பைபிள் மாந்தர்கள் : பேய் பிடித்த மனிதர்


பைபிள் மாந்தர்கள் : பேய் பிடித்த மனிதர்
x
தினத்தந்தி 27 Dec 2016 2:30 AM IST (Updated: 26 Dec 2016 3:17 PM IST)
t-max-icont-min-icon

‘ஒருவர் தம்முடைய மனைவியை ஏதாவது காரணம் காட்டி விலக்கி விடுவது முறையா?’ இயேசுவை நோக்கி சோதிக்கும் கேள்வி ஒன்றை பரிசேயர்கள் நீட்டினார்கள்.

‘ஒருவர் தம்முடைய மனைவியை ஏதாவது காரணம் காட்டி விலக்கி விடுவது முறையா?’ இயேசுவை நோக்கி சோதிக்கும் கேள்வி ஒன்றை பரிசேயர்கள் நீட்டினார்கள்.

‘படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள் ஆணையும், பெண்ணையும் படைத்து அவர்கள் துணையாக வாழவேண்டுமென்று தான் விரும்பினார். எனவே கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருப்பதே நல்லது’ என்று இயேசு சொன்னார்.

இதைக் கேட்டதும் பரிசேயர்கள் உள்ளுக்குள் குதூகலித்தார்கள். ஏனென்றால் அவர் சொன்னது மோசேயின்  கட்டளை ஒன்றுக்கு மாறானதாக இருந்தது.

‘போதகரே... நீர் சொல்வது மோசேயின் கட்டளைக்கு எதிராய் இருக்கிறதே. அவர் மண விலக்குச் சான்றிதழ் கொடுத்து திருமண பந்தத்தை முறித்து விடலாம் என்று சொல்லியிருக்கிறாரே’ என்று அவர்கள் கேட்டார்கள்.

‘உங்களுடைய கடின மனதைக் கண்டே மோசே அப்படிச் சொன்னார். ஆதியில் அப்படி இல்லை என்பதை நீங்கள் மறை நூலில் வாசித்ததில்லையா?. நான் உங்களுக்குச் சொல்வதைக் கவனமாய்க் கேளுங்கள். பரத்தைமையில் ஈடுபட்டதைத் தவிர வேறு எந்த காரணத்துக்காகவும் தன் மனைவியை விலக்கி விட்டு வேறு பெண்ணை மணப்பவன் எவனும் விபசாரப் பாவம் செய்கிறான்’ இயேசு தெளிவாய்ச் சொன்னார். பரிசேயர்கள் அகன்றார்கள்

இயேசு தொழுகைக்கூடம் ஒன்றிற்கு வந்தார்.

அங்கே இருந்த மக்கள் மோசேயின் சட்ட திட்டங்களையும், தோரா நூலையும் நன்கு அறிந்திருந்தவர்கள். அவர்கள் முன்னிலையில் வந்து நின்ற இயேசு, ஏட்டுச் சுருளை எடுத்து வாசித்தார்.

‘ஆண்டவரின் ஆவி என் மேலே... ஏனெனில் அவர் என்னை தேர்ந்தெடுத்திருக்கிறார். எளியோருக்கு நற்செய்தி சொல்லவும், சிறைப்பட்டோர் விடுதலை அடைவர் என அறிவிக்கவும், குருடருக்குப் பார்வை வழங்கவும், இதயம் நொறுங்குண்டவர்களைத் தேற்றவும், ஆண்டவரின் அருள் தரும் ஆண்டினை பிரகடனப்படுத்தவும் அவர் என்னை ஏற்படுத்தினார்’ இயேசு சொல்ல மக்கள் கூட்டம் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தது.

இயேசுவின் போதனைகள் அதிலிருந்து ஒரு புது பரிமாணத்தை அடைந்தன. கடவுள் தம்முடன் நேரடியாகப் பேசும் பரவச உணர்வுடன் பலரும் அவருடைய போதனைகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

இயேசுவும் அந்த எளிய மக்களோடு உரையாடுகையில் பழைய சட்ட புத்தகங்களில் புரிந்து கொள்ள முடியாத பகுதி களை வாசித்துச் செல்லும் வழக்கமான மத போதகராக இருக்கவில்லை. அவர் தன்னுடைய சிந்தனைகளை, கருத்துக்களை சொல்வதற்கு கதைகளைத் தேர்ந்தெடுத்தார்.

அவர் தேர்ந்தெடுத்த கதைகளும் மக்களின் அன்றைய தொழில் சார்ந்த கதைகளாக இருந்தன. அவருடைய போதனைகள் கூர்மையாகவும், நேர்மையாகவும், சுவையாகவும் இருந்ததால் மக்கள் கூட்டம் அவற்றை எளிதில் உள்வாங்கிக் கொண்டது.

ஆலயம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. இயேசு போதித்துக் கொண்டிருந்தார்.

திடீரென ஒரு கதறல் ஒலி அந்த அமைதிக் கூடாரத்தைச் சத்தத்தால் நிறைத்தது.

எல்லோரும் குரல் வந்த திசையில் பார்த்தனர். அங்கே கூட்டத்தின் நடுவே பேய் பிடித்த ஒருவர் கத்திக் கொண்டிருந்தார். அவரை அந்த கூட்டத்தில் இருந்த பெரும்பாலான மக்களுக்குத் தெரிந்திருந்தது. அவர் சாத்தானின் பிடியில் சிக்கியிருந்தவர்.

அந்நாட்களில் பேய் பிடித்திருப்பது என்பதையும், நோய் பிடித்திருக்கிறது என்பதையும் பாவத்தின் பரிசுகளாகத் தான் மக்கள் பார்த்தார்கள். அவர்களோடு நெருங்கிப் பழகுவது சாத்தானோடு நெருங்கிப் பழகுவது போல என்று நம்பியதால், மக்கள் அவர்களை விட்டு விலகியே இருந்தார்கள். இப்போது அவர் ஆலயத்துக்குள் தைரியமாய் நுழைந்து கூட்டத்தினரிடையே புகுந்து களேபரம் செய் கிறான்.

இயேசு அவரைப் பார்த்தார். அவருடைய பார்வையைத் தாங்க முடியாத அந்த பேய் பிடித்தவன் அலறினான்.

‘நசரேயனாகிய இயேசுவே... ஏன் எங்களை நசுக்கப் பார்க்கிறீர்?’

இயேசு மீண்டும் அவனை உற்றுப்பார்த்தார். பேய்பிடித்தவர் தொடர்ந்து கத்தினார்.

‘வேண்டாம். உமக்கும் எனக்கும் இடையே தகராறு எதற்கு. என்னை என் வழியில் விட்டு விடுங்கள். என்னை நசுக்க வேண்டாம். நீர் யார்? என்பதை நான் அறிவேன். நீர் கடவுளின் மகன்’.

‘நீர் கடவுளின் மகன்’ என்று பேய்பிடித்தவன் அலறியதைக் கேட்ட கூட்டத்தினர் திகிலும், திகைப்பும் அடைந்தனர். அதுவரை மக்கள் அவரைக் கடவுளின் மகன் என்று உரக்கக் கூறியதில்லை. பேய் பிடித்தவன் கத்தியதும் மக்களிடையே பெரும் சலசலப்பு.

‘பேசாதே... இவனை விட்டு அகன்று போ. அவனை நிம்மதியில் இருக்க விடு’ இயேசு பேயை அதட்டினார்.

இயேசுவின் கட்டளையைக் கேட்ட பேய் அந்த மனிதனை கூட்டத்தினரிடையே தள்ளி விட்டு பெரும் கூச்சலுடன் வெளியேறியது.

பேய் நீங்கிய மனிதன் தான் ஒரு கூட்டத்தின் நடுவில் நிற்பதையும், எல்லோரும் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதையும் கண்டு குழப்பமடைந்தான்.

‘பேய்களுக்குக் கூட கட்டளையிடும் இவர் உண்மையிலேயே கடவுளின் மகன் தான்’ கூட்டத்தினர் பலர் அதிசயித்தனர்.

இயேசு தொடர்ந்து மக்களுக்குப் போதித்தார். மக்களோ சற்று முன் நடந்த நிகழ்ச்சியின் பாதிப்பிலிருந்து விடுபட முடியாதவர்களாக விழித்தனர்.

Next Story