ஜென் கதை : உள்ளத்தில் இருக்கும் புத்தன்


ஜென் கதை : உள்ளத்தில் இருக்கும் புத்தன்
x
தினத்தந்தி 20 Dec 2016 7:00 AM IST (Updated: 19 Dec 2016 4:59 PM IST)
t-max-icont-min-icon

புகழ்பெற்ற ஞானி ஒருவர் இருந்தார். அவர் பெயர், இக்கியு. கண் மூடி தியானத்தில் இருந்த அவரிடம் ஒருவர் வந்தார். ‘சுவாமி! சுருக்கமான ஞான மொழி ஒன்றைக் கூறுங்கள்’ என்றார். உடனே ஞானி, ‘பார்!’ என்ற சொல்லை மட்டும் ஒரு காகிதத்தில் எழுதிக் கொடுத்தார்.

புகழ்பெற்ற ஞானி ஒருவர் இருந்தார். அவர் பெயர், இக்கியு. கண் மூடி தியானத்தில் இருந்த அவரிடம் ஒருவர் வந்தார்.

‘சுவாமி! சுருக்கமான ஞான மொழி ஒன்றைக் கூறுங்கள்’ என்றார்.

உடனே ஞானி, ‘பார்!’ என்ற சொல்லை மட்டும் ஒரு காகிதத்தில் எழுதிக் கொடுத்தார்.

ஞான மொழியைத் தேடி வந்தவருக்கு ஏமாற்றம். ‘என்ன சுவாமி! இவ்வளவுதானா? இன்னும் ஏதாவது எழுதிச் சேர்க்கலாமா?’ என்று கேட்டார்.

ஞானி மீண்டும் அந்த காகிதத்தை வாங்கி, ‘பார், பார்’ என்று இரு முறை எழுதிக்கொடுத்தார்.

வந்தவருக்கு பெரிய ஏமாற்றம். ‘சுவாமி! இதில் விசேஷம் எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இதற்கு என்ன அர்த்தம் சுவாமி?’ என்றார்.

ஞானியோ, ‘பார்!’ என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

‘பார்த்தல்’ என்பது ஜென் மதத்தின் மையம். எது ஒன்றுக்கும், முன்னே, பின்னே, உள்ளே, வெளியே என்று பல கோணங்கள் உண்டு. அதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்பதே இதன் பொருள்.

அரசன் ஒருவனுக்கு ஞானம் பெற வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. அவன் உடனடியாக குருமார்களைத் தேடி அலையத் தொடங்கினான். அதில் அவனுக்கு மனநிறைவு ஏற்படவில்லை. ஒரு நாள் தனது குதிரையில் மனம் போன போக்கில் சுற்றத் தொடங்கினான். ஒரு மலைக் குகையில் மெய்ஞான குரு ஒருவரைச் சந்தித்தான்.

குருவை வணங்கிய மன்னன், அவர் முன்பாக அமர்ந்தான். ஆனால் குருவோ கண் மூடி தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அவர் கண் விழிப்பார் என்று காத்திருந்த மன்னனுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. பல மணி நேரம் கடந்தும், ஞானி கண் திறக்கவில்லை.

இறுதியாக தானே பேசி விடுவது என்று முடிவு செய்து, ‘சுவாமி! நான் ஞானத்தை அடைய வேண்டும். புத்தர் போல் ஆக வேண்டும்’ என்று தனது கோரிக்கையை முன் வைத்தான்.

குரு கண் விழித்தார்.

அரசன் ஏறி வந்த குதிரையை உற்றுப் பார்த்தார். பிறகு, ‘குதிரையைத் தேடாமல், எதற்காக ஞானத்தைத் தேடி வந்தாய்?’ என்று கேட்டார்.

மன்னனுக்கு குழப்பம், ‘சுவாமி! என்னிடம் குதிரை இருக்கிறது? அதோ பாருங்கள்’ என்று குதிரையைச் சுட்டிக்காட்டினான்.

குரு லேசாக புன்னகைத்தபடி, ‘நீ ஏன் குதிரையைத் தேடிப் பிடிக்கக் கூடாது?’ என்றார்.

மன்னனுக்கு கடுமையான கோபம் வந்தது. ‘என்ன சுவாமி! விளையாடுகிறீர்களா? என்னிடம் தான் குதிரை இருக்கிறதே! அதில்தானே ஏறி வந்தேன். பிறகு எதற்காக நான் மறுபடியும் குதிரையை தேட வேண்டும்’ என்றான்.

சிறிது நேரம் சிரித்தபடியே இருந்தவர், பிறகு எழுந்து குகைக்குள் சென்று விட்டார்.

ஞானியின் உபதேசம் முடிந்து விட்டது.

அதாவது தன்னிடம் இருக்கும் குதிரையை எப்படி, மன்னனால் தேட முடியாதோ, அதே போல்தான் ஒவ்வொரு மனிதனுமே புத்தனாக, ஞானம் உடையவனாக இருக்கும்போது, வெளியில் போய் ஞானத்தையும் தேட முடியாது. அவனுக் குள்தான் தேடிக்கொள்ள வேண்டும்.

Next Story