15. திருப்பாவை - திருவெம்பாவை


15. திருப்பாவை - திருவெம்பாவை
x
தினத்தந்தி 30 Dec 2016 10:51 PM IST (Updated: 30 Dec 2016 10:51 PM IST)
t-max-icont-min-icon

திருப்பாவை எல்லே! இளங்கிளியே இன்னம் உறங்குதியோ? சில்என்று அழையேன்மின் நங்கைமீர்! போதர்கின்றேன் வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும் வல்லீர்கள் நீங்களே! நானே தான்ஆயிடுக! ஒல்லைநீ போதாய், உனக்கென்ன வேறு உடையை! எல்லாரும் போந்தாரோ? போந்தா

திருப்பாவை

எல்லே! இளங்கிளியே இன்னம் உறங்குதியோ?
சில்என்று அழையேன்மின் நங்கைமீர்! போதர்கின்றேன்
வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும்
வல்லீர்கள் நீங்களே! நானே தான்ஆயிடுக!
ஒல்லைநீ போதாய், உனக்கென்ன வேறு உடையை!
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.


தோழியே! இனிக்கும் மொழி பேசும் இளங்கிளியே! இன்னுமா உறக்கம்? ‘சத்தமிட்டு அழைக்காதீர்கள், இதோ வந்து விடுகிறேன்’ என்று கூறிவிட்டு மீண்டும் படுக்கையில் படுத்து தூக்கத்தைத் தொடர்கிறாயே? உன் சாதுர்யமான பேச்சை நாங்கள் அறிவோம். ‘அப்படியானால் ஏன் என்னை எழுப்ப வந்தீர்
கள்?’ என்று கேட்பது புரிகிறது. நாங்கள் முன்னமே வந்து உனக்காகக் காத்திருக்க வேண்டுமா? எல்லோரும் வந்து விட்டார் கள். நீயே வெளியில் வந்து எண்ணிக் கொள். வலிமைமிகுந்த யானையைக் கொன்றவனும், எதிரிகளை போரில் வீழ்த்தும் வல்லமை கொண்டவனுமாகிய மாயக் கண்ணனை வணங்கிப் போற்றுவோம்.
நீ விரைந்து வருவாய்.

திருவெம்பாவை

ஓரொருகால் எம்பெருமான் என்று என்றே நம்பெருமான்
சீர்ஒருகால் வாய்ஓவாள் சித்தம் களிகூர
நீர்ஒருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்துஒருவர் ஆமாறும்
ஆர்ஒருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்
வார்உருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏர் உருவப் பூம்புனல்பாய்ந்து ஆடுஏலோர் எம்பாவாய்.


கச்சு என்ற மார்பு அணியினையும், அணிகலன்களையும் அணிந்து இருக்கும் இளம்பெண்களே! ஒரு பெண் தனித் திருந்து இறைவனை வழிபடுகிறாள். தன்னந்தனியாய் எம்பெருமானே என்று சொல்லிச் சொல்லி ஒருபொழு தும் ஓயாமல் அவன் புகழைப் பேசுகிறாள். மனம் மகிழ்ந்து அவளது கண்களில் இருந்து தாரை தாரையாய் நீர்வழிய, நிலத்தில் வீழ்ந்த வண்ணம் வணங்குகிறாள். எந்த தேவர்களையும் வணங்காமல் இறைவனிடம் மட்டுமே அவள் பித்தாகியிருக்கிறாள்.

அத்தகைய சிவனின் புகழை நாம் வாயாரப் பாடுவோம். புது நீர் நிறைந்த அழகான குளத்தில் நீராடி மகிழ்வோம்.

Next Story