

திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. மக்கள் ஆடலும் பாடலுமாக திருமண அரங்கையே விழா மேடையாக்கிக் கொண்டிருந்தார்கள்.

அன்றைய நாட்களில் திருமண விழாக்களில் முக்கிய இடம் பிடிப்பது திராட்சை ரசம். இந்த திருமண விழாவிலும் சுவையான திராட்சை ரசம் பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது.

திருமண மேற்பார்வையாளர் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தார். திருமண விழாவில் ஏதேனும் குறை ஏற்பட்டால் அவருடைய தலை தான் உருளும் என்பதால் அவர் அனைத்தையும் பரபரப்புடன் கவனித்துக் கொண்டிருந்தார்.

திடீரென திருமண அரங்கில் சிறு சலசலப்பு.

‘இங்கே.. கொஞ்சம் திராட்சை ரசம் கொண்டு வாருங்கள்...’

‘திராட்சை ரசம் கேட்டேனே கிடைக்கவில்லையே’

ஆங்காங்கே குரல்கள் மெலிதாக எழ ஆரம்பித்தன. வீட்டின் பின் புறத்திலோ பணியாளர்கள் திகைத்துப் போய் கைகளைப் பிசைந்து கொண்டு நின்றிருந்தார்கள்.

பணியாளர்கள் நிற்கும் நிலைமையைப் பார்த்த இயேசுவின் தாய்க்கு ஏதோ பிரச்சினை என்பது புரிந்தது. எனவே அவர் களிடம் சென்று ‘என்ன பிரச்சினை? மக்கள் திராட்சை ரசம் கேட்கிறார்கள். நீங்கள் பரிமாறவில்லையே! செல்லுங்கள்’ என்றார்.

‘அம்மா, திராட்சை ரசம் தீர்ந்து விட்டது!’

‘என்ன ரசம் தீர்ந்து விட்டதா?’ மரியா மெலிதான அதிர்ச்சியுடன் கேட்டார்.  

‘ஆம் அம்மா, திடீரென சென்று ரசம் வாங்கி வரவும் முடியாது. நாங்கள் வாங்கி வரும் முன் விழா முடிந்து விடும்’ பணியாளனின் கண்களில் கண்ணீர்.

இவர்களுக்கு எப்படியாவது உதவவேண்டும் என்று மரியா முடிவெடுத்தார். தன் மகன் கடவுளின் வல்லமை பெற்றவர், அவர் நினைத்தால் எது வேண்டுமானாலும் நடக்கும் என அவர் நம்பினார். எனவே இயேசுவை அழைத்தார்.  

‘அம்மா அழைத்தீர்களா?’

‘ஆம்.. மகனே. திருமண விழாவில் ஒரு குறை’ இயேசு தாயின் முகத்தைப் பார்த்தார்.

‘திராட்சை ரசம் தீர்ந்து விட்டது’.

‘அம்மா, என்னுடைய நேரம் இன்னும் வரவில்லை’ இயேசு அன்னையின் காதுகளில் கிசுகிசுத்தார்.

மரியா வேலையாட்களை அழைத்தார்,

‘இதோ இவர் சொல்வதையெல்லாம் நீங்கள் செய்யுங்கள்’ இயேசுவைக் சுட்டிக் காட்டி சொன்னார்.

அவர்கள் இயேசுவை கேள்விப் பார்வை பார்த்தார்கள். இயேசுவின் கைகளில் ஒன்றும் இல்லை. விழாவில் திராட்சை ரசம் இல்லை. இவர்களுடைய வீடும் அருகில் இல்லை. இவர் எப்படி உதவ முடியும் என்ற கேள்வியே அனைவரின் பார்வையிலும்.

இயேசு சுற்றுமுற்றும் பார்த்தார். அங்கே ஆறு கற்சாடிகள் இருந்தன.

‘இதென்ன சாடிகள்?’ இயேசு கேட்டார்.

‘தூய்மைச் சடங்குகளுக்காக இதை இங்கே வைத்திருக் கிறோம். இப்போது இவற்றில் ஒன்றும் இல்லை’

‘இதில் எத்தனை குடம் தண்ணீர் பிடிக்கும்?’

‘ஒவ்வொன்றிலும் இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளும்’

‘சரி. இந்த ஆறு கற்சாடிகளிலும் தண்ணீர் நிறையுங்கள்’.

இயேசு சொல்ல, பணியாளர்களுக்கு மீண்டும் குழப்பம்.

ஆனாலும் ‘இவர் சொல்வதையெல்லாம் செய்யுங்கள்’ என்று மரியா சொல்லியிருந்தாரே. பணியாளர்கள் அவ்வாறே செய்தனர். மிக விரைவாக ஆறு கற்சாடிகளிலும் விளிம்பு வரை தண்ணீர் நிறைத்தார்கள்.

இயேசு சிறிது நேரம் கண்களை மூடி செபித்தார். பின் கைகளை நீட்டி அந்த சாடிகளை ஆசீர்வதித்தார்.

‘சரி.. இப்போது இதை மொண்டு பந்தி மேற்பார்வையாளனிடம் கொடுங்கள்’ இயேசு சொன்னார்.

‘என்ன சொல்கிறீர்கள்? எங்களுக்குத் தண்ணீருக்குத் தட்டுப்பாடு வரவில்லை. திராட்சை ரசம் தான் தீர்ந்து விட்டது’ பணியாளர்கள் மனதில் நினைத்தார்கள்.

ஆனாலும் இயேசு சொன்னபடியே தண்ணீரை அள்ளினார்கள், அதிர்ந்து போனார்கள். தண்ணீர் திராட்சை ரசமாய் மாறியிருந்தது.

பரபரப்புடன் பந்தி மேற்பார்வையாளரை நோக்கி ஓடினார் ஒரு பணியாளர்.

‘ஐயா... இ...இதோ திராட்சை ரசம்’

‘தி....திராட்சை ரசமா? அது தான் தீர்ந்து விட்டதே. எங்கிருந்து கிடைத்தது இது?’ ஆச்சரியத்துடன் கிசுகிசுப்பாய்க் கேட்டுக் கொண்டே பந்தி மேற்பார்வையாளன் அந்த திராட்சை ரசத்தைச் சுவைத்தான்.

‘ஆஹா... அருமையான ரசம்... அருமையான ரசம். எங்கே போய் வாங்கினீர்கள்? எங்கிருந்து கிடைத்தது?’

‘தண்ணீரிலிருந்து...’

‘தண்ணீரிலிருந்தா...? என்ன சொல்கிறாய்?’ மேற்பார்வையாளர் குழம்பினார்.

பணியாளர் நடந்ததை விளக்க அவர் வியந்து போய் நின்றார்.

‘எல்லோரும் நல்ல ரசத்தை முதலில் பரிமாறுவார்கள், இங்கே கடைசி வரை நல்ல ரசத்தை வைத்திருக்கிறார்கள் என எல்லோரும் பந்தி மேற்பார்வையாளரைப் பாராட்டினார்கள்.

இதுவே இயேசு செய்த முதல் புதுமை!

- சேவியர்

(தொடரும்)


Next Story